கோபிசெட்டிபாளையத்தின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த செங்கோட்டையன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் கட்சியில் இணைவது, தமிழக அரசியல் களத்தின் மிக முக்கியமான நிகழ்வாக பார்க்கப்படுகிறது. சுமார் 52 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட செங்கோட்டையனின் இந்த நகர்வுக்கு பின்னால் இருக்கும் கணக்கையும், இதனால் விஜய்க்கு ஏற்படும் ஆதாயங்கள் என்ன என்பதையும் விரிவாக காணலாம்.
செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கையும், அவரது இந்த திடீர் முடிவும், தனிப்பட்ட செல்வாக்கு மற்றும் அரசியல் வெற்றி என்ற இரண்டு அம்சங்களை சுற்றியே அமைந்துள்ளது. கோபிசெட்டிபாளையம் தொகுதியில் ஒன்பது முறை போட்டியிட்டு எட்டு முறை வெற்றி பெற்றவர் செங்கோட்டையன். தொடர்ந்து எம்.எல்.ஏ.வாகவும், நான்கு முறை அமைச்சராகவும் பதவி வகித்த அவர், அடுத்த தேர்தலிலும் வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வாக நீடிக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார்.
சேலத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு இருந்த ஆதிக்கம் போல, ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் அதாவது ஈரோடு, ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு, கோபிசெட்டிபாளையம், பவானிசாகர், மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க.வின் வெற்றிக்கு செங்கோட்டையனே மிக முக்கிய காரணமாக இருந்தார். அ.தி.மு.க. தலைமையின் நீக்கத்திற்கு பிறகு, தான் தனித்து நின்றாலும் கணிசமான வாக்குகளை பெற முடியும் என்று நம்பும் செங்கோட்டையன், தனது செல்வாக்கை இழக்காமல், விஜய்யின் ஓட்டு சதவீதத்தை இணைத்துக்கொண்டு ஈரோடு மாவட்டத்தில் மீண்டும் முழு அதிகாரத்தை நிலைநாட்டவே த.வெ.க.வை நோக்கி நகர்ந்துள்ளார். இங்கு விஜய் மீதுள்ள பாசத்தை விட, ஒரு அரசியல்வாதியாக தனது எதிர்கால வெற்றி கணக்கை மட்டுமே அவர் முன்னிலைப்படுத்தியுள்ளார்.
அ.தி.மு.க.வின் ‘இரட்டை இலை’ சின்னத்திற்கே சுமார் 50-60% வாக்குகள் கிடைக்கும் ஒரு பகுதியில், செங்கோட்டையனின் தனிப்பட்ட செல்வாக்கால் அந்த வாக்குகளை த.வெ.க.வுக்குத் திசை திருப்ப முடியுமா என்பதே அவருக்கு உள்ள சவால். அது முடியாவிட்டால், இந்த நகர்வு இரு தரப்புக்கும் பாதகமாக அமையக்கூடும். இருப்பினும், செங்கோட்டையனின் வருகை, த.வெ.க. தலைவர் விஜய்க்கு உழைப்பில்லாமல் ‘லட்டு’ போல கிடைத்த ஒரு பெரிய அரசியல் வெற்றியாக பார்க்கப்படுகிறது.
தற்போது ரசிகர்கள் மன்றம் போன்ற மனநிலையில் இருக்கும் த.வெ.க.விற்கு, தமிழகத்தின் கள அரசியலை ஆழமாக அறிந்த, 50 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் கொண்ட செங்கோட்டையன் பக்கபலமாக அமைந்து, யதார்த்தமான அரசியல் அறிவுரைகளை வழங்குவார். இது தனியொரு பிம்பத்தை கொண்டே அரசியல் நடத்தி வந்த விஜய்க்கு ஒரு பெரிய பலமாகும். மேலும், கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், நாமக்கல், கரூர், நீலகிரி உள்ளிட்ட கொங்கு மண்டலத்தின் சுமார் 60 சட்டமன்ற தொகுதிகளின் முக்கிய பொறுப்பை செங்கோட்டையன் கையில் ஒப்படைப்பதன் மூலம், அந்த பகுதிகளில் கட்சி பலம் பெறும்.
“தி.மு.க.வா? அல்லது த.வெ.க.வா?” என்ற பிம்ப அரசியலை விஜய் முன்னிறுத்தி வரும் நிலையில், எம்.ஜி.ஆரின் விசுவாசியும், பழுத்த அரசியல்வாதியுமான செங்கோட்டையன் இணைவது, “தி.மு.க.வை வீழ்த்தக்கூடிய சக்தி த.வெ.க.வுக்குத் தான் உள்ளது” என்ற பிம்பத்தை மக்களிடையே வலுவாக கொண்டுசெல்ல உதவும். அ.தி.மு.க.வை கண்டு கொள்ளாமல், உண்மையான எதிர்க்கட்சி தாங்கள்தான் என்று விஜய் கட்டமைக்க முயலும் பிம்பத்திற்கு இது பெரும் பலம் சேர்க்கும். மேலும், அரசியல் அனுபவம் இல்லாத த.வெ.க. நிர்வாகிகளுக்கு, மாவட்ட செயலாளர்கள் முதல் கள அரசியல் வரை எப்படி செயல்பட வேண்டும் என்ற அமைப்பு ரீதியான பயிற்சியும் இவரால் கிடைக்கும்.
செங்கோட்டையனால் கிடைத்த இந்த ஆதாயம், த.வெ.க.வின் எதிர்கால தேர்தல் அரசியலில் ஒரு முக்கியமான துவக்கமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. இருப்பினும், செங்கோட்டையனின் அனுபவத்தை விட, அ.தி.மு.க.வின் இரட்டை இலை சின்னத்திற்கான விசுவாசத்தை அவரால் எவ்வளவு நகர்த்த முடியும் என்பதே இறுதி கணக்காக இருக்கும். இதுதான் வரவிருக்கும் தேர்தலின் முக்கியமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
