சுதா கொங்கராதான் என் முதல் ஹீரோயின்.. அவரிடம் தான் முதலில் ரொமான்ஸ் வசனம் பேசினேன்.. பின்னாளில் அவர் இயக்கத்தில் ஒரு படம் நடித்தேன்.. ஆயுத எழுத்து படத்தில் சூர்யாவுக்கு பதில் நான் நடித்திருக்க வேண்டியது.. ரன் படமும் மிஸ் ஆனது.. ஸ்ரீகாந்த் தரும் ஆச்சரிய தகவல்..!

‘ரோஜா கூட்டம்’ திரைப்படம் மூலம் 2002ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமாகி, பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், தனது ஆரம்பகால திரைப் பயணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பல ஆச்சரியமூட்டும் தகவல்களை…

srikanth

‘ரோஜா கூட்டம்’ திரைப்படம் மூலம் 2002ஆம் ஆண்டு கதாநாயகனாக அறிமுகமாகி, பல வெற்றி படங்களில் நடித்த நடிகர் ஸ்ரீகாந்த், தனது ஆரம்பகால திரைப் பயணம் குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பல ஆச்சரியமூட்டும் தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில், அவர் தவறவிட்ட இரண்டு பிரம்மாண்ட திரைப்பட வாய்ப்புகள் குறித்தும், அவருக்கு காதல் வசனம் சொல்லி கொடுத்த பிரபல இயக்குநர் குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

ஸ்ரீகாந்த், தனது முதல் படமான ‘ரோஜா கூட்டம்’ வெளியாவதற்கு முன்பே, இயக்குநர் மணிரத்னம் அவர்களின் பிரம்மாண்ட படைப்பான ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் நடிப்பதற்காக அழைக்கப்பட்டாராம்.

இந்த படத்தில் முதலில் சூர்யா நடித்த வேடத்திற்கு நடிக்க ஸ்ரீகாந்த் பரிசீலிக்கப்பட்டதாகவும், பின்னர் சித்தார்த் நடித்த வேடத்தில் நடிக்க வைப்பதாக பேச்சுவார்த்தை நடந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த படத்தின் டெஸ்ட் படப்பிடிப்பின்போது கதாநாயகியிடம் காதலுடன் பேசும் ஒரு காட்சியில் நடித்து காட்டுமாறு ஸ்ரீகாந்த் கேட்கப்பட்டுள்ளார். அப்போது, மணிரத்னத்தின் உதவி இயக்குநராக இருந்த பிரபல இயக்குநர் சுதா கொங்கராவிடம் அந்த காதல் வசனத்தைப் பேசி காட்ட வேண்டிய நிலை வந்ததாம்.

“நான் சினிமாவில் முதன்முதலாக ஒரு பெண்ணிடம் காதல் வசனம் பேசியது சுதா கொங்கராவை பார்த்துத்தான். அந்த காட்சியின்போது அவர் அருகில் இருந்தார். அப்போது அவர் உதவி இயக்குநர்தான். அந்த வகையில், அவர்தான் என்னுடைய முதல் ‘காதல்’ ஹீரோயின். அவரிடம் தான் நான் முதன்முதலில் ரொமான்ஸ் வசனம் பேசினேன்,” என்று நெகிழ்ச்சியுடன் ஸ்ரீகாந்த் கூறியுள்ளார். இருப்பினும், சில காரணங்களால் ‘ஆயுத எழுத்து’ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு ஸ்ரீகாந்திற்கு இறுதி செய்யப்படவில்லை.

சுதா கொங்கராவிடம் காதல் வசனம் பேசும் வாய்ப்பு ‘ஆயுத எழுத்து’ படத்தில் கிடைத்தாலும், பிற்காலத்தில் அவர் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் ஒரு படத்தில் நடித்தார். சுதா கொங்கரா இயக்குநராக அறிமுகமான முதல் திரைப்படமான ‘துரோகி’ படத்தில் ஸ்ரீகாந்த், விஷ்ணு விஷால் இருவரும் கதாநாயகனாக நடித்திருந்தனர்.

விஷ்ணு விஷால் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர் இரட்டை கதாநாயகர்களாக நடித்த இந்த படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த படம்தான் சுதா கொங்கராவின் திறமையான இயக்கத்தின் ஆரம்ப புள்ளியாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம் பட வாய்ப்பு நழுவியது போலவே, மற்றொரு மாபெரும் வெற்றிப் படமான ‘ரன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்க இருந்த வாய்ப்பும் ஸ்ரீகாந்திற்கு சில தவிர்க்க முடியாத காரணங்களால் கைநழுவி போனதாக அவர் தெரிவித்துள்ளார். ‘ரன்’ திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் லிங்குசாமி, முதலில் ஸ்ரீகாந்தை தான் கதாநாயகனாக நடிக்க வைக்கக் கமிட் செய்திருந்தார். ஆனால் சில காரணங்களால் ‘ரன்’ படத்தில் இருந்து ஸ்ரீகாந்த் விலக நேரிட்டது. இதன் விளைவாக, அந்த வாய்ப்பு நடிகர் மாதவனுக்கு சென்றது. மாதவன் நடித்த ‘ரன்’ திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது.

வெற்றிகரமான பல படங்களில் நடித்திருந்தாலும், தனது சினிமா அறிமுகத்திற்கு முன்பே கிடைத்த இத்தகைய பெரிய வாய்ப்புகளை தவற விட்டது குறித்தும், பின்னாளில் தனது முதல் ‘காதல் ஹீரோயினாக’ இருந்த சுதா கொங்கராவின் இயக்கத்தில் நடித்தது குறித்தும் ஸ்ரீகாந்த் பகிர்ந்த ஆச்சரிய தகவல்கள் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.