ஜீரோ To ஹீரோதொடங்கி முதலீட்டில் வரலாற்று சாதனை.. தலைநகர் இல்லாமல் ஒரு மாநிலம் இவ்வளவு பெரிய வளர்ச்சி அடைந்தது எப்படி? வரலாறு காணாத வகையில் குவியும் அந்நிய முதலீடு.. இதற்கெல்லாம் ஒரே மேஜிக் சந்திரபாபு நாயுடு.. தலைநகர் இல்லாமல் தலைநிமிர்ந்த ஆந்திரா..!

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சமீபகாலத்தில் சந்திக்காத ஒரு சவாலை ஆந்திரப் பிரதேசம் சந்தித்து இன்று இந்தியாவில் எந்த மாநிலமும் பெற முடியாத முதலீடுகளை குவித்து வருகிறது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரிய மாநிலங்கள்…

andhra pradesh

இந்தியாவில் வேறு எந்த மாநிலமும் சமீபகாலத்தில் சந்திக்காத ஒரு சவாலை ஆந்திரப் பிரதேசம் சந்தித்து இன்று இந்தியாவில் எந்த மாநிலமும் பெற முடியாத முதலீடுகளை குவித்து வருகிறது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரிய மாநிலங்கள் பலவற்றுக்கு ஏற்கனவே பல ஆண்டு கால தலைநகரங்கள், கட்டமைக்கப்பட்ட வணிகச் சூழல் உள்ளன. உதாரணமாக பெங்களூரு, சென்னை, ஹைதராபாத், மும்பை போன்ற பெருநகரங்கள் இயல்பாகவே முதலீடுகளை ஈர்க்கும் காந்தங்களாக இருக்கின்றன.

ஆனால், ஆந்திரப்பிரதேசத்தின் கதை முற்றிலும் வேறுபட்டது. மாநில பிரிவினைக்கு பிறகு, ஆந்திரா தனது பொருளாதார இயந்திரம், தொழில்நுட்ப மையம், தகவல் தொழில்நுட்ப சக்தி மையம் மற்றும் திறமைகளை ஈர்க்கும் மையமாக விளங்கிய ஹைதராபாத்தை ஒரே இரவில் இழந்தது. பிரிக்கப்படாத மாநிலத்தில் கூட, தற்போதைய ஆந்திரப் பிரதேசத்தின் பல தொழில் வளங்களும், திறமை ஆதாரங்களும் ஹைதராபாத்தில் மட்டுமே குவிந்திருந்தன என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

பிரிவினைக்கு பிறகு, ஆந்திராவிடம் தலைநகரம் இல்லை; கட்டமைக்கப்பட்ட தொழில்நுட்ப சூழல் இல்லை; ஒரு சில அடுக்கு 2 நகரங்கள் மட்டுமே இருந்தன. ஒரு மாநிலத்தை ஆரம்பத்திலிருந்து கட்டியெழுப்ப வேண்டிய மாபெரும் சவால் மட்டுமே இருந்தது.

இருப்பினும், இந்த ‘பூஜ்ஜியத்தில்’ இருந்து தொடங்கியபோதிலும், பெங்களூரு, சென்னை, ஹைதராபாத் போன்ற ஜாம்பவான்களுடன் போட்டியிட்ட போதிலும், ஆந்திரப் பிரதேசம் சமீபகாலத்தில் இந்தியாவின் மிகப்பெரிய முதலீட்டு மையமாக உருவெடுத்துள்ளது. இதுவே இம்மாநிலம் அசாதாரணமானது என்பதை உணர்த்துகிறது.

ஆம், ஆந்திரப் பிரதேசம் இன்று இந்தியாவில் மிகப்பெரிய முதலீடுகளை ஈர்க்கும் சொர்க்கமாக மாறி உள்ளது. இன்று ஆந்திராவுக்கு நிரந்தர தலைநகரோ அல்லது பெரிய வணிகச்சூழலோ இல்லை. அமராவதியில் தலைநகரை இப்போதுதான் கட்டியெழுப்பி வருகிறது. அங்கு ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, தலைநகரை கட்ட சர்வதேச மூலதனங்களை நாடி வருகிறது.

இந்த ‘ஆரம்ப நிலையில்’ இருந்தபோதிலும், ஆந்திராவில் முதலீடுகள் வெள்ளம்போல் குவிந்து வருகின்றன. அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, கடந்த 16 மாதங்களில் மட்டும் 400க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்கள் முதலீடுகளை அறிவித்துள்ளன. 613க்கும் மேற்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கடந்த 1.5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 10.5 லட்சம் கோடி மதிப்பிலான முதலீடுகளை ஆந்திரா ஈர்த்துள்ளது.

