தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் நடிகர் விஜய், தன் தொண்டர்களிடையே நடத்திய சமீபத்திய உரையாடல் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கான கூட்டணி வியூகம் குறித்து பேசியதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் உலா வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்த விஜய்யின் கருத்துக்கள், தமிழக அரசியல் களத்தில் எதிரணிக்கு ஒரு பெரிய அதிர்ச்சியை அளிக்கும் வகையில் அமைந்துள்ளன.
சமீபத்தில் விஜய் தனது நிர்வாகிகளிடம் தனிப்பட்ட முறையில் பேசியபோது கூட்டணி குறித்து சில முக்கிய தகவல்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது. விஜய், காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை கிட்டத்தட்ட முடிவான ஒன்றாகவே தன் நிர்வாகிகளிடம் பேசியதாக தெரிகிறது. அவரது பேச்சு, த.வெ.க.வின் அரசியல் நிலைப்பாடு மற்றும் எதிர்காலத் திட்டங்களை மிகவும் தெளிவாக வெளிப்படுத்துவதாக உள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸின் நிலைப்பாடு, குறிப்பாக தமிழகத்தில் ஒரு புதிய கூட்டணி தலைமைக்கு இருக்கும் வாய்ப்புகள் குறித்து விஜய் நம்பிக்கையுடன் பேசியுள்ளார். காங்கிரஸ், திராவிட கட்சிகளின் பிடியில் இருந்து விடுபட நினைக்கிறது என்றும், அதற்கு த.வெ.க. ஒரு புதிய மாற்றுச் சக்தியாக தெரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் கட்சி, தற்போது திமுக கூட்டணியில் இருந்தாலும், கூட்டணிக்கான பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்திருந்தாலும், வரும் நாட்களில் கூட்டணி மாறும் என்ற அழுத்தமான தகவலை அவர் நிர்வாகிகளிடம் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. திமுகவுடனான பேச்சுவார்த்தைகள் அனைத்தும் ஒரு ஃபார்மாலிட்டிதான் என்றும், அவர்களின் கவனம் முழுவதும் த.வெ.க. மீதே உள்ளது என்றும் நிர்வாகிகளிடம் நம்பிக்கை அளித்துள்ளார்.
தேசிய அரசியலில் ஆளுமை செலுத்தும் ஒரு முக்கியமான தலைவரான பிரியங்கா காந்தி மூலமாகவே இந்த கூட்டணி குறித்த சில உறுதிப்படுத்தல்கள் கிடைத்துள்ளதாகவும், அதன் மூலம் கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்ற தகவலையும் விஜய் மறைமுகமாக நிர்வாகிகளிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
கூட்டணிக் குழப்பங்கள் குறித்து நிர்வாகிகள் கவலைப்பட வேண்டாம் என்று அறிவுறுத்திய விஜய், அவர்களின் முழுக்கவனமும் அடிப்படை மக்கள் பணியிலும், கட்சியின் கட்டமைப்பிலும் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் என்பது தலைமையின் வேலை என்றும், அதன் முடிவுகள் வெளியாகும் நேரத்தில் தொண்டர்கள் தேர்தல் களத்தில் முழுமையாக தயாராக இருக்க வேண்டும் என்றும் விஜய் கூறியதாக தெரிகிறது. ரசிகர் மன்றமாக இருந்த தன்னுடைய அன்புக்குரியவர்களை இப்போது ஒரு அரசியல் கட்சி தொண்டர்களாக மாற்றியிருப்பதால், சினிமா கவர்ச்சிக்கு அப்பால் மக்கள் நலப் பணிகளைச் செய்வதும், அரசியல் ரீதியாக அவர்களை சென்றடைவதுமே இப்போதைய முக்கியமான வேலை என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.
விஜய்யின் பேச்சில் மிக முக்கியமான அம்சம், அவருடைய அரசியல் எதிரிகள் யார்? என்பதை மிகவும் கூர்மையாக நிர்வாகிகளிடம் சுட்டிக்காட்டியதுதான். த.வெ.க.வின் லட்சியமே தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் திராவிடக் கட்சிகளின் ஆட்சி முறையை மாற்றுவதுதான் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
திமுக மற்றும் அதிமுக-வின் ஊழல், நிர்வாக சீர்கேடுகள், மற்றும் பழைய அரசியல் நடைமுறைகள் ஆகியவற்றை கேள்வி கேட்டு, புதிய, தூய்மையான அரசியலை தமிழக மக்களுக்கு தருவதே த.வெ.க.வின் நோக்கம் என்று கூறி, தொண்டர்களுக்குப் புதிய உத்வேகத்தைக் கொடுத்துள்ளார்.
கூட்டணி குறித்த கவலைகளை ஒதுக்கிவிட்டு, தொண்டர்கள் தீவிரமாக உழைத்தால், திராவிடக் கட்சிகள் என்ற இருபெரும் ஆளுமைகளையும் இந்த தேர்தலில் வீழ்த்த முடியும் என்று அவர் அழுத்தமாக கூறியிருப்பது, தொண்டர்கள் மத்தியில் பெரும் நம்பிக்கையையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
திமுக கூட்டணியில் இருக்கும்போதே, த.வெ.க.வுடன் இவ்வளவு உறுதியாக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது சாத்தியமா? ஒருவேளை, தேசிய அளவில் காங்கிரஸ் மேலிடம், தமிழகத்தில் திமுகவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட உண்மையிலேயே விரும்புகிறதா? என்ற கேள்வியை இது எழுப்பியுள்ளது.
திராவிடக் கட்சிகளை வீழ்த்துவது என்ற விஜய்யின் இலக்கு மிகவும் சவாலானது. அது ஒரே தேர்தலில் நடக்காது என்றாலும் படிப்படியாக நடக்க வாய்ப்பு உள்ளது. அதற்கு காங்கிரஸ் போன்ற ஒரு பெரிய கட்சியின் ஆதரவு கிடைத்தால், அது த.வெ.க.வின் ஆரம்ப வெற்றிக்கு மிகப்பெரிய ஊக்கத்தை கொடுக்கும்.
கூட்டணியை பற்றி பேசாமல் தொண்டர்களை பணியில் ஈடுபடுத்த சொல்வது, தான் தனித்து போட்டியிடவும் தயார் என்ற ஒரு தோற்றத்தை மற்ற கட்சிகள் மத்தியில் ஏற்படுத்தி, தன்னுடைய கட்சிக்கு அதிக இடங்களை தக்க வைத்து கொள்வதற்கான ஒரு ராஜதந்திர நகர்வாகவும் இருக்கலாம்.
மொத்தத்தில், நடிகர் விஜய்யின் இந்த கருத்துகள், த.வெ.க.வை ஒரு புதிய, தனித்துவமான அரசியல் சக்தியாக களத்தில் நிலைநிறுத்த அவர் எடுத்துள்ள முயற்சியை தெளிவாக உணர்த்துகிறது. இது வரும் தேர்தலில் கூட்டணி சமன்பாடுகளையும், திராவிடக் கட்சிகளின் எதிர்காலத்தையும் மாற்றி எழுத கூடிய ஒரு திருப்புமுனையாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
