நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் தமிழக அரசியலில் ஒரு புதிய சக்தியாக பிரவேசித்திருந்தாலும், வெற்றியை நோக்கிய அதன் ஆரம்ப பயணம் பொறுமை, படிப்படியான வளர்ச்சி மற்றும் மக்களின் முழுமையான நம்பிக்கையை நம்பியிருக்க வேண்டும் என்று, விஜய்க்கு ஆலோசனை வழங்கும் குழுவில் உள்ளதாக கூறப்படும் முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர். “மக்கள் அவ்வளவு எளிதில் ஒரு கட்சியை நம்ப மாட்டார்கள்” என்ற அடிப்படை கருத்தை முன்வைத்து, அவர்கள் வழங்கியதாக கூறப்படும் விரிவான ஆலோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
அவசரப்பட்டு ஆட்சியை கைப்பற்ற முயல்வது, புதிய கட்சிக்கு தோல்வியையும், மக்கள் மத்தியில் நம்பகத்தன்மை இன்மையையும் ஏற்படுத்தும் என்று முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் குழு அறிவுறுத்தியுள்ளது. “திடீரென பெரிய வெற்றியை எதிர்பார்ப்பதைவிட, ஒரு கட்சி தனது கொள்கைகள், தலைமை மற்றும் களப்பணிகள் மூலம் மக்கள் மத்தியில் ஆழமான நம்பிக்கையை கட்டியெழுப்ப வேண்டும்” என்று அவர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.
திராவிடக் கட்சிகள் பல ஆண்டுகளாக களத்தில் இருந்துதான் மக்களின் நம்பிக்கையை பெற்றன. அதுபோன்றதொரு அரசியல் பாரம்பரியத்தை ஒரே நாளில் உருவாக்க முடியாது. எனவே, “மக்கள் எப்போது நமக்கு ஆட்சியைத் தருகிறார்களோ, அப்போது நாம் ஆட்சிக்கு வருவோம்” என்ற மனோபாவத்துடன் விஜய் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், நடிகர் என்ற பிம்பத்தை தாண்டி, விஜய்யின் அரசியல் நேர்மை, நிர்வாக திறன் மற்றும் மக்களுக்கு சேவை செய்யும் உறுதி ஆகியவற்றை நிரூபிக்க, கால அவகாசம் அவசியம்.
வரும் சட்டமன்றத் தேர்தலில் முழுமையான வெற்றி கிடைக்கவில்லை என்றாலும், சோர்வடையாமல், சட்டமன்றத்தில் வலுவான எதிர்க்கட்சியாக தவெக செயல்பட வேண்டும் என்று இந்த குழு ஆலோசனை வழங்கியுள்ளது. “தேர்தலில் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை என்றால், எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்கான நமது கடமையை தொடர்ந்து செய்ய வேண்டும்” என்பதே அவர்களின் நிலைப்பாடு ஆகும்.
பொறுப்புடனும், ஆக்கபூர்வமாகவும் செயல்படும் ஒரு எதிர்க்கட்சியை மக்கள் கவனிக்க தவறுவதில்லை. “அதுவரை பொறுமை காத்து, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்து மக்களுக்கான நமது கடமையை தொடர்ந்து செய்வோம்” என்ற நிலைப்பாடானது, தவெகவின் அரசியல் முதிர்ச்சியைக் காட்டும். மேலும், எதிர்க்கட்சியாக செயல்படுவது, கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும், தலைமைக்கும் அரசியல் நிர்வாகம் குறித்த ஆழமான புரிதலை அளித்து, எதிர்காலத்தில் ஆட்சிக்கு வரும்போது அது பேருதவியாக இருக்கும்.
சிறுபான்மை ஆட்சி அமைப்பதையோ அல்லது கூட்டணிக்குள் சிக்கி தவிப்பதை விட, மக்களின் முழுமையான நம்பிக்கையையும், அதிகாரத்தையும் பெறுவதே தவெகவின் இலக்காக இருக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மக்கள் எந்த குழப்பமும் இன்றி, “நமக்கு இந்த ஒரு கட்சிதான் மாற்று” என்று நம்பி முழு அதிகாரத்தை அளிக்கும் நாள் வரும் வரை, களப்பணியை விடாமல் தொடர வேண்டும். இதுதான் ஒரு நிலையான ஆட்சிக்கும், ஆரோக்கியமான அரசியல் பாரம்பரியத்திற்கும் அடித்தளமிடும்.
மொத்தத்தில், விஜய்யின் தவெக ஒரு நடிகரின் திடீர் அரசியல் கட்சியின் பிம்பத்தை தகர்த்து, அதிகாரத்துக்காக அவசரப்பட்டு தவறான கூட்டணிக்குள் செல்வதையோ, குறுக்குவழியில் ஆட்சிக்கு வருவதையோ தவிர்த்து, ஒரு பொறுப்புள்ள, படிப்படியான வளர்ச்சி கொண்ட அரசியல் இயக்கமாக தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதே, அவரது நிர்வாக ஆலோசகர்கள் வழங்கும் ஆலோசனையின் சாராம்சமாகும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
