விஜய் கட்சி 200 தொகுதிகளில் டெபாசிட் இழக்கும்.. முதல் தேர்தலில் வெற்றி பெற்று முதலமைச்சர் ஆவதெல்லாம் சினிமாவில் மட்டுமே சாத்தியம்.. விஜய் கட்சியில் இரண்டாம் கட்ட தலைவர்களோ, பிரபலமான நிர்வாகிகளோ இல்லை.. ஒரு கட்சியில் ஒருவர் மட்டும் பிரபலமாக இருந்தால் போதாது.. விஜய்காந்த், கமல் தோல்வி அடைந்தது இந்த ஒரு காரணத்தினால் தான்..! ரங்கராஜ் பாண்டே கருத்து..!

பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தமிழகத்தின் அரசியல் களம் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் தற்போது விவாத பொருளாகியுள்ளன. குறிப்பாக, பிரசாந்த்…

vijay rangaraj

பிகார் சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பிறகு, தமிழகத்தின் அரசியல் களம் குறித்து மூத்த பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான ரங்கராஜ் பாண்டே அவர்கள் ஒரு நேர்காணலில் தெரிவித்த கருத்துக்கள் தற்போது விவாத பொருளாகியுள்ளன. குறிப்பாக, பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியின் தோல்வியிலிருந்து நடிகர் விஜய் பாடம் கற்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்த கருத்தை ஒட்டி அவர் விரிவான பார்வையை முன்வைத்துள்ளார்.

விஜய் கட்சி ஆரம்பித்ததன் நோக்கம் மற்றும் அதன் வெற்றிக்கான வாய்ப்புகள் குறித்து பேசிய ரங்கராஜ் பாண்டே, முதல் தேர்தலிலேயே ஒருவர் முதலமைச்சராவது என்பது சினிமாவில் வேண்டுமானால் சாத்தியம்; ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்பதை நடிகர் விஜய் புரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில், விஜய் வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட பிடிக்க முடியாது என்பது மிகவும் தெளிவானது என்று கூறிய ரங்கராஜ் பாண்டே, பிரசாந்த் கிஷோருக்கும் விஜய்க்கும் உள்ள மிகப்பெரிய வித்தியாசம் மக்கள் செல்வாக்கு தான். தமிழ்நாட்டில் ‘விஜய்’ என்பது வீடு வீடாக தெரிந்த ஒரு முகம். அவர் கட்சியின் பெயர் தெரியாவிட்டாலும், ‘விஜய் கட்சி’ என்று அனைவரும் எளிதில் அடையாளம் கண்டுகொள்வார்கள். ஆனால், பிரசாந்த் கிஷோர் படித்தவர்கள் மத்தியில் மட்டுமே அறியப்பட்டவர். கிராமப்புறங்களில் தன்னை அறிமுகப்படுத்தி கொள்ளவே அவர் இரண்டரை ஆண்டுகள் பாதயாத்திரை செல்ல வேண்டியிருந்தது.

பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி 243 தொகுதிகளில் 241 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழந்தது. அதேபோல், தமிழக வெற்றிக் கழகமும் 234 தொகுதிகளில் சுமார் 200 தொகுதிகளில் டெபாசிட் தொகையை இழக்க நேரிடலாம். 15,000 முதல் 20,000 வாக்குகள் பெறுவது நல்ல எண்ணிக்கையாக இருக்கலாம், ஆனால் அது டெபாசிட் தொகையை மீட்டுக் கொடுக்குமா என்பது சந்தேகம் என்று கூறியது பெரும் அதிர்ச்சியையும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

“பிரசாந்த் கிஷோர் அளவுக்கு விஜய்யின் வீழ்ச்சி இருக்காது, ஆனால் அவர் நினைக்கும் அளவுக்கு வளர்ச்சியும் இருக்காது” என்பதை புரிந்துகொள்ள வேண்டும். முதல் தேர்தலிலேயே முதலமைச்சர் ஆகிவிட வேண்டும் என்ற ஆசை நிறைவேற போவதில்லை என்று ரங்கராஜ் பாண்டே திட்டவட்டமாக கூறினார்.

