அ.தி.மு.க.வின் மூத்த தலைவரும், கொங்கு மண்டலத்தின் முக்கிய ஆளுமையுமான செங்கோட்டையன், அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டதால், தமிழக வெற்றி கழகத்தில் இணைந்திருக்கும் சம்பவம், தமிழக அரசியல் வட்டாரத்தில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவமும், நான்கு முதல்வர்களுக்கு விசுவாசமாக செயல்பட்ட வரலாறும் கொண்ட ஒரு சீனியரை அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கையாண்ட விதம், அவரது தலைமை பண்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. செங்கோட்டையனின் இந்த நகர்வு, அ.தி.மு.க. தலைமையின் பிடிவாத போக்கிற்கு பாடம் கற்பிக்கும் முயற்சி என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
செங்கோட்டையனின் அரசியல் அனுபவம், எடப்பாடி பழனிசாமியை விட மிக மூத்தது. அ.தி.மு.க.வின் நிறுவனர் எம்.ஜி.ஆர். கட்சி தொடங்கியதிலிருந்தே அவருடன் பயணித்தவர் செங்கோட்டையன். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, குறுகிய காலம் முதல்வராக இருந்த ஓ. பன்னீர்செல்வம், மற்றும் இறுதியாக எடப்பாடி பழனிசாமி என நான்கு முதல்வர்களின் அமைச்சரவையில் பல்வேறு காலகட்டங்களில் முக்கிய பொறுப்புகளை வகித்தவர் இவர். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தங்கள் தலைமையின் கீழ் அதிருப்தி கொண்ட மூத்த தலைவர்களைக்கூட சமாதானப்படுத்தி, அரவணைத்து சென்றதாலேயே அ.தி.மு.க. கட்டுக்கோப்புடன் திகழ்ந்தது. ஆனால், பழனிசாமி தலைமையில் அரவணைக்கும் பண்பு குறைந்து, அதிரடி நீக்கங்கள் மட்டுமே நடைபெறுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
செங்கோட்டையன், பிரிந்து சென்ற ஓ.பி.எஸ்., டி.டி.வி. தினகரன் உள்ளிட்டோரை மீண்டும் இணைக்க வேண்டும் என்று பகிரங்கமாக வலியுறுத்தினார். இது, கட்சியை வலுப்படுத்த வேண்டும் என்ற அவரது நீண்டகால அனுபவத்தின் வெளிப்பாடு. ஆனால், இந்த ஆலோசனையை ஏற்றுக்கொள்வதற்கு பதிலாக, எடப்பாடி பழனிசாமி செங்கோட்டையனை அதிரடியாக கட்சியிலிருந்து நீக்கினார். இந்த நடவடிக்கை, ஒரு மூத்த தலைவரை மதிக்க தவறியதுடன், அ.தி.மு.க.வின் எதிர்கால நலனுக்காக யோசிக்கும் குரலை நசுக்குவதாகவும் அமைந்தது. இவ்வளவு மூத்த தலைவரை ஈ.பி.எஸ். தொட்டிருக்கக் கூடாது என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
பழனிசாமியின் இந்த தனிப்பட்ட பிடிவாதம், செங்கோட்டையன் போன்ற விசுவாசிகளுக்கு விரக்தியை ஏற்படுத்தி, புதிய தலைமையிடம் தங்கள் அனுபவத்தைப்பயன்படுத்தலாம் என்ற முடிவுக்கு இட்டு சென்றுள்ளது. ஒரு தேசிய கட்சியான பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்தும், பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பிற கட்சிகளைக்கூட தங்கள் பக்கம் இழுக்க முடியாமல் ஈ.பி.எஸ். தடுமாறும் நிலையில், மூத்த தலைவரை அரவணைத்து செல்லத் தெரியாத தலைமை, வெற்றிகரமான ஒரு கட்சியை எப்படி வழிநடத்தும் என்ற கேள்வியை செங்கோட்டையனின் இந்த விலகல் எழுப்பியுள்ளது.
செங்கோட்டையன், புதிய அரசியல் களத்தை தேடி விஜய்யின் த.வெ.க.வில் இணைந்திருப்பது, எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு நேரடியான அரசியல் பாடம் கற்பிக்கவே என்று கருதப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் அவருக்கு இருக்கும் செல்வாக்கு, 2021-ல் அ.தி.மு.க.வுக்கு வெற்றியை தேடித் தந்த அதே மண்டலத்தில், த.வெ.க.வுக்கு வாக்குகளை பிரிக்கும் வல்லமை கொண்டது. இதுவே எடப்பாடிக்கு செங்கோட்டையன் கொடுக்கும் முக்கியப் பாடமாக இருக்கும்.
எடப்பாடி பழனிசாமியின் அரசியல் பிடிவாத போக்குதான் 2021 சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியை இழந்ததற்குக் காரணம் என்ற விமர்சனம் உள்ளது. அதே பிடிவாதத்தை இப்போதும் கடைப்பிடித்து, செங்கோட்டையன் போன்ற அனுபவம் வாய்ந்த ஆளுமைகளை வெளியேற்றுவது, 2026 சட்டமன்ற தேர்தலில் கட்சிக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று அரசியல் நோக்கர்கள் எச்சரிக்கின்றனர். 2021-ல் பிடிவாதத்தால் ஆட்சியை இழந்தவர், அதே பிடிவாதத்தால் 2026-ல் கட்சியையும் இழப்பாரோ என்ற அச்சம் அ.தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகளிடையே எழுந்துள்ளது. செங்கோட்டையனின் த.வெ.க. பிரவேசம், எடப்பாடி பழனிசாமிக்கு விடுக்கப்பட்ட ஒரு கடுமையான எச்சரிக்கை மணியாக ஒலிக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
