தமிழ்நாட்டில் திராவிடக் கட்சிகளின் பிடி மிகவும் வலிமையானதாக இருக்கும் சூழலில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மாநில அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்து வருகிறது. குறிப்பாக, அ.தி.மு.க.வின் மூத்த தலைவர்களை தன்பக்கம் இழுப்பது, மற்றும் அதன் கூட்டணியை நிர்ணயிக்கும் சக்தி ஆகியவை தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் பெரும் சவாலாக மாறியுள்ளது. வட இந்தியாவில் கூட்டணி அமைத்து வெற்றியை அறுவடை செய்த பா.ஜ.க.வின் வியூகம், தமிழ்நாட்டின் தனித்துவமான அரசியல் களத்தில் எடுபடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
உள்துறை அமைச்சரும் பா.ஜ.க.வின் முக்கிய வியூக வகுப்பாளருமான அமித்ஷா, பீகார் போன்ற வட மாநிலங்களில் பல்வேறு சிறு கட்சிகளை ஒருங்கிணைத்து, சமூக பிரிவுகளை சமன்படுத்தி வெற்றிகரமான தேசிய ஜனநாயக கூட்டணியை உருவாக்கினார். ஆனால், அதே ஃபார்முலா தமிழ்நாட்டில் பலிக்காது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
தமிழ்நாடு திராவிட கட்சிகளின் ஆழமான அரசியல் பாரம்பரியம் கொண்டது. இங்குள்ள மக்கள் தேசிய கட்சிகளின் தலைமையில் உருவாகும் கூட்டணியை அவ்வளவு எளிதில் ஏற்பதில்லை. அ.தி.மு.க.வில் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்கினால், ஓ.பி.எஸ்., தினகரன் போன்றோரை ஒருங்கிணைப்பதில் சிக்கல் நீடிக்கிறது. இந்த குழுக்களை பா.ஜ.க.வால் நேரடியாக ஒருங்கிணைக்க முடியவில்லை.
செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைவர்கள் அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு, த.வெ.க.வில் இணைவது, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தலைமை தாங்கும் அ.தி.மு.க.வின் பலவீனத்தை வெளிப்படுத்துகிறது. அமித்ஷாவின் ராஜதந்திரம், இந்த குழுக்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர தற்போது வரை தடுமாறி வருவதாக கூறப்படுகிறது.
அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர், பா.ஜ.க.வின் சாணக்கியர் என்று அறியப்பட்டவர். ஆனால், த.வெ.க. தலைவர் விஜய் வெறும் அரசியல் ஆலோசகரோ அல்லது சாணக்கியரோ அல்ல; அவர் ஒரு மக்கள் செல்வாக்குமிக்க தலைவர். பிரசாந்த் கிஷோர் தனது ஆலோசனைகள் மூலம் கட்சிகளின் பிம்பத்தை உருவாக்கினார். ஆனால், விஜய், தன் தனிப்பட்ட வெகுஜன ஈர்ப்பு மற்றும் ரசிகர் பட்டாளத்தின் வலிமையை கொண்டு, திராவிடக் கட்சிகளுக்கு ஒரு புதிய மாற்று அடையாளத்தை உருவாக்க முயற்சிக்கிறார்.
செங்கோட்டையன் போன்ற மண்டல தலைவர்கள் த.வெ.க.வில் இணைவது, வெறும் ஆலோசனை உத்தியால் நடக்கவில்லை, மாறாக விஜய்யின் அரசியல் நோக்கத்தின் மீது அவர்களுக்கு உள்ள நம்பிக்கையின் வெளிப்பாடு. இது த.வெ.க.வை வெறும் தேர்தல் இயந்திரமாக இல்லாமல், மக்கள் இயக்கமாக மாற்றுகிறது.
த.வெ.க.வின் எழுச்சி, திராவிடக் கட்சிகள் தங்கள் கூட்டணி பலத்தின் மீதிருந்த நம்பிக்கையைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ளது. அ.தி.மு.க. மற்றும் அதன் பிளவுபட்ட குழுக்கள் இணைந்து , பா.ம.க., தே.மு.தி.க. போன்ற பிற மண்டல கட்சிகளுடன் த.வெ.க. கூட்டணி அமைக்கும் பட்சத்தில், திராவிட கட்சிகளுக்கு எதிரான வாக்குகள் சிதறாமல் ஓரிடத்தில் குவிய வாய்ப்புள்ளது.
செங்கோட்டையனின் இணைவு, த.வெ.க. கூட்டணி அமைக்கும் முயற்சியின் முதல் ஆட்டமாக பார்க்கப்படுகிறது. இனிவரும் நாட்களில், தென் மண்டல தலைவர்கள், வடக்கு மண்டல செல்வாக்கு கொண்ட கட்சிகள் மற்றும் பிற சிறிய சமூக கட்சிகள் ஆகியவை விஜய்யின் பக்கம் அணி திரள வாய்ப்புள்ளது. த.வெ.க. தலைமையில் ஒரு வலுவான மண்டல கட்சிகளின் கூட்டணி உருவானால், அது தமிழகத்தில் முதன்முறையாக திராவிடக் கட்சிகளின்றி ஒரு மூன்றாவது அணியை உருவாக்கி, 2026 சட்டமன்ற தேர்தலில் அரசியல் சமன்பாடுகளையே மாற்றியமைக்கும் சக்தியாக மாறும்.
தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக ஒரு புதிய தலைமை வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறார்கள். விஜய்யின் அரசியல் வருகை, அந்த எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.
பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயக கூட்டணியின் பீகார் ஃபார்முலா தமிழ்நாட்டில் பலிக்காத நிலையில், உள்ளூர் மக்கள் செல்வாக்கு மற்றும் மண்டல கூட்டணிகளின் பலத்துடன் உருவாகும் த.வெ.க., தமிழக அரசியலின் போக்கை தீர்மானிக்கும் சக்தியாக மாறும் என்பதில் சந்தேகமில்லை.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
