இந்திய தேசிய காங்கிரஸின் தேசிய அரசியலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள், தற்போது தென் மாநிலங்களான தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் அதன் கூட்டணி வியூகங்களை மறுசீரமைக்க தொடங்கியுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, வரவிருக்கும் தேர்தல்களில் தமிழ்நாடு மற்றும் கேரள மாநிலங்களின் கூட்டணி பொறுப்புகளை தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வதற்கு தலைமை அனுமதி கேட்டதாகவும், இதற்கு ராகுல் காந்தி பச்சைக்கொடி காட்டியதாகவும் கூறப்படுகிறது.
இந்த திடீர் நகர்வின் மையத்தில் இருப்பது, தமிழ்நாட்டின் புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ள நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் தான்.
பிரியங்கா காந்தி தற்போது தென் மாநிலங்களில், குறிப்பாக தமிழ்நாட்டில் கூட்டணி அமைக்கும் பொறுப்பை தானே எடுத்துக்கொள்ள முடிவெடுத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விஜய்க்கும் பிரியங்கா காந்திக்கும் இடையே ஏற்கனவே சுமூகமான நட்பு இருந்ததாகவும், விஜய்யை ஒரு தேசியக் கட்சி கூட்டணியில் இணைப்பதற்கான பேச்சுவார்த்தையை பிரியங்காவால் எளிதில் முன்னெடுக்க முடியும் என்றும் காங்கிரஸ் தலைமை நம்புவதாக கூறப்படுகிறது. மேலும், விஜய்யின் இளமை மற்றும் ஆளுமை தென் மாநில அரசியலில் ஒரு புத்துணர்ச்சியை கொண்டு வர முடியும் என்று காங்கிரஸ் கருதுகிறது.
பிரியங்கா காந்தியின் இந்த தனிப்பட்ட தலையீடு, தமிழ்நாட்டில் காங்கிரஸ் + தவெக கூட்டணி உறுதியாவதற்கான அறிகுறிகளை தெளிவாகக் காட்டுகிறது.
சமீபத்திய பிகார் சட்டமன்ற தேர்தல் தோல்விக்குப் பிறகு, காங்கிரஸ் கட்சி தேசிய அளவில் தனது செல்வாக்கை புதுப்பிக்க விரும்புகிறது. திமுக கூட்டணியில் அதிக தொகுதிகளை எதிர்பார்த்து, இறுதியில் குறைந்த இடங்களை பெறுவது காங்கிரஸின் அரசியல் மதிப்பை மேலும் குறைத்துவிடும் என்று அக்கட்சி கருதுகிறது.
நடிகர் விஜய் தனது கட்சிக்கு ஆதரவு தளத்தை கிராமப்புறங்கள் முதல் நகர்ப்புறங்கள் வரை வலிமையாக கட்டியெழுப்பி வருகிறார். காங்கிரஸுடன் கைகோர்ப்பதன் மூலம், தவெக தேசிய கட்சியின் ஆதரவை பெறுவதுடன், அதன் மதச்சார்பின்மை பிம்பத்தையும் வலுப்படுத்த முடியும்.
தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தற்போதுள்ள அரசியல் ஸ்திரத்தன்மையை தாண்டி, புதிய இளம் தலைமைக்கு வாய்ப்பு அளிக்கும் ஒரு மாற்றத்தின் குரலாக இந்த புதிய கூட்டணி அமையும் என்று காங்கிரஸ் வியூகம் வகுப்பதாக தெரிகிறது.
காங்கிரஸ் கட்சி கேரளாவிலும் கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து, மாநில பொறுப்புகளை பிரியங்கா காந்தி ஏற்றுக்கொண்டால், அங்கு காங்கிஅஸ் கூட்டணியை மேலும் வலுப்படுத்த முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரளாவில் ஆளும் இடது ஜனநாயக முன்னணியை எதிர்கொள்ள, பிரியங்கா காந்தியின் நேரடி தலைமை காங்கிரஸ் தொண்டர்களுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்.
இளைஞர்கள் மற்றும் பெண்களை மையப்படுத்திய தேர்தல் வாக்குறுதிகளை பிரியங்கா காந்தி வடிவமைத்து, கேரளாவில் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்க முயற்சிக்கலாம். ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோரின் சமீபத்திய நடவடிக்கைகள் மற்றும் தென்னிந்திய மாநிலங்களில் அவர்கள் கவனம் செலுத்துவது, வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னதாக அரசியல் களத்தை சுறுசுறுப்படையச் செய்துள்ளது.
பிரியங்கா காந்தியின் தலைமையில் காங்கிரஸ், விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து ஒரு வலுவான மூன்றாவது அல்லது மாற்று அணியை தமிழ்நாட்டில் உருவாக்கினால், அது திமுக மற்றும் அஇஅதிமுக தலைமையிலான இரு பெரும் திராவிட கூட்டணிகளுக்கும் கடுமையான நெருக்கடியை கொடுக்க நேரிடும். இந்த வியூகம், தமிழ்நாட்டு அரசியலில் மட்டுமல்லாமல், தென்னிந்தியாவின் ஒட்டுமொத்த அரசியல் வரைபடத்திலும் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
விரைவில் பிரியங்கா காந்தி மற்றும் விஜய்யின் சந்திப்பு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகும் என்று அரசியல் வட்டாரங்கள் ஆவலுடன் காத்திருக்கின்றன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
