பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த படுதோல்வி, தேசிய அளவில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் எதிர்கால அரசியல் கூட்டணிகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணி குறித்த தனது நிலைப்பாட்டை மிகவும் கறாராக மறுபரிசீலனை செய்து வருவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தற்போதைய அரசியல் சூழலில், காங்கிரஸ் கட்சியின் பலவீனம் மற்றும் அதன் தேசிய தலைமையின் தொடர் சறுக்கல்கள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, விஜய்யின் கட்சி ஒரு அதிர்ச்சிகரமான முடிவை நோக்கி நகர்வதாக தெரிகிறது.
விஜய் தலைமையிலான தவெக, தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தை எதிர்கொள்ளும்போது, காங்கிரஸை ஒரு சுமையாக கருத ஆரம்பித்துள்ளது. ராகுல் காந்தியின் தலைமை மற்றும் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள் காரணமாக, காங்கிரஸை ஒரு வலுவான தேசிய சக்தியாக காட்டுவது கடினம். தமிழகத்தில் திராவிட கட்சிகளுக்கு எதிராக போட்டியிடும்போது, பலவீனமான தேசிய கட்சியுடன் கூட்டணி அமைப்பது, தவெக-வின் ‘புதிய மாற்றம்’ என்ற பிம்பத்தைப் பாதிக்கலாம்.
இருப்பினும், முற்றிலும் காங்கிரஸை ஒதுக்கிவிடாமல், சில பிராந்திய அரசியல் சூழ்நிலைகளுக்காக மட்டும் உறவை தொடர விஜய் தரப்பு விரும்புவதாகத் தகவல். குறிப்பாக, கேரளாவில் மற்றும் புதுவையில் மட்டும் காங்கிரஸுடன் கூட்டணி அமைத்து கொள்ளலாம், ஆனால் தமிழகத்தில் அரசியல் ரீதியாக சுமையாக இருக்கும் காங்கிரஸை தவிர்க்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பிகாரில் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட படுதோல்விக்கு ராகுல் காந்தியின் தலைமையில் எடுக்கப்பட்ட தவறான முடிவுகளே காரணம் என்ற விமர்சனம் வலுத்துள்ளது. இந்த சூழலில், தமிழகத்தில் அவரை மையப்படுத்திய பிரச்சாரம், விஜய்யின் வெற்றிக்கு சாதகமாக அமையாது என்று தவெக அஞ்சுவதாக தெரிகிறது.
தற்போது காங்கிரஸ், திமுக கூட்டணியில் நீடிக்கிறது. ஆனால், பிகார் தோல்விக்கு பிறகு, அடுத்த தேர்தல்களில் காங்கிரஸுக்கு அதிக இடங்களை ஒதுக்க திமுக தலைமை தயக்கம் காட்டலாம்.வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு திமுகவிடம் இருந்து 10 தொகுதிகளுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்ற தகவல் அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்படுகிறது. இந்த எண்ணிக்கை, கடந்த காலங்களில் ஒதுக்கப்பட்ட தொகுதிகளை ஒப்பிடும்போது மிகவும் குறைவு.
திமுக கூட்டணியை விட்டு வெளியேறினால், தமிழகத்தில் தனித்து இயங்க தமிழக காங்கிரஸ்ஸிடம் போதுமான பலம் இல்லை. இதனால், அவர்கள் தற்போது திமுக கூட்டணியிலேயே தற்காப்பு நிலையில் இருக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
பல மாநிலங்களில் ஆளும் கட்சிகள் மீது அதிருப்தி நிலவும்போதும், அதை அறுவடை செய்ய முடியாத அளவுக்கு காங்கிரஸின் களப்பணி பலவீனமாக உள்ளது. இதன் விளைவாக, மாநில கட்சிகள் காங்கிரஸை ஒரு தேசிய எதிர்ப்பு குரலாகக் கருதாமல், ஒரு பலவீனமான கூட்டணி அங்கமாக மட்டுமே பார்க்கின்றன.
இந்தச் சூழலில், விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’, காங்கிரஸை நிராகரித்துவிட்டு, தனித்து போட்டியிடுவது அல்லது காங்கிரஸின் ஆதரவு இல்லாமல் புதிய சிறிய கட்சிகளுடன் கைகோர்ப்பது என்ற துணிச்சலான முடிவை எடுக்கக்கூடும். இது தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் பயணத்தை மேலும் கணிக்க முடியாத ஒன்றாக்கும்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
