இந்திய அரசியலில் மிகவும் விவாதிக்கப்படும் ஆளுமைகளில் ஒருவராக காங்கிரஸ் கட்சியின்ராகுல் காந்தி விளங்குகிறார். 2004ஆம் ஆண்டு முதல் காங்கிரஸ் கட்சியில் அவருக்கு பொறுப்புகள் வழங்கப்பட்டாலும், குறிப்பாக பிரதமர் பதவியை நிராகரித்தது, அதன் பிறகு கட்சி தலைமைப் பொறுப்பை கூட தொடர மறுத்தது போன்ற இவரது முடிவுகள், அரசியல் விமர்சகர்கள் மற்றும் பொதுமக்களிடையே தொடர்ந்து பல கேள்விகளை எழுப்பி வருகின்றன. முழுநேர அரசியல் அர்ப்பணிப்பு, தலைமை பொறுப்புக்கான தயக்கம், மற்றும் மக்கள் சேவைக்கான இவரது அணுகுமுறை ஆகியவை குறித்து அரசியல் விமர்சகர்கள் முன்வைக்கும் கடுமையான விமர்சனங்கள் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2004ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி வெற்றி பெற்றபோது, அதன் தலைவர் சோனியா காந்தி பிரதமர் பதவியை ஏற்க மறுத்தார். சோனியா காந்திக்கு மாற்று தலைவரைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தபோது, பிரதமர் பதவிக்கான வாய்ப்பு ராகுல் காந்திக்கு வழங்கப்பட்டிருக்கலாம் என்ற ஊகங்கள் எழுந்தன. ஆனால், ராகுல் காந்தியும் அப்பதவியை ஏற்கவில்லை. அதன்பின்னரே மன்மோகன் சிங் பிரதமர் பொறுப்பை ஏற்றார்.
ராகுல் காந்திக்கு அப்போதைய பிரதமர் பதவியின் தீவிரமான பொறுப்புகள், கடமைகள் மற்றும் கட்டுப்பாடுகள் மீது விருப்பமில்லை என அரசியல் விமர்சகர்கள் குற்றம் சாட்டினர். பிரதமர் பதவியை ஏற்றால், தனிப்பட்ட சுதந்திரமும், “ஊர் சுற்றும்” வாய்ப்பும் குறையும் என்ற காரணத்தாலேயே அவர் அப்பொறுப்பை தவிர்த்திருக்கலாம் என்று மறைமுகமாக குற்றம் சாட்டுகின்றனர். பிரதமர் பதவி தேடி வந்தபோது ஒரு நிமிடம் கூட தயங்காமல் ஏற்று கொண்டவர் ராஜீவ் காந்தி. ஆனால் அவருடைய மகன், பதவி தேடி வந்தபோதும் அதை தட்டி கழித்துவிட்டதாக பார்க்கப்படுகிறது.
நாட்டின் மிக உயர்ந்த நிர்வாக பதவியைக் கிடைத்தும் நிராகரித்தது, அரசியலை முழுநேர கடமையாகக் கருதாமல் ஒரு விருப்ப தேர்வாகவே ராகுல் பார்க்கிறார் என்பதை காட்டுகிறது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். 2004இல் ராகுல் காந்தி முழுப் பொறுப்பை ஏற்றிருந்தால், அவரது அரசியல் எதிர்காலம் வேறுவிதமாக அமைந்திருக்கும் என்றும், அதன் மூலம் மக்களுக்கான தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருக்கலாம் என்றும் விமர்சகர்கள் கருதுகின்றனர்.
பிரதமர் பதவியை நிராகரித்தது மட்டுமல்லாமல், 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்கு பிறகு, அவர் வகித்து வந்த காங்கிரஸ் தலைவர் பதவியில் இருந்து விலகியது, அரசியல் விமர்சகர்களின் விமர்சனங்களை மேலும் அதிகரித்தது. ஒரு தோல்விக்கு பிறகு தலைவர் பதவியில் இருந்து விலகுவது நியாயமான முடிவாக இருந்தாலும், அதன்பிறகு மீண்டும் கட்சி தலைமை பொறுப்பை ஏற்க அவர் தொடர்ந்து மறுத்து வருகிறார்.
