அண்மையில் பாகிஸ்தான் அணு ஆயுத சோதனை நடத்தியதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்த கருத்துகள் மற்றும் அதை தொடர்ந்து இந்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கொடுத்த மறைமுக எச்சரிக்கை ஆகியவை, இந்தியாவின் அணு ஆயுத திறன்கள் குறித்த புதிய விவாதத்தை உலக அரங்கில் உருவாக்கியுள்ளன. அமெரிக்காவின் முக்கிய ஆய்வு குழுக்கள், இந்தியா அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அணு ஆயுத தொழில்நுட்பத்தில் மிக வேகமாக வளர்ச்சி அடைந்துள்ளது என்று தெரிவித்துள்ளன.
சமீபத்திய புவிசார் அரசியல் ஆய்வுகளை மேற்கோள் காட்டி அமெரிக்க சேனல்கள் விவாதித்ததில், இந்தியா தடுக்க முடியாத அளவுக்கு அணு ஆயுத துறையில் மேம்பாடுகளை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு அடிப்படையாக கருதப்படுவது, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் பியர்ஸ் மார்கன் என்பவருக்கு அளித்த பேட்டி தான்.
ஜெய்சங்கர் அப்போது அளித்த பதில், இந்தியாவின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியது. “1999 இல் உங்கள் பொருளாதார தடைகள் இருந்தபோதும், எந்த தொழில்நுட்பத்தையும் இந்தியாவுக்கு தராத போதும், நாங்கள் அணு ஆயுதங்களை சோதித்தோம். எனவே, இப்போது நீங்கள் எங்களால் எதுவும் செய்ய முடியாது என்று நினைக்கிறீர்களா?” என்று அவர் மறைமுகமாக அமெரிக்காவை எச்சரித்தார்.
ஸ்டாக்ஹோம் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் ரிசர்ச் (SIPRI) நிறுவனத்தின் அறிக்கைப்படி, இந்தியாவிடம் தோராயமாக 130 அணு ஆயுதங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், அமெரிக்காவின் சமீபத்திய பகுப்பாய்வின்படி, இந்தியாவிடம் 156 அணு ஆயுதங்கள் இருந்த நிலையில், கடந்த 18 மாதங்களில் மட்டும் 16 முதல் 18 அணு ஆயுதங்களை உருவாக்கி, மொத்த எண்ணிக்கையை 172 ஆக உயர்த்தியுள்ளது. இது சீனா அல்லது வேறு எந்த நாட்டையும் விட அதிவேகமான உற்பத்தித் திறன் என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவின் வல்லுநர்கள், இந்தியா பூமியின் அடியில் சுமார் 3 கிலோமீட்டர் ஆழத்தில் ஒரு ரகசிய அணு ஆயுத உற்பத்தி மையத்தை அமைத்துள்ளதாக சந்தேகிக்கின்றனர். அணு ஆயுதங்களை ஏவுவதில் உள்ள மிக பெரிய சவாலை முறியடிக்கும் வகையில், இந்தியா கோல்ட் லான்ச் கேனிஸ்டர் பேஸ்டு மிசைல் சிஸ்டம் என்ற அதிநவீன தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது. பொதுவாக ஒரு ஏவுகணை ஏவப்படும்போது ஏற்படும் வெப்பத்தை வைத்துதான் எதிரி நாடுகள் அதனை செயற்கைக்கோள்கள் மூலம் கண்டுபிடித்து, தடுக்கும் நடவடிக்கைகளை எடுக்கும். ஆனால் இந்தியாவின் ‘கோல்ட் லான்ச்’ தொழில்நுட்பத்தில், ஏவுகணை ஏவப்படும் முதல் 4.5 வினாடிகளுக்கு எந்தவிதமான வெப்பப் பதிவும் இருக்காது. இந்த இடைவெளியில் ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்ந்து, அதன் பிறகு அதன் ராக்கெட் எஞ்சின் ஆன் செய்யப்படும்.
இந்த தொழில்நுட்பம், எதிரி நாடுகளின் ரேடார்களும், செயற்கைக்கோள்களும் ஏவுகணையை புறப்படும் நேரத்திலேயே கண்டறிய முடியாமல் செய்கிறது. எனவே, சரியான நேரத்தில் கண்டறிய முடியாத ஏவுகணையை தடுக்கவும் முடியாது.
இந்தியா தனது இரண்டாவது தாக்குதல் திறனை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தி வருகிறது. ஒரு நாடு இந்தியா மீது அணு ஆயுத தாக்குதல் நடத்தினால், பதிலுக்கு பெரும் தாக்குதலை நடத்தும் திறன் இது. அணுசக்தி முக்கோணத்தில் நிலம், வான், கடல் என மூன்று தளங்களில் இருந்து அணு ஆயுதங்களை ஏவும் திறன் அவசியம். நிலம் மற்றும் வான் தளங்களை தாக்கி அழித்தாலும், ஆழ்கடலில் மறைந்திருக்கும் நீர்மூழ்கி கப்பல் மூலமாக பதிலடி கொடுக்க முடியும்.
இதற்காக இந்தியாவின் அணுசக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்களான ஐ.என்.எஸ். அரிகந்த் மற்றும் அரிகாட் தயார் நிலையில் உள்ளன. இவை K-4 ரக ஏவுகணைகளை சுமந்து செல்லும் திறன் கொண்டவை. K-4 ஏவுகணைகள் 3,500 கி.மீ தூரம் வரை சென்று அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் வல்லமை கொண்டவை. நீர்மூழ்கி கப்பலை முதலில் எதிரிகள் கண்டறிவதே சவாலான பணி. அதை தாண்டி, ஏவப்படும் ஏவுகணையை தடுக்கவும் முடியாது. இந்தத் திறன் இந்தியாவின் ஆதிக்கத்தை ஹார்முஸ் ஜலசந்தி முதல் தென் சீனக் கடல் பகுதி வரை நீட்டிக்கிறது.
ஜெய்சங்கர் அவர்களால் பேசப்பட்ட “We built them while being sanctioned, what do you think we can do now that we are not?” (தடைகள் இருந்தபோதே எங்களால் அவற்றை உருவாக்க முடிந்தது என்றால், இப்போது எங்களால் என்ன செய்ய முடியும் என்று நினைக்கிறீர்கள்?) என்ற இந்த வெளிப்படையான சவால், உலக வல்லரசுகள் இந்தியாவுக்கு கட்டுப்பட வேண்டும் என்ற செய்தியை தெளிவாக உணர்த்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
