பிகார் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு தமிழக அரசியலில் அடுத்தடுத்து முக்கிய சந்திப்புகள் நடக்கின்றன. ஜிகே வாசன் அவர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்தது, ஆர்.பி. உதயகுமார் பிரேமலதா விஜயகாந்தை சந்தித்தது என, இந்த சந்திப்புகள் அனைத்தும் மரியாதை நிமித்தம் என்று கூறப்பட்டாலும், இதன் பின்னால் அரசியல் நகர்வுகள் இருப்பதாக கருதப்படுகிறது.
பிரேமலதா விஜயகாந்தை பொறுத்தவரை, அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. ஆகிய இரு கட்சிகளில் இருந்தும் ஆஃபர்கள் வரலாம் என எதிர்பார்க்கிறார். தேமுதிக தனது கட்சியை உயிர்ப்புடன் வைக்கவும், தொண்டர்களை உற்சாகப்படுத்தவும், ஒரு ஹைப்பை உருவாக்கவும் நேரம் எடுத்துக்கொள்வது நியாயமானது.
அ.தி.மு.க கூட்டணியில் உள்ள பா.ஜ.க-வின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், “எத்தனை தொகுதிகள் என்பது முக்கியமில்லை; தி.மு.க-வை வீழ்த்துவதுதான் முக்கியம்” என்று கூறியது, ஒரு தேர்தல் ஒப்பந்தத்தின் வெளிப்பாடே ஆகும். பா.ஜ.க. அதிகம் கேட்டு கூட்டணியைக் குழப்புவதற்கு பதிலாக, வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளை தேர்ந்தெடுத்து போட்டியிட முடிவு செய்துள்ளது. அதிக தொகுதிகள் பெற்று பிகாரில் காங்கிரஸ் மண்ணை கவ்விய நிலை வந்துவிட கூடாது என்பதில் பாஜக கவனத்துடன் உள்ளது. இந்த தேர்தலில் இரட்டை இலக்கத்தில் எம்.எல்.ஏக்களை பெறுவதுதான் பா.ஜ.க-வின் அதிகபட்ச நோக்கம்.
பா.ஜ.க. தமிழ்நாட்டில் பட்டியல் சமூக தலைவர்கள் மற்றும் ஆளுமைகளை அதிகம் உள்ளே கொண்டுவர கவனம் செலுத்துகிறது. இதற்கு முக்கிய காரணம், பட்டியல் சமூகத்தின் ஆதரவை முழுமையாக பெற வேண்டும் என்பதே ஆகும்.
தமிழகத்தில் உள்ள பிரதான சமூகங்களை ஒதுக்காமல், இதுவரை உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காத பிற சமூகங்களுக்கு முக்கியத்துவம் அளிப்பது. உ.பி., பிகார் போன்ற மாநிலங்களில் சிராக் பாஸ்வான் போன்ற பட்டியல் சமூக தலைவர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுத்ததன் மூலம் பா.ஜ.க. பெரும் வெற்றியை பெற்றது போல் தமிழகத்திலும் பட்டியல் இன தலைவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வர முயற்சி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பா.ஜ.க. மீதான ‘பார்ப்பனிய ஆதரவு’, ‘தலித்துகளுக்கு எதிரானது’ என்ற பரப்புரை தமிழ்நாட்டில் உள்ளது. ஆனால், பா.ஜ.க-வின் இந்த சமூகப் பொறியியல், அந்த பரவலான பார்வையை உடைக்கும் என்றும், தமிழக பா.ஜ.க. மத விஷயங்களை குறைத்து, வளர்ச்சி மற்றும் பிரதிநிதித்துவம் குறித்துப் பேசினால் வெற்றி பெற முடியும் என்றும் திட்டமிட்டுள்ளது. எனவே தமிழகத்தில் பிரச்சாரத்தில் இந்துத்துவா குறித்து அதிகம் இருக்காது என்றும் கூறப்படுகிரது. அரசியல் தலைவர்கள் கோவில், சர்ச், மசூதிக்குள் செல்வதை தவிர்த்து, மக்களின் பிரச்சனைகள், வளர்ச்சி மற்றும் பிரதிநிதித்துவம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
