இந்திய ரிசர்வ் வங்கி அங்கீகாரம் இல்லாத அந்நிய செலாவணி அதாவது Forex வர்த்தக தளங்களின் ‘எச்சரிக்கை பட்டியலை’ விரிவுபடுத்தியுள்ளது. சமீபத்திய பட்டியலில் மேலும் ஏழு புதிய நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இணையதளங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த தளங்கள் மூலம் வர்த்தகத்தில் ஈடுபடுவதை தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு ரிசர்வ் வங்கி மீண்டும் வலியுறுத்தி எச்சரிக்கை விடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் எச்சரிக்கை பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ஏழு அங்கீகாரம் அற்ற அந்நிய செலாவணி வர்த்தக நிறுவனங்கள் மற்றும் அவற்றின் இணையதளங்கள் பின்வருமாறு:
Starnet FX (www.starnetfx.com)
CapPlace (www.capplace.com)
Mirrox (www.mirrox.com)
Fusion Markets (www.fusionmarkets.com)
Trive (www.trive.com)
NXG Markets (www.nxgmarkets.com)
Nord FX (www.nordfx.com)
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்த தளங்கள் அந்நிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் கீழ் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு அங்கீகரிக்கப்படவில்லை என்று திட்டவட்டமாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிக இலாபத்தை உறுதியளிக்கும் அங்கீகாரம் அற்ற டிஜிட்டல் தளங்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும், RBI ஆல் அங்கீகரிக்கப்பட்ட டீலர்கள் மூலமாக மட்டுமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முதலீட்டாளர்களுக்கு ரிசர்வ் வங்கி மீண்டும் மீண்டும் எச்சரித்துள்ளது.
மேலும், அங்கீகாரம் அற்ற அந்நிய செலாவணி வர்த்தகம் நிதி இழப்புகளுக்கு வழிவகுப்பது மட்டுமல்லாமல், இந்திய சட்டத்தின் கீழ் அபராதம் விதிக்கப்படவும் வாய்ப்புள்ளது என்றும் ரிசர்வ் வங்கி நினைவூட்டுகிறது.
கடந்த சில ஆண்டுகளில் ஆன்லைன் அந்நிய செலாவணி வர்த்தக மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், பொதுமக்கள் ஆபத்துக்களை விளைவிக்கக்கூடிய நிறுவனங்களை தெளிவாக அடையாளம் காண உதவுவதே ரிசர்வ் வங்கியின் முக்கிய நோக்கமாகும்.
இந்த எச்சரிக்கை பட்டியலில், அந்நிய செலாவணி மேலாண்மைச் சட்டம், 1999 இன் கீழ் அந்நிய செலாவணி பரிவர்த்தனைகளை நடத்த அதிகாரம் இல்லாத மின்னணு வர்த்தக தளங்கள் தொடர்பான ரிசர்வ் வங்கியின் வழிகாட்டு விதி 2018-ன் கீழ் மின்னணு வர்த்தக தளங்களை இயக்க அனுமதி இல்லாத நிறுவனங்கள், தளங்கள் மற்றும் இணையதளங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், அங்கீகாரம் அற்ற அந்நிய செலாவணி தளங்களை பற்றிய விளம்பரங்கள் மூலமாகவோ அல்லது அத்தகைய அங்கீகாரம் அற்ற நிறுவனங்கள் தொடர்பான பயிற்சி அல்லது ஆலோசனை சேவைகளை வழங்குவதாக கூறி ஊக்குவிக்கும் நிறுவனங்கள், தளங்கள் மற்றும் இணையதளங்களும் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் நிதி பாதுகாப்பிற்காகவும், சட்ட சிக்கல்களைத் தவிர்க்கவும், ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்து, அங்கீகரிக்கப்பட்ட வழிகளில் மட்டுமே அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
