கச்சா எண்ணெய் எப்படி உலக பொருளாதாரத்தின் முக்கிய ஆதாரமாக இருந்ததோ, அதேபோல் இனிமேல் அத்தியாவசிய கனிமங்களே உலக அதிகாரத்தை முடிவு செய்யும் சக்தியாக உருவெடுத்துள்ளன. லித்தியம், கோபால்ட், நிக்கல், தாமிரம் மற்றும் அரிய கனிமங்கள் தான், மின்சார வாகனங்கள் , குறைக்கடத்திகள் , பாதுகாப்பு தொழில்நுட்பம், செயற்கைக்கோள்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைப்புகளின் முதுகெலும்பாக உள்ளன. இந்த கனிமங்களை பாதுகாப்பதில் இந்தியா தீவிரமான போட்டியில் இறங்கியுள்ளது.
இந்தியாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால் என்னவென்றால், உலகளாவிய அரிய மண் தனிமங்களின் செயலாக்கத்தை 90% க்கும் அதிகமாக சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. மேலும், பல முக்கிய கனிமங்களை சுத்திகரிப்பதிலும் அதுவே ஆதிக்கம் செலுத்துகிறது.
அமெரிக்கா வரிகளை உயர்த்தியிருப்பதாலும், சீனா கனிமங்களின் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை இறுக்கியிருப்பதாலும், இந்தியா தனது தேவைக்கு புதிய கனிம கொள்கைகளை வகுத்துள்ளது. இதற்கான ராஜதந்திர நடவடிக்கைகளை அதிவேகமாக விரிவுபடுத்தி வருகிறது. குறிப்பாக, உலகின் அதிக லித்தியம் இருப்புக்களை கொண்ட ‘லித்தியம் முக்கோணம்’ அமைந்துள்ள லத்தீன் அமெரிக்கா நாடுகளில் இந்தியா கவனம் செலுத்துகிறது.
தாமிரம், லித்தியம் மற்றும் அரிய மண் தனிமங்களை அதிகம் பெற இந்தியா தற்போது பெரு மற்றும் சிலியுடன் வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் பொலிவியா போன்ற நாடுகளிலும் நீண்டகால கனிமங்களுக்கான ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இந்த மாத தொடக்கத்தில், வெனிசுலா இந்தியாவுடன் அத்தியாவசிய கனிம உறவுகளை நாடியது. பாதுகாப்பு துறையில் பயன்படுத்தப்படும் அரிய மண் தனிமங்கள் மற்றும் கன உலோகங்கள் உட்பட வெனிசுலாவின் பரந்த கனிம வளங்களை பயன்படுத்தி கொள்ள, இந்தியா-வெனிசுலா கூட்டு ஆணையத்தை மீண்டும் தொடங்குமாறு வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் அழைப்பு விடுத்தார்.
உலகின் தூய்மையான மற்றும் மிகப்பெரிய லித்தியம், நிக்கல், கோபால்ட் மற்றும் அரிய மண் தனிமங்கள் இருப்புகளை கொண்டிருக்கும் கனடா, இந்தியாவுக்கு ஒரு நிலையான மாற்று விநியோகஸ்தராக தன்னை நிலைநிறுத்தி கொள்கிறது. இரு நாடுகளும் அத்தியாவசிய கனிமங்களில் வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்தியா வெறும் இறக்குமதி செய்வதோடு மட்டுமல்லாமல், உள்நாட்டிலும் சுரங்க பணிகளை தீவிரப்படுத்துகிறது. மத்திய அரசு $4 பில்லியன் மதிப்பிலான ‘தேசிய அத்தியாவசிய கனிமங்கள் திட்டத்தை’ தொடங்கியுள்ளது. இதன் மூலம் அரியவ்கை கனிமங்களை உள்நாட்டில் சுரங்கப்படுத்துதல், சுத்திகரிப்பு செய்தல் மற்றும் மறுசுழற்சி செய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
காலியம், ஜெர்மானியம், கிராஃபைட் மற்றும் பல சுத்திகரிப்பு தொழில்நுட்பங்கள் மீதான கட்டுப்பாடுகளை சீனா இறுக்கி உள்ளது. மேலும் பல கனிமங்களை அது கட்டுப்படுத்தலாம் என்று சமிக்ஞை அளித்துள்ளதால், இந்தியா பல ஆண்டுகளாக சீனாவை நம்பியிருந்த நிலையில் இனிமேலும் அந்நாடை நம்பியிருக்க முடியாது.
இந்தியாவின் கனி கொள்கை தெளிவாக உள்ளது. எதிர்காலத்தில் கனிமங்களை கட்டுப்படுத்துபவரே உலகையே கட்டுப்படுத்துவார் என்பதால், இந்த இலக்கை அடைய இந்தியா முழு மூச்சுடன் செயல்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
