அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தனது செல்வாக்கு சரிந்து வரும் நிலையில், அமெரிக்க மக்களுக்கு தலா $2,000 டாலர் வழங்குவதாக முன்மொழிந்துள்ளார். இந்த பணம், அவரது நிர்வாகம் விதித்த புதிய வரிகள் மூலம் ஈட்டப்படும் வருவாயிலிருந்து வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார். எனினும், இந்த கனவு திட்டத்தின் நடைமுறை சாத்தியம், அதன் செலவு மற்றும் பொருளாதார தாக்கம் குறித்து வல்லுநர்கள் பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
வாழ்க்கைச் செலவு உயர்வு மற்றும் ஜெஃப்ரி எப்ஸ்டீன் விசாரணை குறித்த டிரம்ப்-இன் கையாளுதலில் அமெரிக்கர்கள் அதிருப்தி தெரிவித்ததையடுத்து, அவரது செல்வாக்கு குறியீடு 38% ஆக சரிந்துள்ளது. இதை கருத்தில் கொண்டே, அதிபர் டிரம்ப், இந்தியாவில் பிரபலமாக இருக்கும் இலவச திட்டங்களை போல, கட்டணப்பங்கு என்ற பெயரில் $2,000 டாலரை அமெரிக்கர்களுக்கு வழங்க திட்டமிட்டுள்ளார்.
அதிபர் டிரம்ப்-இன் இந்த திட்டத்திற்கான செலவு சுமார் $450 பில்லியன் டாலர் வரை இருக்கலாம் என்று ஒரு ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. 2026 நிதியாண்டில், டிரம்ப் நிர்வாகத்தின் புதிய வரிகள் சுமார் $240 பில்லியன் டாலர் வரை மட்டுமே ஈட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதாவது, திட்டத்தின் மொத்த செலவில் பாதி மட்டுமே வரியாக கிடைக்கும்.
இந்த வரி கட்டண வருவாயை, கடன் குறைப்பு அல்லது விவசாயிகளுக்கு நிவாரணம் போன்ற வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப் போவதாக டிரம்ப் முன்னர் கூறியிருந்தார். ஆனால், தற்போது மொத்த வருவாயும் இந்த பங்குத் தொகைக்கே போதாது என்ற நிலை உள்ளது.
இந்த $2,000 டாலர் காசோலைகள் 2026-ன் நடுப்பகுதியில் வழங்கப்படலாம் என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தாலும், கருவூல செயலர் ஸ்காட் பெசென்ட், இதற்கு காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும் சட்டம் தேவை என்று கூறியுள்ளார். இது நிச்சயம் நடக்குமா என்பது உறுதியற்றது.
டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில், அதிக வருமானம் ஈட்டுபவர்களுக்கு இந்த பங்குத்தொகை வழங்கப்படாது என்று தெரிவித்துள்ளார். எனினும், குறிப்பிட்ட வருமான வரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை. ஆய்வு அறிக்கைகளின்படி, ஆண்டுக்கு $100,000 டாலருக்கும் குறைவாக ஈட்டும் ஒவ்வொரு தனி நபருக்கும் இந்த பங்கு வழங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
இந்த திட்டம் குறித்த அறிவிப்பு, மிக முக்கியமான 2026 இடைத்தேர்தல்களுக்கு சற்று முன்னதாகவே வந்துள்ளது. இது, விலைவாசி உயர்வால் சிரமப்படும் வாக்காளர்களை கவர்ந்து, டிரம்ப்-இன் சரிந்து வரும் செல்வாக்கை புதுப்பிப்பதற்கான நேரடியாக பணப் பரிமாற்றம் என்ற அரசியல் யுக்தியாகவே பார்க்கப்படுகிறது.
அமெரிக்கர்களின் வாங்கும் சக்தியை உயர்த்தும் நோக்கில் முன்வைக்கப்பட்ட டிரம்ப்-இன் இந்த திட்டம், அதன் பெரும் செலவு, குறைவான வரி வருவாய் மற்றும் சட்ட சிக்கல்கள் காரணமாக, நடைமுறைக்கு வருவது சவாலான காரியமாக இருக்கும் என்றே அரசியல் மற்றும் பொருளாதார வல்லுநர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
