அமெரிக்க அரசாங்கத்தின் செயல்திறனை அதிகரிப்பதற்காக அதிபர் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட ‘அரசுத் திறன் துறை’ (DOGE) அதன் காலக்கெடுவுக்கு 8 மாதங்கள் முன்னதாகவே அமைதியாக மூடப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் எலான் மஸ்க் தலைமை தாங்கிய இந்த முயற்சி, அவர் ஒருசில நாட்களில் இந்த துறையில் இருந்து வெளியேறிய நிலையில் தற்போது தோல்வியில் முடிந்து நிரந்தரமாக மூடப்பட்டது.
2025ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று நிர்வாக உத்தரவு மூலம் உருவாக்கப்பட்ட DOGE, 2 ட்ரில்லியன் டாலர் வரையிலான அரசாங்க செலவுகளைக் குறைத்து, வீண்விரயத்தை ஒழிப்பதாக உறுதியளித்தது. மஸ்க் மே 2025 இல் விலகுவதற்குள், DOGE சுமார் $214 பில்லியன் சேமிப்பை அடைந்ததாக கூறியது. இருப்பினும், இந்த கணக்குகள் மிகைப்படுத்தப்பட்டவை அல்லது ஆதாரமற்றவை என்று பல அறிக்கைகள் தெரிவித்தன.
விரைவான மற்றும் சீர்திருத்தங்கள் குறித்த மஸ்கின் பார்வை, டிரம்ப் அணுகுமுறைகளுடன் முரண்பட்டது. மேலும், ஒரு பெரிய நிதி மசோதா தொடர்பாக மஸ்கிற்கும் அதிபர் ட்ரம்பிற்கும் இடையே பொதுவெளியில் ஏற்பட்ட மோதல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. அதன் பிறகு மஸ்க் இந்த துறையை விட்டு வெளியேறினார்.
அரசாங்க நிறுவனங்களை கலைக்கவோ அல்லது பட்ஜெட் குறைப்புகளை அங்கீகரிக்கவோ காங்கிரஸுக்கு மட்டுமே அதிகாரம் உண்டு. DOGE-ன் செயல்பாடு நிர்வாக நடவடிக்கைகளுக்கு மட்டுமே கட்டுப்படுத்தப்பட்டதால், அதன் உண்மையான அதிகாரம் குறைவாகவே இருந்தது. பாரம்பரிய மத்திய நிறுவனங்களுடன் ஒருங்கிணைப்பதும் கடினமாக இருந்தது.
தற்போது DOGE-ன் செயல்பாடுகள் பணியாளர் மேலாண்மை அலுவலகம் மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகம் ஆகியவற்றுடன் இணைக்கப்பட்டுள்ளன. இதையெல்லாம் முன்பே கணித்துதான் இந்த துறையில் இருந்து ஆரம்பத்திலேயே விவேக் ராமசாமி விலகிவிட்டாரோ என்றும் எண்ண தோன்றுகிறது.
மொத்தத்தில் டிரம்பின் இன்னொரு தோல்வியாக இந்த DOGE கருதப்படுகிறது. இன்னும் 3 ஆண்டுகள் டிரம்ப் பதவியில் இருக்கவுள்ள நிலையில் என்னென்ன கூத்துகள் நடக்கும் என பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்,.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
