சர்வதேச வர்த்தகம் பெரும் சவால்களை எதிர்கொண்டுள்ள இச்சமயத்தில், இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு புத்துயிர் அளிக்கும் விதமாக, மத்திய அரசு மொத்தம் ரூ. 45,000 கோடி மதிப்பிலான இரண்டு மாபெரும் திட்டங்களுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. உலகளாவிய பொருளாதார பின்னணியில் அமெரிக்காவின் வரி கொள்கை மாற்றங்களுக்கு பதிலளிக்கும் வகையில் இந்த திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல் திட்டம்: ஏற்றுமதியாளர்களுக்கான கடன் உத்தரவாத திட்டம்
ஏற்றுமதியாளர்களுக்கு, குறிப்பாக குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு நிதி தேவையை எளிதாக்கும் நோக்கத்துடன் இந்தக் கடன் உத்தரவாத திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த திட்டத்தின் கீழ், தகுதியுள்ள ஏற்றுமதியாளர்களுக்கு வங்கிகள் வழங்கும் ரூ. 20,000 கோடி வரையிலான கூடுதல் நடைமுறை மூலதன கடன்களுக்கு, மத்திய அரசு 100% உத்தரவாதத்தை அளிக்கும்.
ஏற்றுமதியாளர்கள் தங்கள் அனுமதிக்கப்பட்ட ஏற்றுமதி கடன் வரம்புகளில் 20% வரை கூடுதல் நடைமுறை மூலதனத்தை இந்த திட்டத்தின் மூலம் பெறலாம். இந்த சலுகை அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நடைமுறையில் இருக்கும். இந்த கடன் ஆதரவு பிணை தேவையில்லாத கடன் ஆகும். இதன் நோக்கம், தடைகளை குறைத்து, ஏற்றுமதியாளர்களுக்கு விரைவான ஆதரவை வழங்குவதாகும்.
இரண்டாவது திட்டம்: ஏற்றுமதி மேம்பாட்டுப் பணி
இரண்டாவது பெரிய நடவடிக்கை, ரூ. 25,000 கோடி செலவில் தொடங்கப்படும் ‘ஏற்றுமதி மேம்பாட்டு பணி’ ஆகும். இது 2026 நிதி ஆண்டு முதல் 2031 நிதி ஆண்டு வரை செயல்படுத்தப்படும். இந்தத் திட்டத்தில் இரண்டு துணைத் திட்டங்கள் அடங்கும்:
நிராயத் ப்ரிட்சாஹன் (ரூ. 10,400 கோடி): இது வர்த்தக நிதி , ஏற்றுமதி காரணி , வட்டி மானியம் மற்றும் ஏற்றுமதி கடன் ஆதரவு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
நிராயத் திஷா (ரூ. 14,660 கோடி): இது நிதி அல்லாத ஆதரவுகளில் அதிக கவனம் செலுத்துகிறது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய ஏற்றுமதி பொருட்கள் மீது வரி விதிப்பை அதிகரித்ததற்கு நேரடியாக பதிலளிக்கும் விதமாகவே இந்த ஆதரவு தொகுப்பு வந்துள்ளது. அமெரிக்கா இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக பங்காளராக இருப்பதால், இந்த புதிய வரிகள் பொறியியல் பொருட்கள் மற்றும் ஜவுளி போன்ற முக்கிய துறைகளை வெகுவாக பாதித்துள்ளன. கடந்த இரண்டு மாதங்களாக அமெரிக்காவிற்கான ஏற்றுமதி கணிசமாக குறைந்துள்ளதால், இந்த திட்டம் ஒரு பாதுகாப்பு அரணாக பார்க்கப்படுகிறது.
மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “இந்த திட்டங்கள் ஏற்றுமதியாளர்கள் பல்வகைப்படுத்தவும், ஒரு தற்சார்புள்ள மற்றும் ஏற்று கொள்ளும் பொருளாதாரத்தை உருவாக்கவும் உதவும்” என்று தெரிவித்தார். ஜவுளி, தோல், ரத்தினங்கள் மற்றும் நகைகள் போன்ற அதிக தொழிலாளர்கள் சார்ந்த துறைகளில் உள்ள MSME-களுக்குக் கடன் கிடைப்பது எளிதாகிறது. உலகளவில் வரி அழுத்தங்கள் அதிகரித்து வரும் நிலையில், இது ஒரு பாதுகாப்பு கவசமாக செயல்படும்.
மொத்தத்தில், ரூ. 20,000 கோடி உத்தரவாத கடன் மற்றும் ரூ. 25,000 கோடி ஏற்றுமதி மேம்பாட்டு சீர்திருத்தங்கள் மூலம், வர்த்தக புயலை எதிர்கொள்ள இந்தியா தனது வேகத்தை மாற்றுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
