கடந்த மாதம் தென் கொரியாவின் பூசானில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் சந்தித்துக்கொண்டபோது, ஒன்பது மாதங்களாக நீடித்த வர்த்தகப்போருக்கு தற்காலிக முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. இரு நாடுகளும் வர்த்தகத்தில் உள்ள வேறுபாடுகளை, நீண்ட திருமண வாழ்வில் உள்ள சலசலப்புகளுக்கு ஒப்பிட்டனர்.
உலகின் மிகப்பெரிய பொருளாதார சக்தியாகவும், அதிக இறக்குமதியாளராகவும் இருப்பதால், அமெரிக்கா தனது ‘சந்தை ஆதிக்கத்தை’ பயன்படுத்தி சீனாவை மிரட்டிச் சலுகைகளை பெற முடியும் என்று நம்பியது. அமெரிக்காவின் பொருளாதாரத்தில் இறக்குமதி சுமார் 15% மட்டுமே என்பதால், வரி உயர்வுகளால் ஏற்படும் விலை உயர்வு பாதிப்புகளை சமாளித்து, சீனாவை விட நீண்ட காலம் நீடிக்க முடியும் என்று வாஷிங்டன் நினைத்தது.
ஆனால் சீனாவிடம் ஒரு மறைமுகமான சக்தி இருந்தது, அது கட்டுப்பாடு. நவீன தொழில்நுட்பத்துக்கு அத்தியாவசியமான மாங்கனீஸ், கிராஃபைட் மற்றும் அரிய மண் தாதுக்கள் ஆகியவற்றில் உலகிலேயே மிகப்பெரிய பதப்படுத்தும் சக்தி சீனாவிடம் உள்ளது. உலகின் 90% க்கும் அதிகமான அரிய மண் தாதுக்களை சீனா கட்டுப்படுத்துகிறது. இந்தத் தாதுக்கள் மின்சார வாகனங்கள், ஸ்மார்ட்போன்கள், குறைக்கடத்திகள் மற்றும் ராணுவ டிரோன்கள் ஆகியவற்றின் உற்பத்திக்கு அடிப்படை. அமெரிக்கா வரிகளை உயர்த்தியபோது, சீனா நேரடியாக அமெரிக்காவின் தொழில்கள் சார்ந்துள்ள அரிய மண் தாதுக்களின் ஏற்றுமதியை நிறுத்தியது.
2010 இல் ஜப்பானுக்கு எதிரான பிராந்திய தகராறின்போது இதே உத்தியை சீனா பயன்படுத்தியது. இதன் மூலம் வாஷிங்டனுக்கு “உங்களுக்குத்தான் எங்களை விட அதிகம் தேவை” என்ற செய்தியை தெளிவாகக் கடத்தியது. அதன்பின்னர் 100 நிமிடங்கள் நடந்த பேச்சுவார்த்தையின் முடிவில், உண்மையான அதிகாரம் யாருக்கு என்பது தெரிய வந்தது.
அமெரிக்கா தனது விவசாயிகளுக்காகச் சோயாபீன்ஸ் ஏற்றுமதி மீண்டும் தொடங்கப்பட்டது என்ற ஓர் அடையாள வெற்றியை மட்டுமே பெற முடிந்தது.ஆனால் சீனா அமெரிக்காவின் வரி அச்சுறுத்தலை தாண்டி நிமிர்ந்து நிற்க முடியும் என்பதை நிரூபித்தது.
அமெரிக்கா சந்தை சார்ந்த கொள்கையை நம்பியிருக்க, சீனா பல ஆண்டுகளாக ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலீடு செய்து கோபால்ட், நிக்கல், லித்தியம் போன்ற தாதுக்களுக்கான பிரத்யேக உரிமைகளை பெற்றுள்ளது.
இந்த தற்காலிக சமாதானம் நீடிக்குமா என்பது சந்தேகமே. அடுத்த சுற்று வர்த்தக போர் தொடங்கும் போது, அமெரிக்காவின் சந்தைப் பலம், நவீன உலகில் சீனாவின் அரிய மண் தாதுக்கள் மீதான ஏகபோக உரிமையை முறியடிக்குமா என்பதே சர்வதேசப் பொருளாதாரத்தின் முன் உள்ள கேள்வி.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
