பார்ட் டைம் அரசியல்.. திடீரென வெளிநாட்டுக்கு காணாமல் போவது.. இந்தியாவையும் ராணுவத்தையும் குறை சொல்வது.. ஆதாரமே இல்லாமல் சொல்லும் வாக்கு திருட்டு குற்றச்சாட்டு.. டிரம்புக்கும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுவது.. இதெல்லாம் வேலைக்கு ஆகாது ராகுல் காந்தி.. காங்கிரஸ் கட்சிக்குள்ளே எழும் கடும் விமர்சனம்..!

பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தொடர் தோல்விகளுக்கு பிறகு, கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை மற்றும் தலைமை பாணி குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே கடுமையான விமர்சனங்கள்…

rahul

பிகார் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அடைந்த தொடர் தோல்விகளுக்கு பிறகு, கட்சியின் முக்கிய தலைவர் ராகுல் காந்தியின் அரசியல் அணுகுமுறை மற்றும் தலைமை பாணி குறித்து காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. அவரது ‘பகுதி நேர அரசியல்’ பாணி, திடீர் வெளிநாட்டு பயணங்கள், வெளிநாடுகளில் இந்தியாவை பற்றி வைக்கும் விமர்சனங்கள், மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் ஆகியவை கட்சிக்கு தொடர்ந்து பின்னடைவையே ஏற்படுத்துவதாக மூத்த தலைவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

ராகுல் காந்தி தனது அரசியல் செயல்பாடுகளில் முழு ஈடுபாட்டுடன் இல்லாமல், முக்கிய தேர்தல்கள் அல்லது அரசியல் நெருக்கடிகளின்போது திடீரென காணாமல் போய்விடுவதும், வெளிநாடுகளுக்கு செல்வதும் கட்சிக்குள் பெரும் சோர்வை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் மிகப்பழமையான மற்றும் முக்கிய எதிர்க்கட்சியாக இருக்கும் காங்கிரஸுக்கு, 24/7 செயல்படும் ஒரு தலைவர் அவசியம். ஆனால், ராகுல் காந்தி முக்கிய தருணங்களில் இல்லாதது, கட்சியின் செயல்பாடுகளை பாதிக்கிறது.

சமீபத்தில் நடந்த பிகார் தேர்தலில், ராகுல் காந்தி மேற்கொண்ட பிரசார தொகுதிகளில் கூட காங்கிரஸ் தோல்வியை தழுவிய நிலையில், அவரது கவனச்சிதறல் கொண்ட அணுகுமுறையே இந்த முடிவுக்கு காரணம் என்று கட்சிக்குள் பேசப்படுகிறது.

ராகுல் காந்தி வெளிநாடுகளில் பேசும்போது, இந்தியாவின் உள்நாட்டு ஜனநாயக கட்டமைப்பை விமர்சிப்பதோடு மட்டுமல்லாமல், இந்திய ராணுவத்தின் செயல்பாடுகள் குறித்தும் கேள்விகளை எழுப்புவது கட்சிக்குள் உள்ள தேசிய உணர்வு கொண்ட தலைவர்களுக்கு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

மோடி மற்றும் பாஜக-வை கடுமையாக விமர்சிக்கும் நோக்கில் அவர் பேசினாலும், அது பெரும்பாலும் இந்திய நாட்டை குறை சொல்வது போல காட்சியளிக்கிறது. இது, ‘ராகுல் மோடியை எதிர்க்கவில்லை, இந்தியாவையே எதிர்க்கிறார்’ என்ற பாஜகவின் பிரச்சாரத்தை வலுப்படுத்துகிறது.

குறிப்பாக இந்திய ராணுவம் குறித்து விமர்சனம் எழுப்புவது, நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை மீதான கேள்விகளாக பார்க்கப்பட்டு, பெரும்பாலான வாக்காளர்களின் தேசியவாத உணர்வுகளை புண்படுத்துகிறது. வெளிநாடுகளில் இவ்வாறு விமர்சனம் செய்வது, உள்நாட்டில் காங்கிரஸ் மீதான நம்பகத்தன்மையை கடுமையாக சிதைக்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா-பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்ற கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பது, பாகிஸ்தான் ராணுவம் இந்திய விமானஙளை சேதப்படுத்தியதாக கூறுவது போன்ற சில கருத்துகளை ராகுல் காந்தி முன்வைப்பது தேசிய அரசியலில் அவருக்கு சாதகமாக இல்லாமல், பெரும் சர்ச்சைகளையும் எதிர்ப்பையும் மட்டுமே ஈட்டுகின்றன.

சமீபகாலமாக, ராகுல் காந்தி “வாக்கு திருட்டு” குற்றச்சாட்டுகளை தொடர்ந்து முன்வைத்து வருகிறார். தேர்தல் தோல்விகளுக்கு நேர்மையான காரணங்களை ஆராயாமல், தேர்தல் ஆணையம் மீது பழியை சுமத்துவது, கட்சியை நடத்தியவர்களுக்கு தோல்வியை கற்கும் திறனோ அல்லது பொறுப்பேற்கும் மனப்பான்மையோ இல்லை என்பதை காட்டுவதாக மூத்த தலைவர்கள் கருதுகின்றனர். ஒருவேளை வாக்கு திருட்டு உண்மையாக இருந்தால் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம் அல்லது தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கலாம், அதை செய்யாமல் மக்கள் மத்தியில் ஒரு பவர்பாயிண்ட் வீடியோவை காண்பித்து எந்தவித அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றஞ்சாட்டுவதை இந்திய மக்கள் ரசிக்கவில்லை.

ராகுல் காந்தியின் தனிப்பட்ட அரசியல் பாணிக்கும், இந்திய அரசியல் யதார்த்தத்திற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி இருப்பதாக கட்சிக்குள் ஒருமித்த கருத்து நிலவுகிறது. கட்சியில் உள்ள பல தலைவர்கள், ராகுல் காந்தி தனது அணுகுமுறையில் உடனடியாக மாற்றங்களை செய்ய வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர் தனது கவனத்தைத் தேசிய அரசியலிலும், களப்பணியிலும் நிலைநிறுத்த வேண்டும். தேசியவாதத்தைக் கையில் எடுக்க வேண்டும்: பாஜகவை விமர்சிக்கும்போது, தாங்களும் தேசப்பற்றின் மீது நம்பிக்கை கொண்டவர்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். தோல்விகளுக்கு வெளிப்படையாக பொறுப்பேற்று, கட்சியை மறுசீரமைக்க வேண்டும்.

இந்த விமர்சனங்கள் அனைத்தும், ராகுல் காந்தி தனது தற்போதைய பாணியை தொடர்ந்தால், இந்தியாவில் எந்த ஒரு மாநிலத்திலும் காங்கிரஸ் கட்சியால் ஆட்சிக்கு வர முடியாது என்ற எதார்த்தமான எச்சரிக்கையாகவே பார்க்கப்படுகின்றன.