ஒரு கட்சி வெற்றிபெற, உள்ளூர் நிர்வாகிகளின் தனிப்பட்ட செல்வாக்கு மிகவும் அவசியம். விஜய்யின் கட்சியில் நிர்மல் குமார், ஆதவ் அர்ஜூனா, புஸ்ஸி ஆனந்த், ராஜ்மோகன், ஐ.ஏ.எஸ் அருண்குமார் போன்ற நிர்வாகிகள் இருந்தாலும், இவர்களில் ஒருவர் கூட தங்கள் சொந்த தொகுதியிலோ அல்லது மாவட்டத்திலோ எத்தனை லட்சம் வாக்குகளை உறுதிசெய்வார்கள் என்று கேள்வி எழுப்பினார். கே.என். நேரு, எஸ்.பி. வேலுமணி, ஓ.எஸ். மணியன் போன்ற மற்ற கட்சிகளின் உள்ளூர் தலைவர்கள் தங்கள் மாவட்டங்களில் வலுவான செல்வாக்கு கொண்டிருப்பதை போல், விஜய்யின் நிர்வாகிகளுக்கு அத்தகைய செல்வாக்கு இல்லை.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இருக்கும் மிகப்பெரிய சிக்கலே இதுதான். தனிநபராக அவருக்கு பெரிய ஈர்ப்பு இருந்தாலும், உள்ளூரில் கட்சிக்கு ஆட்கள் இல்லை. இதுதான் தவெக-விலும் உள்ள மிகப்பெரிய பலவீனம். இதே பிரச்சனையை தான் விஜயகாந்தும், கமல்ஹாசனும் எதிர்கொண்டனர்.

விஜய்க்கு தமிழ்நாடு முழுவதும் செல்வாக்கு பரவி கிடக்கிறது. சீமான் 35 லட்சம் ஓட்டுகள் வாங்கினாலும், அது தமிழ்நாடு முழுவதும் பரவியிருந்ததால், அவருக்கு ஒரு எம்.எல்.ஏவை கூட பெற முடியவில்லை. அதே நிலைதான் விஜய்க்கும். அவரது செல்வாக்கு ஒரு தொகுதியில் குவிந்து இல்லை. எனவே, உள்ளூர் தலைவர்கள் மூலம் அவர் வாக்குகளை குவிக்க வேண்டும்.

விஜய் யாருக்கு சாதகமாக அல்லது பாதகமாக மாறுவார் என்ற கேள்விக்கு பதிலளித்த பாண்டே, “விஜய், யாருக்கோ ஒருவருக்கு ஸ்பாய்லர் ஆகவும், யாருக்கோ ஒருவருக்கு கிங் மேக்கர் ஆகவும் செயல்படப் போகிறார்” என்று கூறினார்.

முன்பு, விஜய்யின் வருகை அ.தி.மு.க. கூட்டணிக்கு சவாலாகவும், தி.மு.க.வுக்கு வாய்ப்பாகவும் இருக்கும் என்று கருதப்பட்டது. ஆனால், தற்போதுள்ள சூழ்நிலையில், விஜய்க்கு வரும் எழுச்சியை பார்த்தால் தி.மு.க.வின் வாக்குகளும் சிதறக்கூடும் என்று தெரிகிறது. இது அ.தி.மு.க.வுக்கு சாதகமாக மாற வாய்ப்புள்ளது.

பிரசாந்த் கிஷோர் போன்றவர்கள் வெளியிலிருந்து வியூகம் வகுப்பவர்கள். அவர்கள் கிரிக்கெட் கோச் போல் செயல்படலாம். ஆனால், களத்தில் இறங்கி ஆடுவது வேறு. சில முதலமைச்சர்களை உருவாக்கிய பிரசாந்த் கிஷோர், தன் சொந்த கட்சியில் மாநிலம் முழுவதும் நிர்வாகிகள் இல்லாததால் தோற்றார். அதேபோல், விஜய் வெறும் உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை மட்டும் நம்பி வெற்றிபெற முடியாது என்று ரங்கராஜ் பாண்டே அழுத்தமாக கூறினார்.