சமீபத்தில் வெளியாகி இந்திய அளவில் அரசியல் விவாதத்தை கிளப்பியுள்ள பிகார் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், தமிழ்நாட்டில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான உறவிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. காங்கிரஸின் தேசிய அளவிலான தொடர் பின்னடைவு, தமிழகத்தில் வரவிருக்கும் தேர்தல்களுக்கான தொகுதி பங்கீட்டு சமன்பாட்டை கேள்விக்குறியாக்குகிறது என அரசியல் விமர்சர்கள் கணித்துள்ளனர்.
பிகார் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான ‘மகா கட்பந்தன்’ கூட்டணியில் அங்கம் வகித்த காங்கிரஸ், வெறும் 6 இடங்களை மட்டுமே வென்றது. இந்த மோசமான செயல்பாடு, அதன் கூட்டணி கட்சிகளால் எள்ளி நகையாடப்படுகிறது.
பிகார் தேர்தல் முடிவுகளை சுட்டிக்காட்டி, திமுகவின் சமூக ஊடக ஆதரவாளர்கள் தங்களது மூக ஊடகப் பக்கங்களில், “பிகாரில் இவ்வளவு குறைந்த இடங்களை மட்டுமே வென்ற நீங்கள், தமிழ்நாட்டில் எங்களிடம் இவ்வளவு அதிக இடங்களை எப்படி எதிர்பார்க்க முடியும்?” என்ற தொனியில் கிண்டலாக கேள்வி எழுப்பினார்.
இத்தகைய விமர்சனங்கள் சாதாரண தொண்டரின் ஆர்வக்கோளாறாக பார்க்க முடியாது என்றும், இது திமுகவின் உயர் மட்டத்தில் இருந்து வரும் உள்நோக்கத்துடன் கூடிய எச்சரிக்கை என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். வரும் தேர்தல்களில் காங்கிரஸ் கேட்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை இப்போதே குறைப்பதற்கு ஆழம் பார்க்கும் முயற்சி இது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
தேசிய அளவில் காங்கிரஸ் கட்சி சந்திக்கும் தொடர் தோல்விகள், அந்த கட்சி ஒரு சுமையாக மாறிவிட்டதோ என்ற கேள்வியை திமுகவுக்குள் எழுப்பியுள்ளது. மாநிலத்தில் திமுக வலுவாக இருந்தாலும், தேசிய அளவில் பலவீனமான ஒரு கட்சியுடன் அதிக இடங்களை பகிர்ந்துகொள்வது தங்கள் ஒட்டுமொத்த வெற்றியை பாதிக்கக்கூடும் என்று திமுக தரப்பு அஞ்சுவதாக கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி மீதான விமர்சனங்கள் வலுத்திருந்தாலும், தொகுதி பங்கீட்டில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்க திமுக தயங்குவதற்கு காரணம், தமிழ்நாட்டின் தற்போதைய அரசியல் சூழலில் ஏற்பட்டிருக்கும் புதிய மாற்றங்களே ஆகும். இதில் முக்கியமான காரணியாக பார்க்கப்படுவது, நடிகர் விஜயின் அரசியல் பிரவேசம் பற்றிய எதிர்பார்ப்பாகும்.
விஜய்யின் கட்சி அரசியலுக்கு வரும்போது, அது திமுகவின் பாரம்பரிய வாக்கு வங்கியில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று கணிக்கப்படுகிறது. குறிப்பாக, திராவிட கட்சிகளுக்கு சாதகமாக இருந்த சிறுபான்மையினர் வாக்குகளை பிரிக்கும் திறன் விஜய்க்கு இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
காங்கிரஸ் கட்சி பலவீனமாக இருந்தாலும், அது தேசிய அளவில் பாஜகவுக்கு எதிரான ஒரு முத்திரையை பெற்றிருப்பதால், சிறுபான்மையினர் வாக்குகளை இழக்காமல் இருக்க, காங்கிரஸை கூட்டணியில் தக்கவைத்துக்கொள்வது திமுகவுக்கு அத்தியாவசியமாகிறது. காங்கிரஸை நிராகரித்தால், அது சிறுபான்மையினரை அதிருப்திக்குள்ளாக்கலாம்.
எனவே, தற்போதுள்ள தேசிய அரசியல் சூழ்நிலை காரணமாக, காங்கிரஸ் கேட்கும் அதிக எண்ணிக்கையிலான இடங்களை குறித்து வெளிப்படையாக கோபத்தை காட்டாமல், தற்காலிகமாக சகித்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் திமுக இருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
திமுகவைப் பொறுத்தவரை, காங்கிரஸின் தேசிய பலவீனத்தை ஒரு நெம்புகோலாக பயன்படுத்தி, வரவிருக்கும் தேர்தல்களில் குறைவான தொகுதிகளை வழங்க முயல்வது ஒரு சாதாரண அரசியல் வியூகம். ஆனால், விஜயின் பிரவேசமும், சிறுபான்மையினர் வாக்குகள் சிதறும் அபாயமும், தொகுதி பங்கீட்டில் கடுமையான முடிவுகளை எடுப்பதை தடுக்கிறது.
காங்கிரஸ் கட்சி, தேசிய அளவில் தனது பலவீனத்தை உடனடியாக சரிசெய்யாவிட்டால், தமிழகம் போன்ற மாநில கூட்டணிகளில் அது இரண்டாம் நிலை கட்சியாக நடத்தப்படுவது தவிர்க்க முடியாததாகிவிடும். மேலும், அது தனது கூட்டணி கட்சிகளின் நிர்பந்தங்களுக்கு ஆளாகும் நிலை தொடரும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
