தமிழக அரசியல் வரலாற்றில், அ.தி.மு.க-விலிருந்து முக்கிய நிர்வாகிகள் ஆளுங்கட்சியான தி.மு.க-விற்கு செல்வது என்பது ஒரு வழக்கமான போக்காகிவிட்டது. கடந்த சில ஆண்டுகளாக, அ.தி.மு.க-வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல்கள் மற்றும் தலைமை பிரச்சினைகள் காரணமாக பல மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களும் தி.மு.க. பக்கம் சாய்ந்துள்ளனர். இது அ.தி.மு.க-விற்கு பின்னடைவாக பார்க்கப்பட்டாலும், இந்த கட்சித் தாவல்கள் தமிழக அரசியல் களத்தில் பெரிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தவில்லை.
கடந்த சில மாதங்களில், அ.தி.மு.க.வில் இருந்து மனோஜ் பாண்டியன், வி. மைத்ரேயன், மருது அழகுராஜ், அன்வர் ராஜா, தோப்பு வெங்கடாசலம், தங்கத்தமிழ் பாண்டியன் போன்றோர் தி.மு.க-வில் இணைந்தனர். எனினும், ஊடகங்களில் இந்த இணைவுகள் அனைத்தும் ஒரு சாதாரண செய்தியாகவே அல்லது அதிகபட்சம் ஒருநாள் தலைப்பு செய்தியாகவோ மட்டுமே பார்க்கப்பட்டன.
அதுமட்டுமின்றி, தற்போது தி.மு.க. அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் செந்தில் பாலாஜி, சாத்தூர் ராமசந்திரன், எஸ். ரகுபதி, அனிதா ராதாகிருஷ்ணன், ஆர்.எஸ். கண்ணப்பன், பி.கே. சேகர்பாபு, எஸ். முத்துசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், ஈ.வி. வேலு போன்ற முன்னாள் அ.தி.மு.க. தலைவர்கள் தி.மு.க-விற்கு சென்று அங்கே உயர் பதவிகளை வகித்தபோதும், அந்த நிகழ்வுகளும் தமிழக அரசியலில் பெரிய பரபரப்பை ஏற்படுத்தவில்லை. இந்த கட்சி மாற்றங்கள் வழக்கமான ஒரு நிகழ்வாக பார்க்கப்பட்டன.
இந்த சூழலில்தான், அ.தி.மு.க-வின் மூத்த தலைவரும், கொங்கு மண்டலத்தின் முக்கிய ஆளுமையுமான கே.ஏ. செங்கோட்டையன், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த சம்பவம், ஒட்டுமொத்த தமிழக அரசியல் களத்தையும் உலுக்கியுள்ளது. அ.தி.மு.க-வின் ‘பெரும்படை’ தி.மு.க-வை நோக்கி வந்தபோது வராத பதற்றம், செங்கோட்டையன் ஒருவர் மட்டும் த.வெ.க-விற்கு சென்றதால் ஏற்பட்டுள்ளது. இந்த நிகழ்வு, தமிழக அரசியலில் விஜய் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்ற அரசியலின் புதிய தத்துவத்தை நிரூபித்துள்ளது.
செங்கோட்டையனின் இந்தத் திடீர் முடிவு, அ.தி.மு.க. தலைமைக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதுடன், த.வெ.க.வை ஒரு மாற்று அரசியல் சக்தியாக மற்ற கட்சிகளும் அங்கீகரிக்க தொடங்கிவிட்டதை காட்டுகிறது. இதன் காரணமாகவே, பா.ஜ.க.கூட செங்கோட்டையனை நம் கட்சிக்குள் சேர்த்திருக்கலாமே என்று நினைக்கும் அளவுக்கு, விஜய்யின் கட்சியே ஒரு மைய ஈர்ப்பு சக்தியாக மாறிவிட்டது. மேலும், ஈபிஎஸ் தலைமையில் எந்த எதிர்காலமும் இல்லை என்ற முடிவுக்கு அனுபவ அரசியல்வாதிகள் வந்துவிட்டதையே செங்கோட்டையனின் தாவல் உறுதிப்படுத்துகிறது.
த.வெ.க-வில் இணைந்த செங்கோட்டையனுக்கு நடிகர் விஜய் அளித்த முக்கியத்துவம், மற்ற கட்சிகளை மேலும் கலக்கமடைய செய்துள்ளது. இந்த அங்கீகாரம், அ.தி.மு.க-வில் இருக்கும் மற்ற அதிருப்தி தலைவர்களுக்கும் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. செங்கோட்டையன் தனது இணைவோடு நிற்காமல், அ.தி.மு.க-விலிருந்து இன்னும் பல முக்கிய பிரபலங்களையும் த.வெ.க-விற்கு அழைத்து வருவார் என்ற பேச்சு தமிழக அரசியலில் எழுந்துள்ளது. இத்தகைய நகர்வுகளே, இந்த ஒரு கட்சி மாற்றத்தை ஒரு வரலாறு காணாத பரபரப்பான ஒரு வார தலைப்பு செய்தியாக நீடிக்க செய்து, விஜய்யின் அரசியல் ஆளுமையை பதிவு செய்துள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