அவரது இந்த தொடர்ச்சியான தயக்கம், நாட்டின் பழமையான அரசியல் கட்சியான காங்கிரஸில் ஒரு தலைமை வெற்றிடத்தை உருவாக்கி, கட்சியின் அமைப்பில் ஸ்திரமின்மையை ஏற்படுத்தியுள்ளது என்று விமர்சகர்கள் கூறுகின்றனர். கடினமான காலங்களில் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க மறுப்பது, அரசியல் தலைமைக்கு தேவையான முதிர்ச்சி, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு இவரிடம் இல்லை என்பதையே காட்டுகிறது என்றும் அவர்கள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.
ராகுல் காந்தியின் அரசியல் பாணி, அவருடைய விருப்பங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து அரசியல் விமர்சகர்கள் பொதுவாக முன்வைக்கும் முக்கிய கருத்து: ஒன்று முழுநேர அரசியல் செய்யுங்கள், அல்லது முழுநேரமாக ஊர் சுற்றுங்கள். பொதுச்சேவை என்பது மக்களின் நம்பிக்கையின் பேரில் வழங்கப்படும் ஒரு பொறுப்பு. ஒரு நாட்டின் குடிமக்களுக்கு சேவை செய்ய விரும்புபவர், அந்த பொறுப்பை முழுநேர அர்ப்பணிப்புடன் ஏற்க வேண்டும். ராகுல் காந்தி பொறுப்பை கோருகிறார், ஆனால் அதற்கான தீவிரமான சுமையை ஏற்க தயங்குகிறார் என்பது விமர்சகர்களின் மைய குற்றச்சாட்டாக உள்ளது.
அவர் அடிக்கடி அரசியலில் இருந்து தனிப்பட்ட பயணங்களுக்காக நீண்ட விடுமுறை எடுப்பது அவரது செயல்பாடுகள் குறித்துத் தொடர்ந்து சந்தேகங்களை எழுப்புகிறது. இது அவரது அரசியல் எதிரிகளுக்கு, அவரை பொறுப்பற்றவர் என்று விமர்சிக்க வாய்ப்பளிக்கிறது. தலைவர் பதவியை ஏற்க மறுப்பவர் எப்படி மக்களுக்கு சேவை செய்ய முடியும்? – இந்தக் கேள்விதான் விமர்சகர்களால் அதிகம் முன்வைக்கப்படுகிறது. தலைமை பொறுப்பை ஏற்று முடிவெடுக்கும் அதிகாரம் இல்லாமல், வெறும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற நிலையிலிருந்து மட்டுமே நாட்டுக்கு தேவையான பெரிய மாற்றங்களை கொண்டு வர முடியாது என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.
ராகுல் காந்தி தற்போது நாடு முழுவதும் பாதயாத்திரைகள் மேற்கொள்வது போன்ற செயல்களில் தீவிரமாக ஈடுபட்டு, தன்னை ஒரு “அரசியல் செயல்பாட்டாளராக” முன்னிறுத்தினாலும், பிரதமர் அல்லது கட்சி தலைவர் போன்ற உயரிய பதவிகளை ஏற்க தயங்குவது என்பது அவரது அரசியல் இலக்கு குறித்த தெளிவின்மை என்று விமர்சகர்கள் கருதுகின்றனர்.
மொத்தத்தில், ராகுல் காந்தி ஒரு பெரிய அரசியல் பாரம்பரியத்தை கொண்டவர் என்ற எதிர்பார்ப்பும், எதிர்க்கட்சிகளை வழிநடத்தும் இடத்தில் இருக்கிறார் என்ற உண்மையும்தான் அவர் மீது இத்தகைய கடுமையான விமர்சனங்களை வைக்க காரணமாகிறது.
அவர் மக்கள் சேவைக்காகவும், நாட்டின் அரசியலை வழிநடத்தவும் உறுதியானால், அதற்கான தலைமை பொறுப்பை தயக்கமின்றி ஏற்க வேண்டும் என்பதே அரசியல் விமர்சகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
ராகுல் காந்தி முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட தொடங்கினால்தான், அவர் மீதான “பொறுப்பை ஏற்க மறுப்பவர்” என்ற விமர்சன முத்திரையை நீக்க முடியும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
