நோபல் பரிசை வாங்க சென்றால் நாட்டைவிட்டு தப்பியோடியவராக கருதப்படுவார்.. அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பெண் போராளியை மிரட்டிய வெனிசுலா அட்வகேட் ஜெனரல்.. நோபல் பரிசை கூட வாங்க முடியாத அளவுக்கு தலைதூக்கிய சர்வாதிகாரம்.. டிரம்ப் தலையிடுவாரா?

வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ 2025-ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதான பரிசை வென்ற நிலையில், அந்த பரிசை பெறுவதற்காக நார்வேயில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டால் அவர் நாட்டை விட்டு தப்பியோடியவராக கருதப்படுவார்…

nobel

வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ 2025-ஆம் ஆண்டுக்கான நோபல் சமாதான பரிசை வென்ற நிலையில், அந்த பரிசை பெறுவதற்காக நார்வேயில் நடக்கும் விழாவில் கலந்துகொண்டால் அவர் நாட்டை விட்டு தப்பியோடியவராக கருதப்படுவார் என்று வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வரும் டிசம்பர் 10-ஆம் தேதி நார்வேயின் ஓஸ்லோ நகரில் நடைபெறவுள்ள நோபல் பரிசு வழங்கும் விழாவில் கலந்துகொள்ள மச்சாடோ ஏற்கனவே ஆர்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், வெனிசுலாவின் அட்டர்னி ஜெனரல் தாரெக் வில்லியம் சாப் இது குறித்து கூறியதாவது:

“மச்சாடோ வெனிசுலாவுக்கு வெளியே இருப்பதால், அவர் மீது பல கிரிமினல் விசாரணைகள் நிலுவையில் உள்ளன. எனவே, அவர் நார்வே சென்றால் தப்பியோடியவராகவே கருதப்படுகிறார்,” என்று கூறினார். மேலும், மச்சாடோ மீது “சதிச் செயல்கள், வெறுப்பை தூண்டுதல், பயங்கரவாதம்” போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

58 வயதான மச்சாடோ, வெனிசுலாவின் ‘இரும்புப் பெண்மணி’ என்று அறியப்படுபவர். அவர் முன்னாள் ஜனாதிபதி வேட்பாளர் மற்றும் ஒரு காலத்தில் பிரிந்து கிடந்த வெனிசுலாவின் எதிர்க்கட்சியை ஒன்றிணைக்கும் ஒரு முக்கிய சக்தியாகவும் பார்க்கப்படுகிறார். 2023-ஆம் ஆண்டு எதிர்க்கட்சிகளின் முதன்மை தேர்தலில் அவர் அமோக வெற்றி பெற்றார்.

ஆனால், 2024-ஆம் ஆண்டு அதிபர் நிகோலஸ் மதுரோவுக்கு எதிராக நடக்கும் தேர்தலில் போட்டியிட அவருக்கு தடை விதிக்கப்பட்டது. இந்த தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக சர்வதேச பார்வையாளர்கள் தெரிவித்தனர்.

நோபல் சமாதானக் குழு மரியா கொரினா மச்சாடோவை தேர்வு செய்ததற்கான காரணம் குறித்து விளக்கியுள்ளது. வெனிசுலா மக்களுக்கான ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதில் அவர் சோர்வின்றி உழைத்ததற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகம் நோக்கிய ஒரு நீதியான மற்றும் அமைதியான மாற்றத்தை கொண்டுவர அவர் மேற்கொண்ட போராட்டத்திற்காகவும்” மச்சாடோ தேர்வு செய்யப்பட்டார் என்று கூறியுள்ளது.

உயிரச்சுறுத்தல்கள் இருந்தபோதிலும், நாட்டின் எதிர்கால ஜனநாயகத்திற்காக தொடர்ந்து போராடி வரும் ஒரு “அமைதிக்கான போராளி” என்றும் அவர் வர்ணிக்கப்பட்டார்.

வெனிசுலா பல ஆண்டுகளாக சர்வாதிகார ஆட்சியால் ஆளப்பட்டு வருகிறது. தற்போதைய அதிபர் நிகோலஸ் மதுரோவின் தலைமை, அமெரிக்கா உட்பட பல நாடுகளால் அங்கீகரிக்கப்படவில்லை. வெனிசுலாவின் மதுரோ நிர்வாகம் போதைப்பொருள் கடத்தல் கும்பல்களுடன் இணைந்து செயல்படுவதாக டிரம்ப் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது.

நோபல் பரிசு வென்றது, மதுரோ ஆட்சியில் இருந்து தனக்கு “பெரிய பாதுகாப்பை” அளிக்கும் என்று நம்புவதாக மச்சாடோ கடந்த மாதம் அளித்த பேட்டியில் தெரிவித்தார். ஆனால் அந்த பரிசை அவர் நேரில் சென்று வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.