இந்தியப் பொருளாதாரம் உலக அளவில் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக 202ஆம் ஆண்டுக்குள் உயரும் என IMF உள்ளிட்ட நிறுவனங்கள் கணித்துள்ள நிலையில், இந்த இலக்கை அடைய உள்நாட்டு கட்டமைப்பிலும், தொழிலாளர் நலனிலும் சீர்திருத்தங்கள் மேற்கொள்வது அத்தியாவசியமாகிறது. உள்ளூர் அரசியல் நகர்வுகளுக்கு பின்னால் எப்படி உள்நோக்கங்கள் உள்ளதோ, அதேபோல், தேசிய அளவில் மேற்கொள்ளப்படும் சட்ட திட்டங்களுக்குப் பின்னால் சர்வதேச அரசியல் காரணங்கள் உள்ளன.
கடந்த காலங்களில் அமெரிக்கா விதித்த வரியால் திருப்பூர் போன்ற பகுதிகளில் இத்தனை கோடி ரூபாய் இழப்பு, தொழிலாளர்களுக்கு பாதிப்பு என்ற செய்திகளை தொடர்ந்து பார்த்தோம். இது, நமது பொருளாதாரம் வெளிநாட்டு சந்தைகளை நம்பியிருக்கும் பலவீனத்தை உணர்த்தியது.
இந்தியாவின் அதிக மக்கள் தொகை மற்றும் குறிப்பாக தொழிலாளர் சக்தி இந்திய பொருளாதாரத்தின் மிக முக்கியமான பலமாக உள்ளது. உலக நாடுகள் பலவும் இந்திய தொழிலாளர்களை கொண்டே தங்கள் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியுள்ளன.
ஆனால் இனி வரும் காலங்களில், நமது இந்திய தொழிலாளர்களுக்கு உள்நாட்டிலேயே அனைத்து வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி, அவர்களை வெளிநாடுகளுக்கு செல்லாதவாறு பார்த்துக்கொள்வதே மத்திய மற்றும் மாநில அரசுகளின் நிலையான கொள்கையாக உள்ளது.
இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களில் இருந்த சிக்கல்களை களையவும், தொழில் செய்வதை எளிதாக்கவும் மத்திய அரசு நான்கு புதிய தொழிலாளர் சட்ட தொகுப்புகளை கொண்டு வந்துள்ளது. முன்னதாக இருந்த 29 தொழிலாளர் சட்டங்களை ஒருங்கிணைத்து இந்த நான்கு சட்ட தொகுப்புகளாக குறைக்கப்பட்டுள்ளது. இது GST-க்கு முன் இருந்த பல வரிகளை ஒருங்கிணைத்தது போன்ற நடவடிக்கையாகும்.
தொழிலாளர்களை மேம்படுத்துதல் மற்றும் தொழில் தொடங்குவதை சட்டரீதியாக எளிமையாக்குதல் ஆகிய இரண்டும் பிரதமர் மோடியின் சீர்திருத்தங்களின் நோக்கம் ஆகும். அந்த வகையில் நான்கு முக்கியச் சட்ட தொகுப்புகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
1. ஊதியக் குறியீடு (Code on Wages): குறைந்தபட்ச ஊதியம் மற்றும் உரிய நேரத்தில் ஊதியம் வழங்குவதை உறுதிப்படுத்துகிறது.
2. தொழில் உறவுகள் குறியீடு (Industrial Relations Code): தொழிற்சங்கங்கள், பணி நீக்கம் மற்றும் நிறுவனத்தை மூடுவது தொடர்பான விதிகளை முறைப்படுத்துகிறது.
3. சமூக பாதுகாப்புக் குறியீடு (Code on Social Security): தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியத்தை உறுதிப்படுத்துகிறது.
4. சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் குறியீடு (Code on Occupational Safety, Health and Working Conditions): பணியிடத்தில் தொழிலாளர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் வேலை சூழலை உறுதிப்படுத்துகிறது.
இந்த சட்டத் தொகுப்புகள் நடைமுறைப்படுத்தப்படுவதால் பல முக்கிய நன்மைகள் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும். விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை போல, தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் மற்றும் ஊதியத்தை உரிய நேரத்தில் வழங்குவது உறுதிப்படுத்தப்படும். தாமத ஊதியம் போன்ற முக்கிய பிரச்சினைகள் களையப்படும்.
பணியில் சேரும் ஒவ்வொரு தொழிலாளருக்கும் பணி நியமன ஆணை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண் மற்றும் ஆண் தொழிலாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படுகிறது. அமைப்பு சாரா தொழிலாளர்கள் உட்பட சுமார் 40 கோடி தொழிலாளர்களுக்கான சமூக பாதுகாப்பு இதில் உறுதி செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்கள் ஓவர் டைம் பணி செய்தால், அவர்களுக்கு இரட்டிப்பு ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது. பணியிடங்களில், குறிப்பாக ஆபத்தான பணிகளில் ஈடுபடும் தொழிலாளர்களின் 100% ஆரோக்கிய பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.
அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் பணிபுரியும் திறமையான இந்தியர்கள் மீண்டும் தாய்நாடு திரும்பி தொழில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கை நிலவுகிறது. ஆனால், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன்வைத்த முக்கிய விமர்சனங்கள்:
இங்கு ஊழல், தொழில் தொடங்குவதில் உள்ள சிக்கல் , மாநில கமிஷன் போன்ற பல கட்டமைப்பு பிரச்சினைகள் உள்ளதாக குற்றம் சாட்டினர். நமது உள்நாட்டு தொழிலாளர்களுக்கு உரிய மரியாதையும், ஊதியமும் கிடைக்காததே அவர்கள் அரபு நாடுகள் போன்ற இடங்களுக்கு சென்று சித்திரவதைகளை சந்திக்க முக்கிய காரணம்.
இந்த புதிய நான்கு சட்டத் தொகுப்புகளும், வெளிநாடு வாழ் இந்தியர்கள் முன்வைத்த விமர்சனங்களில் குறிப்பிடப்பட்ட தொழிலாளர் பாதுகாப்பு மற்றும் தொழில் தொடங்குவதற்கான எளிமை ஆகியவற்றைச் சரி செய்வதற்கான முதல்படியாகவே பார்க்கப்பட வேண்டும்.
இந்த சீர்திருத்தங்கள், இந்திய தொழிலாளர்களின் பணி வாழ்க்கை தரத்தை சர்வதேச தரத்திற்கு இட்டு செல்லும் ஒரு முக்கியமான தொடக்கமாக இருக்கும். இந்த சட்டங்களை சரியாக அமல்படுத்துவதற்கு மத்திய அமைச்சகம் மாநில ரீதியாக மாதாந்திர முன்னேற்றத்தை கண்காணித்து, டிஜிட்டல் கண்காணிப்பு கட்டமைப்பையும் உருவாக்கியுள்ளது. இந்த சீர்திருத்தங்கள், இனி எந்த நாடாவது ‘டாரிஃப் போட்டுவிட்டு’, இந்தியத் தொழிலாளர்களை வெளியேற சொன்னால், “நான் என் நாட்டிற்கு செல்கிறேன்” என்று சொல்லக்கூடிய ஒரு எதிர்காலத்தை உருவாக்குவதற்கான அஸ்திவாரமாக அமைந்துள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
