தர்மேந்திராவின் சகாப்தம் முடிந்தது.. அமிதாப் பச்சனின் முதல் படமான ‘ஷோலே’ முதல் அமிதாப்பின் பேரன் படம் வரை.. கண்ணீர் கடலில் பாலிவுட் திரையுலகம்..

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவரும், ‘ஹீ-மேன்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த…

dharmendra

பாலிவுட் திரையுலகின் ஜாம்பவானாக திகழ்ந்தவரும், ‘ஹீ-மேன்’ என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்பட்டவருமான மூத்த நடிகர் தர்மேந்திரா, தனது 89வது வயதில் இன்று காலமானார். அவரது மறைவு இந்திய திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாக உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த தர்மேந்திரா, இந்த மாத தொடக்கத்தில் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து, ஜூஹூவில் உள்ள அவரது இல்லத்துக்கு அழைத்து வரப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. டிசம்பர் 8ஆம் தேதி தனது 90வது பிறந்தநாளைக் கொண்டாட இருந்த நிலையில், இன்று சிகிச்சை பலனின்றி அவரது உயிர் பிரிந்தது.

தர்மேந்திரா 60 ஆண்டுகளுக்கும் மேலான திரை வாழ்க்கையில், 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பல்வேறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவரது முதல் திரைப்படம் 1960ஆம் ஆண்டு வெளியான ‘தில் பி தேரா ஹம் பி தேரே’ ஆகும்.

1964ஆம் ஆண்டு வெளியான ‘ஆயே மிலன் கி பேலா’ என்ற படத்தில் வில்லன் கேரக்டரில் நடித்ததன் மூலம் இவருக்கு பெரிய அங்கீகாரம் கிடைத்தது. அதே ஆண்டில் வெளியான தேசபக்தி திரைப்படமான ‘ஹகீகத்’ இவரது நடிப்பை மேலும் உறுதிப்படுத்தியது.

பாலிவுட் வரலாற்றில் என்றும் மறக்க முடியாத திரைப்படங்களான ‘ஷோலே’ இவரது புகழை உலகெங்கும் கொண்டு சேர்த்தன. இந்த படத்தில் தான் அமிதாப்பச்சன் நடிகராக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தர்மேந்திரா திரைத்துறையில் மட்டுமின்றி அரசியலிலும் கால் பதித்தார். 2004ஆம் ஆண்டு முதல் 2009ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் தொகுதியில் இருந்து பாஜக நாடாளுமன்ற உறுப்பினராகவும் பணியாற்றினார். இந்திய சினிமாவுக்கு அவர் அளித்த பங்களிப்பை போற்றும் வகையில், அவருக்கு 1997-ல் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபிக்கும் வகையில் தொடர்ந்து நடித்து வந்த தர்மேந்திரா, இறுதியாக ‘இக்கிஸ்’ (Ikkis) படத்தில் நடித்திருந்தார். ஸ்ரீராம் ராகவன் இயக்கும் இந்தப் படத்தில், அமிதாப் பச்சனின் பேரனான அகஸ்தியா நந்தா முக்கிய வேடத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அமிதாப் பச்சன், அபிஷேக் பச்சன் ஆகியோர் சிறப்பு தோற்றத்தில் நடித்த ஷாருக்கானின் ‘ஓம் சாந்தி ஓம்’ படத்தில் தர்மேந்திராவும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதே படத்தில் அமிதாப்பின் மருமகள் ஐஸ்வர்யா ராயும் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் மூலம் அமிதாப் முதல் அவரது பேரன் வரை ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 தலைமுறை நடிகர்களுடன் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

1970கள் மற்றும் 80களில் இவர் நடித்த ஆக்‌ஷன் படங்கள் பெரும் வெற்றி பெற்றன. இவரது கட்டுமஸ்தான தோற்றம் மற்றும் அதிரடி நடிப்புக்காகவே ரசிகர்கள் இவரை ‘ஹீ-மேன்’ என்று செல்லமாக அழைக்க தொடங்கினர். இவரது பிரபலமான ஆக்‌ஷன் திரைப்படங்களில் ‘ஜானி மேரா நாம்’, ‘ஆத்மி அவுர் இன்சான்’, ‘மேரா காவ்ன் மேரா தேஷ்’ ஆகியவை அடங்கும்.

அதேபோல, 1960களின் முற்பகுதியில் இவர் பெரும்பாலும் ரொமான்டிக் ஹீரோவாக கொண்டாடப்பட்டார். ‘அனுபமா’ மற்றும் ‘சத்தியகாம்’ போன்ற படங்களில் இவரது நடிப்பு ஆழமான உணர்வுகளை வெளிப்படுத்துவதாக இருந்தது.

நடிகை ஹேமமாலினியுடன் இணைந்து இவர் நடித்த பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. ‘ஷோலே’ மற்றும் ‘சீதா அவுர் கீதா’ இரண்டும் இவர்களது வெற்றி ஜோடியின் மைல்கற்கள். தர்மேந்திரா, ஹேமாமாலினியை 1980ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

இவருக்குப் பிறகு இவரது மகன்களான சன்னி தியோல் மற்றும் பாபி தியோல் ஆகியோரும் பாலிவுட்டில் முக்கிய நடிகர்களாக திகழ்ந்து, இவரது திரைப்பயணத்தை வெற்றிகரமாக தொடர்கின்றனர்.

பலமுறை சிறந்த நடிகருக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டாலும், அவரது கலைச் சேவைக்காக 1997 ஆம் ஆண்டில் ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.

இந்தியத் திரையுலகிற்கு இவர் ஆற்றிய அரும் பணிக்காக, 2012 ஆம் ஆண்டில் இந்திய அரசின் உயரிய விருதான பத்ம பூஷண் விருதை இவர் பெற்றார்.