தமிழக அரசியல் களத்தில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் அரசியலுக்கான தனது அணுகுமுறையை மிக தெளிவாகவும், உறுதியாகவும் வரையறுத்துள்ளது. கட்சியின் முக்கிய வட்டாரங்களில் இருந்து கசியும் தகவல்களின்படி, விஜய் எந்தவிதமான பெரிய அல்லது சிறிய கூட்டணியிலும் சேராமல், வரவிருக்கும் தேர்தல்களை தனியாகவே எதிர்கொள்ள முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இந்த முடிவின் பின்னணியில், ஒரு நீண்டகால அரசியல் பார்வை மற்றும் ஒரு உறுதியான தார்மீக நிலைப்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது.
விஜய்யின் தனிப்பட்ட விருப்பம் மற்றும் அவரது தலைமை ஆலோசகர்களின் அறிவுரைகள், தவெக-வை திராவிட கட்சிகளின் பாரம்பரிய கூட்டணி அரசியலில் இருந்து விலக்கி வைத்திருக்கின்றன. நிராகரிக்கப்பட்டதாக கூறப்படும் முக்கிய கூட்டணிக் கட்சிகள் பின்வருமாறு:
அதிமுக – பாஜக கூட்டணி: இந்த கூட்டணியில் இணைவது, தவெகவின் புதிய அரசியல் மாற்றத்திற்கான அடித்தளத்தை வலுவிழக்க செய்யும் என்றும், தேசிய கட்சியின் ஆதிக்கத்திற்கு அடிபணிய நேரிடும் என்றும் விஜய் உறுதியாக நம்புகிறார்.
காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள்: தேசிய கட்சியான காங்கிரஸ் உடனான கூட்டணி, மாநில பிரச்சினைகளில் தனித்தன்மையைக் குறைக்கலாம். எனவே, திமுகவின் அணியில் இருக்கும் காங்கிரஸுடனும் கூட்டு சேர வேண்டிய அவசியமில்லை என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
அதிமுகவின் பிளவுபட்ட குழுக்கள்: ஓபிஎஸ், டிடிவி தினகரன், செங்கோட்டையன் போன்ற அதிமுகவின் பல்வேறு பிரிவுகளுடன் கூட்டணி வைப்பது, தவெகவின் நம்பகத்தன்மையை கேள்விக்குறியாக்கும். பிளவுபட்ட சக்திகளுடன் இணைவது, குழப்பமான அரசியல் பிம்பத்தை அளிக்கும் என்று தவெக கருதுகிறது.
பாமக, தேமுதிக: இந்தக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது, வாக்கு வங்கியை பகிர்வதோடு, தவெகவின் தனிப்பட்ட வளர்ச்சிக்கு தடையாக இருக்கும். மேலும், கொள்கை வேறுபாடுகளும் எழலாம். அதுமட்டுமின்றி இந்த கட்சிகளுக்கு பெரிய அளவில் வாக்கு சதவீதமும் இல்லை.
எனவே நமக்கு வெற்றியோ தோல்வியோ, அதுக்கு நம்ம பசங்க மட்டும்தான் காரணமா இருக்கணும். மற்ற கட்சிகளின் வெற்றிக்காக நாம் வேலை செய்ய வேண்டாம் என்பதே விஜய்யின் உறுதியான நிலைப்பாடாக கூறப்படுகிறது.
கூட்டணியை நிராகரித்ததன் மூலம், தவெகவின் பிரதான இலக்கு ஆளுங்கட்சியான திமுகவை மட்டுமே எதிர்க்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. அரசியல் களத்தில் திமுகவுக்கு எதிராக தனித்து நிற்பது, தவெக-வை ஒரு வலிமையான மாற்று சக்தியாக முன்னிறுத்தும். திமுகவின் நிர்வாகத் தவறுகள், ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் மட்டுமே தவெகவின் பிரதான விமர்சன பொருளாக இருக்கும்.
தனியாவே திமுகவை எதிர்ப்போம் என்ற முடிவு, தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் மாற்று அரசியல் பிம்பத்தை விஜய்க்கு ஏற்படுத்தும். இது நடுநிலை மற்றும் அதிருப்தி வாக்காளர்களை எளிதாக ஈர்க்கும். இந்த தனித்து போட்டியிடும் முடிவுக்கு பின்னால், ஒருவகையான தார்மீச் சமர்ப்பணமும், அரசியல் அவசரமின்மையும் இருப்பதாகத் தெரிகிறது.
நமக்கு வாய்ப்பு கொடுத்தால் மக்கள் சேவை செய்வோம். இல்லையேல் கடவுள் விட்ட வழி என்ற மனோபாவம், தவெகவுக்கு வெற்றி கிடைக்காவிட்டால் கூட, அது ஒரு அரசியல் தோல்வியாக கருதப்படாது என்பதை காட்டுகிறது. மாறாக, அது மக்களின் தீர்ப்பாக ஏற்றுக்கொள்ளப்படும்.
இந்த நிலைப்பாடு, தவெக அதிகாரத்திற்காக அவசரப்படுவதில்லை; மாறாக, மக்களின் முழுமையான ஆதரவு கிடைக்கும்போது மட்டுமே ஆட்சிக்கு வர விரும்புகிறது என்பதை குறிக்கிறது. எந்த கூட்டணி பலமும் இல்லாமல் தனித்து நின்று கணிசமான வாக்குகளை பெறுவது, தவெகவின் எதிர்கால அரசியல் பயணத்திற்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைக்கும்.
விஜய்யின் இந்த உறுதியான முடிவு, குறுகியகால அரசியல் ஆதாயங்களை விட, நீண்டகால நம்பகத்தன்மை மற்றும் தூய்மையான அரசியல் பாரம்பரியம் ஆகியவற்றிற்கு அவர் முக்கியத்துவம் கொடுப்பதை தெளிவாக உணர்த்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
