தமிழக வெற்றி கழகம் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையேயான கூட்டணி பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும், விஜய், ராகுல் காந்தி ஆகிய இரு தலைவர்களுக்குமிடையே ஓர் இயற்கையான கூட்டணியை உருவாக்கும் நோக்கில் பேச்சுவார்த்தைகள் தீவிரமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
த.வெ.க தலைவர் விஜய் மற்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோரின் நேரடி தலையீட்டினால் இந்த கூட்டணி பயணம் படு நெருக்கமாகி இருப்பதாக கூறப்படுகிறது.
த.வெ.க தலைவர் விஜய்யின் பிறந்தநாள் மற்றும் மதுரையில் நடைபெற்ற கட்சியின் மாநாடு ஆகிய முக்கிய நிகழ்வுகளின்போது ராகுல் காந்தி, விஜய்யுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இது இரு தலைவர்களுக்கும் இடையேயான ஆரம்ப உறவை பலப்படுத்தியது. தொலைபேசி உரையாடல்களை தொடர்ந்து, இரு கட்சிகளின் மூத்த நிர்வாகிகள் மட்டத்திலான சந்திப்புகள் பலமுறை நடந்துள்ளன:
தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் ஜோடங்கர் அவர்கள், த.வெ.க-வின் முக்கிய நிர்வாகிகளான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியோரை பலமுறை சந்தித்து தமிழ்நாட்டின் அரசியல் சூழல் குறித்து ஆலோசித்துள்ளார். டெல்லியிலும் இந்த கூட்டணியை உறுதிப்படுத்தும் விதமாக சில உயர்நிலை சந்திப்புகள் நடந்துள்ளன.
ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவரும், ‘தொழில் வல்லுநர் காங்கிரஸ்’ பிரிவின் தலைவருமான பிரவீன் சக்கரவர்த்தி, ராகுல் காந்தி சொல்லியனுப்பிய முக்கிய தகவல்களை விஜய்யிடம் நேரடியாக கொண்டுபோய்ச் சேர்த்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.
கரூர் துயரச் சம்பவம் நிகழ்ந்த பிறகு, இரு கட்சிகளுக்கும் இடையேயான இந்த உறவுநிலை இன்னும் பலமடைந்து, கூட்டணி பேச்சுவார்த்தைகள் படு நெருக்கமான நிலையை அடைந்துள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு, ராகுல் காந்தியின் நம்பிக்கைக்குரியவரான பைஜூ சென்னைக்கு வருகை தந்தார் என்றும், ராகுலின் ‘பாரத் ஜோடோ யாத்திரை’யை முழுவதுமாக நிர்வகித்த இவர், விஜய்யை சந்தித்து, கரூர் சம்பவம் தொடர்பாக சில முக்கிய ஆலோசனைகளை வழங்கியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த சந்திப்புகளை தொடர்ந்து, த.வெ.க நிர்வாகிகளுடன் பேசிய கிரிஷ் ஜோடங்கர், “டிசம்பர் இறுதிக்குள் எல்லாம் நல்லபடியாக நடக்கும். உங்களுடனான பயணத்துக்கு ஆர்வமாக இருக்கிறோம்” என்று மிக உறுதியான மற்றும் நேர்மறையான தகவலை தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
ராகுல் காந்தியும் விஜய்யும் இந்த கூட்டணியை வெறும் தொகுதி பங்கீடு, கூட்டணி ஆட்சி போன்ற அரசியல் கணக்குகளுக்கு அப்பால், ஒரு இயற்கைக் கூட்டணியாகவே பார்க்கிறார்கள். இந்தக் கூட்டணி வெறும் தமிழ்நாட்டு அளவில் மட்டுமல்லாமல், புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா என்று தென்னிந்தியா முழுவதும் காங்கிரஸுக்கும் த.வெ.க-வுக்கும் பலனளிக்கும் என்று ராகுல் காந்தி நம்புகிறார்.
ராகுல் காந்தி இந்த கூட்டணி உறவை எவ்வளவு நம்புகிறாரோ, அதே அளவுக்கு நடிகர் விஜய்யும் காங்கிரஸுடனான பயணத்தை மலைபோல நம்பியிருக்கிறாராம். இந்த ஆழமான அரசியல், தலைவர்கள் மட்டத்திலான நம்பிக்கை மற்றும் ஒருமித்த இலக்கு ஆகியவை, த.வெ.க – காங்கிரஸ் கூட்டணி விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படலாம் என்பதற்கான வலுவான அறிகுறிகளாக உள்ளன.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
