தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்ற ஜி20 உச்சிமாநாட்டில் உரையாற்றிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, உலகளாவிய ஒத்துழைப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் நீடித்த வளர்ச்சிக்கான இந்தியாவின் முன்முயற்சிகளை வலியுறுத்தி பேசினார். அவரது உரையின் முக்கிய அம்சங்கள் இதோ:
இயற்கைப் பேரிடர்கள் மனிதகுலத்திற்கு பெரும் சவாலாக இருப்பதை மோடி சுட்டிக்காட்டினார். இந்த பேரிடர்களைச் சமாளிக்க உலகளாவிய ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன், இந்தியா தனது ஜி20 தலைமை பொறுப்பின்போது பேரிடர் அபாய குறைப்புப் பணிக்குழுவை நிறுவியது.
பேரிடர் மீள்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணியை நிறுவியதன் பின்னணியில் இந்தியாவின் இந்த கருத்தே உள்ளது. நிதி, தொழில்நுட்பம் மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றை மேம்படுத்த ஜி20 நாடுகள் CDRI உடன் இணைந்து பணியாற்ற முடியும் என்றும், இது ஓர் உறுதியான எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
விண்வெளித் தொழில்நுட்பம் ஒட்டுமொத்த மனிதகுலத்திற்கும் பயனளிக்க வேண்டும் என்று இந்தியா கருதுகிறது. ஜி20 ‘திறந்த செயற்கைக்கோள் தரவுப் கூட்டாண்மை’ என்ற முன்மொழிவை இந்தியா முன்வைத்துள்ளது. இதன் மூலம் ஜி20 நாடுகளின் விண்வெளி அமைப்புகளின் செயற்கைக்கோள் தரவுகள் மற்றும் பகுப்பாய்வுகள், உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளுக்கு அதிக அளவில் எளிதாக கிடைக்க வழிவகை செய்யலாம்.
உலகளாவிய வளர்ச்சிக்கு நிலைத்தன்மையும் தூய்மை எரிசக்தியும் அவசியம். இதற்கான முக்கிய கனிமங்கள் மனிதகுலத்தின் பொதுவான சொத்து என்று கூறிய பிரதமர், ஜி20 ‘முக்கிய கனிமங்கள் சுழற்சி முன்முயற்சிஐ இந்தியா முன்மொழிவதாக தெரிவித்தார். மறுசுழற்சி, நகர்ப்புற சுரங்கம் மற்றும் செகண்ட் லைஃப் பேட்டரி போன்ற புதுமைகளை ஊக்குவிப்பது இதன் நோக்கமாகும். இது முதன்மை சுரங்க சார்பை குறைத்து, இயற்கைக்கு நல்லது செய்யும்.
டெல்லி ஜி20 உச்சிமாநாட்டில், 2030-ஆம் ஆண்டுக்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை மூன்று மடங்காகவும், எரிசக்தி திறன் விகிதத்தை இரண்டு மடங்காகவும் அதிகரிக்க செய்ய உறுதிமொழி எடுக்கப்பட்டது. இந்த இலக்கை அடைய, வளரும் நாடுகளுக்கு மலிவு விலையில் காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்பத்தை வழங்குவதற்கான தங்கள் உறுதிப்பாட்டை வளர்ந்த நாடுகள் சரியான நேரத்தில் நிறைவேற்ற வேண்டும்.
காலநிலை மாற்றம் காரணமாக விவசாய துறையும் உணவு பாதுகாப்பும் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. உரங்கள், தொழில்நுட்பம், கடன், காப்பீடு மற்றும் சந்தை அணுகல் ஆகியவை பல நாடுகளில் உள்ள விவசாயிகளுக்குச் சவாலாக உள்ளன.
உலகில் மிகப்பெரிய உணவு பாதுகாப்பு, ஊட்டச்சத்து ஆதரவுத் திட்டம், சுகாதார காப்பீட்டுத் திட்டம் மற்றும் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை இந்தியா செயல்படுத்தி வருகிறது. மேலும், ஊட்டச்சத்து மற்றும் சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்கும் சூப்பர் ஃபுட் ஆன ஸ்ரீ அன்னம் மீதும் இந்தியா கவனம் செலுத்துகிறது.
இந்த அனைத்து விஷயங்களிலும் டெல்லி ஜி20-இன் போது ஒப்புக்கொள்ளப்பட்ட டெக்கான் கொள்கைகளின் அடிப்படையில், இப்போது ஒரு ஜி20 சாலை வரைபடத்தை உருவாக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி வலியுறுத்தினார். ஒட்டுமொத்த உலகளாவிய பாதுகாப்பை உருவாக்க, ஊட்டச்சத்து, பொது சுகாதாரம், நீடித்த விவசாயம் மற்றும் பேரிடர் தயார்நிலை ஆகியவற்றை இணைக்கும் ஒரு விரிவான திட்டத்தை ஜி20 ஊக்குவிக்க வேண்டும் என்றும் அவர் கூறி முடித்தார்.
பிரதமர் மோடி தனது பேச்சில் கூறிய ஸ்ரீ அன்னம் என்பது சிறுதானியங்களை ஊக்குவிக்கும் திட்டம் மற்றும் சிறுதானியப் புரட்சி ஆகும். சிறுதானியங்களின் முக்கியத்துவம், இயற்கை வேளாண்மை, மற்றும் சிறுதானியங்களின் பயன்கள் பற்றி அவர் பலமுறை பேசியுள்ளார். சமீபத்தில் கோவையில் நடந்த நிகழ்ச்சியில் கூட பிரதமர் மோடி சிறுதானியங்கள் குறித்து பேசிய நிலையில், அதே கருத்தை ஜி20 மாநாட்டிலும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
