இந்திய நடுத்தர வர்க்கத்தின் நிதி பழக்கவழக்கங்கள் மிக வேகமாக மாறி வருகின்றன. இந்தியாவின் வரலாற்றில் முதல் முறையாக, குடும்ப கடன்கள் வீடு அல்லது தொழில்களுக்காக அல்லாமல், வாழ்க்கை முறை செலவுகளுக்காகவே அதிகளவில் வாங்கப்படுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, தனிநபர் கடன்கள் மற்றும் கிரெடிட் கார்டு கடன்களே தற்போது குடும்பங்களின் ஒட்டுமொத்த கடன்களில் மிகப்பெரிய பங்காக உள்ளன.
மார்ச் 2024 நிலவரப்படி, வீடு சாராத சில்லறை கடன்கள் குடும்ப கடன்களில் கிட்டத்தட்ட 55% பங்கை கொண்டுள்ளன. இதற்கு நேர்மாறாக, வீட்டுக் கடன்கள் 29% மட்டுமே உள்ளன, மேலும் விவசாயம் மற்றும் வணிகக் கடன்கள் சுமார் 16% உள்ளன.
பெர்சனல் லோன் என்று கூறப்படும் தனிநபர் கடன் அளவு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ரூ.3.9 லட்சமாக இருந்தது, இப்போது அது ரூ.4.8 லட்சமாக உயர்ந்துள்ளது. இந்த குடும்பக் கடன், தற்போது செலவழிக்கக்கூடிய தனிநபரின் வருமானத்தில் 25% க்கும் அதிகமாக உள்ளது. இது ஐந்து ஆண்டுகளுக்கு முந்தைய விகிதத்தை விட மிகவும் அதிகம்.
“என் பெற்றோர் தலைமுறைக்கு கடன்கள் பிடிக்காது. வாங்க முடியாவிட்டால், வாங்க மாட்டார்கள்,” என்று கான்சுவிட்ச் (Conswitch) இணை நிறுவனர் ஆஷிஷ் சிங்கிள் தனது சமூக வலைத்தள பதிவில் தெரிவித்துள்ளார். “அந்த இந்தியா இப்போது இல்லை” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த கருத்து, தலைமுறை மாற்றத்தை மிகச்சரியாகச் சுட்டிக்காட்டுகிறது. இப்போது இளைஞர்கள், வீடு போன்ற சொத்துக்களை வாங்குவதற்காக கடன் பெறுவதற்கு பதிலாக, வெளிநாட்டுப் பயணங்கள் அல்லது ஐபோன்களுக்கான இ.எம்.ஐ. செலுத்துவது என, அனுபவங்கள் மற்றும் அந்தஸ்துக்காகவே கடன் பெறுகிறார்கள்.
உடனடி கடன் வழங்கும் செயலிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் ‘இப்போதே வாங்கு, பிறகு செலுத்து’ (Buy Now Pay Later) திட்டங்கள் ஆகியவை மூலம் கடன் பெறுவது எளிதாகிவிட்டதால், “கட்டுமானத்திற்காக அல்ல, நுகர்வுக்காக நாம் கடன் வாங்குகிறோம்” என்று சிங்கிள் சுட்டிக்காட்டுகிறார்.
எளிதான கடன் அணுகுமுறை, நிதி பழக்கவழக்கங்களை மாற்றியமைக்கிறது. ஒரு காலத்தில் வருமானத்தில் 25% ஆக இருந்த இந்தியாவின் குடும்ப சேமிப்பு விகிதம் வேகமாக சரிந்து வருகிறது. வாழ்க்கை முறை பணவீக்கம், சகாக்கள் மத்தியில் இருக்கும் அழுத்தம் மற்றும் சம்பள உயர்வு இல்லாதது ஆகியவை மக்களை சேமிப்பை குறைத்துவிட்டு அதிகமாக செலவிடத் தூண்டுகிறது.
“உங்களுக்குத் தெரிந்த அனைவரும் பயணம் செய்கிறார்கள், மேம்பட்ட வாழ்க்கை வாழ்கிறார்கள். எனவே, நீங்களும் ஒரு கடன் வாங்குகிறீர்கள், ஒருமுறை, பிறகு மீண்டும்… அது சாதாரணமாகிவிடுகிறது,” என்று சிங்கிள் எச்சரிக்கிறார்.
2019 ஆம் ஆண்டு முதல் தனிநபர் கடன்கள், மற்ற கடன் வகைகளை விட மூன்று மடங்கு வேகமாக வளர்ந்துள்ளன. நிபுணர்கள், எளிதான கடன் அணுகல் நீண்ட கால அபாயத்தை மறைக்கிறது என்று எச்சரிக்கிறார்கள்.
“கடன்கள் ஒன்று சேரும். ஆனால் வாழ்க்கை முறையை எளிதில் மாற்ற முடியாது,” என்று சிங்கிள் கூறுகிறார். 20 மற்றும் 30 வயதில் சொத்துக்களை உருவாக்குவதற்கு பதிலாக, இ.எம்.ஐ. செலுத்துவதிலேயே செலவிட்ட இந்த தலைமுறைக்கு, 40 அல்லது 50 வயதை எட்டும்போது என்ன நடக்கும்?
இந்தியாவின் நுகர்வு கலாச்சாரம் நம்பிக்கையாக தோன்றினாலும், வருங்காலத்தில் கடன் என்று குண்டு வெடித்தால் பெரும் சிக்கலில் மாட்டிக்கொள்ள வாய்ப்பு உள்ளது. எனவே வெளிநாட்டு பயணம், ஐபோன் ஆகியவற்றை கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து செலவு செய்ய வேண்டும் என்றும் கடன் வாங்கி செலவு செய்யக்கூடாது என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
