பிகார் தேர்தல் தோல்வியால் தேசிய அளவில் பலவீனம் அடைந்துள்ள காங்கிரஸ் கட்சியை, வரவிருக்கும் 2026 தமிழக சட்டமன்ற தேர்தலில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றி கழகம்’ தனது கூட்டணியில் இணைப்பதை தீவிரமாக மறுபரிசீலனை செய்து வருவதாக அரசியல் வட்டாரங்களில் தகவல்கள் கசிந்துள்ளன. ஆரம்பத்தில் சில அரசியல் கட்சிகளுடன் கைகோர்க்க விஜய் திட்டமிட்டிருந்தாலும், தற்போதைய களச்சூழல் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தொடர் சரிவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, “தனித்தே மோதி பார்த்துவிடுவோம்” என்ற துணிச்சலான முடிவுக்கு அவர் வந்துள்ளதாக கூறப்படுகிறது.
பிகார் தேர்தல் முடிவுகள், இந்திய தேசிய காங்கிரஸின் தலைமை மற்றும் தேர்தல் இயந்திரத்தின் பலவீனத்தை மீண்டும் ஒருமுறை வெளிச்சம் போட்டுக் காட்டின. ஒரு வலுவான தேசிய சக்தியாக கருதப்பட்ட காங்கிரஸ், பல மாநிலங்களில் கூட்டணியில் சுமையாக மாறிவருவது, தவெக தலைவர் விஜயின் கவனத்தை ஈர்த்துள்ளது.
ஒருபுறம் தேசிய அளவில் வலுவற்ற, இன்னொருபுறம் தமிழகத்தில் மக்களின் பிரச்சினைகளுக்காக வீதியில் இறங்கி போராடாத காங்கிரஸ் கட்சியை தேவையில்லாமல் கூட்டணியில் ‘சுமக்க’ வேண்டிய அவசியம் இல்லை என்று தவெக தலைமை கருதுவதாகத் தெரிகிறது.
மக்கள் மத்தியில் ஒரு புரட்சிகர மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்குடன் களம் இறங்கும் தவெக-விற்கு, பழைமையான, விமர்சனங்களுக்கு உள்ளாகும் காங்கிரஸ் உடனான கூட்டணி, அதன் அடிப்படை நோக்கத்தை பலவீனப்படுத்தலாம் என்று விஜய் அஞ்சுவதாக கூறப்படுகிறது.
தனித்துப் போட்டியிடுவது என்ற விஜய்யின் முடிவுக்கு பின்னால், தமிழகத்தில் உள்ள இரண்டு பிரதான அரசியல் கூட்டணிகளின் தற்போதைய பலவீனங்கள் குறித்த தவெக-வின் கூர்மையான அரசியல் கணக்குகள் இருப்பதாக தெரிகிறது.
அ.தி.மு.க.வின் தலைமையில் பா.ஜ.க. தொடர்வது, மாநில அளவில் அந்த கூட்டணிக்குச் சாதகமாக இருக்காது என்று தவெக நம்புகிறது. பா.ஜ.க.வுக்கு எதிரான மனநிலை தமிழகத்தில் ஆழமாக வேரூன்றி உள்ளது. பா.ஜ.க. இருக்கும் பட்சத்தில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி, திமுக-வை எதிர்த்து நிற்கும் அளவுக்கு தேறாது என்றும், எனவே அந்தக் கூட்டணியில் இணைவது வீண் என்றும் விஜய் தரப்பு முடிவெடுத்துள்ளது.
ஆளுங்கட்சியான திமுக மீதும், அதன் சில முடிவுகள் மீதும் மக்கள் மத்தியில் ஒருவித அலுப்பு அல்லது அதிருப்தி நிலவுவதாக தவெக கருதுகிறது. இந்த அதிருப்தி, மக்கள் ஒரு வலுவான மூன்றாவது மாற்று சக்தியை தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை உருவாக்கலாம் என்றும், இந்த மாற்று சக்தி தாங்கள்தான் என்றும் தவெக நம்புகிறது.
தனித்துப் போட்டியிடுவதன் மூலம், “வரும் வாய்ப்பு வரட்டும்” என்ற துணிச்சலான நிலைப்பாட்டை விஜய் எடுத்துள்ளார். இதன் மூலம் அவர் நம்பும் அடிப்படை அரசியல் தத்துவம் இதுதான். “அ.தி.மு.க. கூட்டணியில் பா.ஜ.க. இருக்கிறது. தி.மு.க. மீது ஆட்சி மேல் அதிருப்தி இருக்கிறது. எனவே, தமிழக மக்கள் நிச்சயமாக ஒரு புதிய மாற்று தலைமைக்காக காத்திருக்கிறார்கள். மக்கள் நம்மை தான் தேர்ந்தெடுப்பார்கள்.”
தற்போதைய அரசியல் வெற்றிடத்தை பயன்படுத்தி, தனித்து போட்டியிடுவதன் மூலம் மட்டுமே தனது முழுமையான அரசியல் பலத்தையும், மக்களின் அபிமானத்தையும் நிரூபிக்க முடியும் என்று விஜய் நம்புவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த காரணங்களின் அடிப்படையில், ஆரம்பத்தில் ஒரு வலுவான கூட்டணி அமைக்கலாம் என்று திட்டமிட்டிருந்த விஜய், தற்போது தனது முடிவை மாற்றிக்கொண்டு, 2026 தேர்தலை தனித்து எதிர்கொள்ளும் துணிச்சலான வியூகத்தை வகுக்க வாய்ப்புள்ளது. இது தமிழக அரசியலில் ஒரு புதிய மற்றும் கணிக்க முடியாத சகாப்தத்தை தொடங்கலாம்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
