தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் சமீபத்தில் நடத்திய மக்கள் சந்திப்பு நிகழ்வு, அவர் ஆட்சிக்கு வந்தால் நிறைவேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்ட சில அதிரடி வாக்குறுதிகளால் தமிழக அரசியல் களத்தில் புயலைக் கிளப்பியுள்ளது. ‘குடும்பத்துக்கு ஒரு வீடு’, ‘அனைவருக்கும் வேலைவாய்ப்பு’, ‘வீட்டுக்கு ஒரு பைக்’ போன்ற வாக்குறுதிகள், தமிழகத்தின் பொருளாதார நிலை மற்றும் திராவிட கட்சிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளன.
விஜய் தனது முதல் கட்ட வாக்குறுதிகளை, தமிழகத்தின் மிக முக்கியமான மூன்று அடிப்படை தேவைகளை மையமாகக் கொண்டு அறிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு வீடு என்பதை முக்கிய இலக்காக அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்குவது என்பது இரண்டாவது முக்கிய வாக்குறுதியாகும்.
ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வழங்கப்படும் என்ற அறிவிப்பு, மிகவும் கவனத்தை ஈர்த்த அறிவிப்பாக உள்ளது.
ஒவ்வொரு வீட்டிலும் பட்டதாரிகள் இருப்பதை உறுதி செய்வதுடன், அவர்கள் சம்பாதிப்பதற்கான உள்கட்டமைப்பு மற்றும் சாதகமான சூழலை உருவாக்குவதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த வாக்குறுதிகள், அடித்தட்டு மக்களின் அடிப்படை தேவைகள் மற்றும் நவீன வாழ்க்கை முறைக்கான ஆசைகள் ஆகியவற்றை நேரடியாக தொடுவதாக உள்ளன.
தமிழகத்தின் தற்போதைய நிதி சூழ்நிலையைக் கருத்தில் கொள்ளும்போது, விஜய்யின் இந்த வாக்குறுதிகள் பெரும் பொருளாதார சவால்களை உள்ளடக்கியவை. தமிழக அரசு ஏற்கனவே சுமார் ₹8-9 லட்சம் கோடி கடன் சுமையில் உள்ளது. ஒவ்வொரு குடும்பத்துக்கும் வீடு’ என்பது மத்திய அரசின் திட்டங்களாக ஏற்கனவே இருந்தாலும், அனைத்து குடும்பங்களுக்கும் தரமான வீடுகளை வழங்குவதற்கும், ‘வீட்டுக்கு ஒரு பைக்’ போன்ற திட்டங்களுக்கும் லட்சக்கணக்கான கோடி ரூபாய் நிதி தேவைப்படும்.
அனைவருக்கும் வேலைவாய்ப்பு உருவாக்குவது என்பது முதலீடுகள், புதிய தொழில்கள் மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம் மட்டுமே சாத்தியமாகும். இதற்கு ஒரு பெரிய மூலதனம் தேவை. விஜய்யின் திட்டங்கள் பெரிய முதலீடுகளை கோருகின்றன. தமிழ்நாட்டின் நிதி சூழலை மேம்படுத்துவதற்கும், இந்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான நிதி ஆதாரங்களை எப்படி பெருக்க போகிறார், அல்லது எங்கிருந்து திரட்டப் போகிறார் என்ற தெளிவான வரைபடம் இன்னும் வெளியிடப்படவில்லை.
ஆளும் திமுக அரசின் முக்கிய திட்டங்களில் ஒன்றான மகளிருக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை திட்டம் குறித்த விஜய்யின் பார்வை, அவர் ஆட்சிக்கு வந்தால் என்னவாகும் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. விஜய், ரூ.1,000 உதவித்தொகைக்காக மாநில அரசு மாதந்தோறும் ரூ.1,400 கோடி செலவழிக்கிறது என்றும், இந்த தொகையை நிறுத்தினாலே போதும், விஜய்யின் வீடு, பைக், வேலைவாய்ப்பு திட்டங்களை விரைவில் நிறைவேற்றிவிடலாம் என்றும் ஒரு கருத்து உள்ளது.
விஜய் அறிவித்த அதிரடி வாக்குறுதிகள், திமுக மற்றும் அதிமுக போன்ற பிரதான கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளிலும் எதிரொலிக்க அதிக வாய்ப்புள்ளது. இதற்கு முன்னர், விஜயகாந்த் வீட்டுக்கே ரேஷன் பொருட்கள் வழங்கும் திட்டம் போன்ற பல நல்ல திட்டங்களை அறிவித்தார். அவை அவருக்கு வெற்றி வாய்ப்பை வழங்காவிட்டாலும், பின்னாளில் ஆளும் கட்சிகளால் பின்பற்றப்பட்டன. அதேபோல, மகளிருக்கு மாதம் ரூ.1000 திட்டம் என்பது மக்கள் நீதி மய்யம் கமல்ஹாசனின் திட்டம், அதை திமுக காப்பி அடித்தது. அதேபோல் விஜய்யின் ‘வீட்டுக்கு ஒரு பைக்’ அல்லது ‘அனைவருக்கும் வேலைவாய்ப்பு’ போன்ற திட்டங்களை,அதிமுக, திமுக தேர்தல் வெற்றி வாய்ப்புக்காக தங்களது வாக்குறுதிகளாக அறிவிக்கலாம். இதன் மூலம், விஜய் ஒரு நல்ல தொலைநோக்குத் திட்டங்களை முன்வைத்தாலும், அவற்றை ஆளும் கட்சிகள் நிறைவேற்றி அரசியல் ஆதாயம் தேட வாய்ப்புள்ளது.
தற்போது வெளியிட்டுள்ள வாக்குறுதிகள் வெறும் முன்னோட்டமே. விஜய்யின் முழுமையான தேர்தல் அறிக்கை, பின்வரும் முக்கிய அம்சங்களை வலியுறுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை, அனைத்து மட்டங்களிலும் ஊழலை ஒழிக்கக் கடும் நடவடிக்கைகள் மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாடு, தரமான இலவச கல்வி, தொழில் சார்ந்த திறன் மேம்பாடு மற்றும் மாணவர்களை வேலைக்குத் தயார் செய்யும் பாடத்திட்டங்கள் ஆகியவைகளுக்கு விஜய் முக்கியத்துவம் அளிக்கலாம்.
கடன் சுமையை குறைக்கவும், அரசின் வருமானத்தை பெருக்கவும் புதிய நிதி சீர்திருத்தங்கள், குறிப்பாக கனிமவள கொள்ளை போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை தடுப்பதன் மூலம் வருமானத்தை அதிகரிப்பது. நகர்ப்புற மற்றும் கிராமப்புற உள்கட்டமைப்பை மேம்படுத்துதல், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களைச் சீரமைத்தல் குறித்து அவர் எழுப்பிய விமர்சனங்கள் விஜய்யின் தேர்தல் அறிக்கையில் இடம்பெறலாம்.
விஜய்யின் அரசியல் வருகை தமிழக அரசியலில் ஒரு புதிய மாற்றுக்கான விவாதத்தை உருவாக்கியுள்ளது. அவரது தேர்தல் அறிக்கையின் இறுதி வடிவம் வெளிவரும்போதுதான், இந்த கனவு திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கான துல்லியமான அணுகுமுறை என்ன என்பது தெளிவாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