ஹைதராபாத், பெங்களூரு, சென்னை போன்ற பெருநகரங்களுக்கு அருகில் இருந்தபோதிலும் முதலீட்டாளர்கள் ஆந்திராவை ஏன் தேர்ந்தெடுத்துள்ளனர்? இதுதான் மற்ற மாநிலங்களின் மில்லியன் டாலர் கேள்வி. அதற்கு ஒரே ஒரு பதில் ஆந்திராவின் விதியை மாற்றி எழுதும் சந்திரபாபு நாயுடு என்ற ஒருவரே. கடந்த 2024-ல் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, சர்வதேச முதலீட்டாளர்களின் கவனம் ஆந்திராவை நோக்கி திரும்பியுள்ளது. தொழில்நுட்ப ஜாம்பவானான கூகுள் மட்டும் விசாகப்பட்டினத்தில் $15 பில்லியன் மதிப்பிலான பிரம்மாண்டமான டேட்டா சென்டர் திட்டத்தை அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் 1 ஜிகாவாட் டேட்டா சென்டர் மற்றும் 6 ஜிகாவாட் சூரிய மின்சக்தி திட்டங்களை அறிவித்துள்ளது. அதானி குழுமம் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, துறைமுகங்கள் மற்றும் தளவாடங்கள் உட்பட பல்வேறு துறைகளில் சுமார் ரூ. 1 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது.

ஆர்சிலர் மிட்டல் + நிப்பான் ஸ்டீல் இணைந்து $17 பில்லியன் மதிப்பிலான மெகா ஸ்டீல் ஆலையை ஆந்திராவில் அமைக்க தேர்ந்தெடுத்துள்ளனர். பல மாநிலங்களை பரிசீலித்த பின்னரே ஆந்திராவை தேர்ந்தெடுத்துள்ளனர்.

சிங்கப்பூர் அரசாங்கம் நகர மேம்பாடு, நிர்வாகம், விமான போக்குவரத்து சேவைகள் ஆகியவற்றில் ஒத்துழைக்க ஒப்பந்தம் செய்துள்ளது. ரேமண்ட் குழுமம் ஜவுளி, ஆட்டோ பாகங்கள் ஆகியவற்றில் ரூ. 1,200 கோடிக்கும் அதிகமான திட்டங்களை அறிவித்துள்ளது. இந்த முதலீடுகள் மூலம் லட்சக்கணக்கான புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த வேகத்தை கருத்தில் கொண்டு, 2029 ஆம் ஆண்டிற்குள் $1 டிரில்லியன் முதலீடுகளை ஈர்ப்பதே ஆந்திராவின் இலக்கு என்று தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ் அறிவித்துள்ளார்.

வாரிசு அரசியலை நாம் விமர்சித்தாலும், மூத்த தலைவர் சந்திரபாபு நாயுடு மற்றும் அவரது மகன் நாரா லோகேஷ் ஆகியோரின் இணைந்து செயல்படும் உத்தி, ஆந்திராவை முதலீட்டு மையமாக மாற்றியுள்ளது. ஆந்திராவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தான 15 முதல் 20 நாட்களுக்குள் நிறுவனங்களுக்கு நிலம் ஒதுக்கப்படுவதாக கூறப்படுகிறது. இது நிலம் கையகப்படுத்தல் குறித்த நாட்டின் மிகப்பெரிய தடையை நீக்குகிறது. அனைத்து பணிகளும் ஒரே ஒருங்கிணைந்த அமைப்பின் மூலம் விரைவுபடுத்தப்படுகின்றன; இதனால் கோப்புகளுக்காக அலுவலகம் அலைய வேண்டியதில்லை. விரைவாக முதலீடு செய்பவர்களுக்கு சிறந்த சலுகைகளை வழங்கும் ‘ஆரம்ப கால சலுகை திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ஸ்டான்ஃபோர்ட் பட்டதாரியான அமைச்சர் நாரா லோகேஷ், பெருநிறுவனங்களின் மொழி மற்றும் கவலைகளை புரிந்துகொண்டு விவாதங்களை முன்னெடுத்து செல்கிறார். இவர் ஒரு பாரம்பரிய அரசியல்வாதியாக இல்லாமல், ஆந்திரப்பிரதேசத்தின் தலைமை சந்தைப்படுத்தல் அதிகாரி போல செயல்படுகிறார்.

ஏற்கெனவே ஹைதராபாத்தை சைபராபாத்தாக உருவாக்கிய பெருமை சந்திரபாபு நாயுடுவுக்கு உண்டு. தற்போது மத்திய அரசில் அவரது கட்சி பங்குதாரராக இருப்பதால், மாநில – மத்திய அரசுகளின் ஒத்துழைப்பால் முதலீடுகள் தடையின்றி பாய்ந்து வருகின்றன.

தலைநகரை இழந்த நிலையிலும், பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்கியும், ஆந்திரப்பிரதேசம் இன்று இந்தியாவின் மிகப் பெரிய முதலீட்டு மையமாக மாறியுள்ளது இதுவே வரலாறு காணாத ஒரு சாதனை.