கொலம்பியா அதிபர் குஸ்டாவோ பெட்ரோ சமீபத்தில் ஆற்றிய உரையில், காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் வெறுமனே பிராந்திய பிரச்சினை அல்ல என்றும், உலக மக்களுக்கு அடுத்து என்ன வரப்போகிறது என்பதை காட்டுவதற்கான ஒரு சோதனை என்றும் மிக கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் தனது பேச்சில், உலகளாவிய முதலாளித்துவம் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் வன்முறை குறித்தும் பேசினார்.
அவர் மேலும் பேசியபோது “காசாவில் வீசப்பட்ட கொலம்பியா நிலக்கரி குண்டுகள், இஸ்ரேல்-பாலஸ்தீனிய வரலாற்று பிரச்சினைக்காக மட்டுமல்ல. அடுத்து என்ன நடக்க போகிறது என்பதைக் காட்ட நமக்கு நடத்தப்பட்ட ஒரு சோதனை அது. காசாவில் நாம் பார்ப்பது, உலக அதிகாரத்தை ஏந்தாத உழைக்கும் மற்றும் ஏழை மக்களின் கண்டங்களில், தெற்கில் நடக்கும். அவர்கள் தங்கள் கொடூரத்தையும், காட்டுமிராண்டித்தனத்தையும் நமக்கு காட்டுகிறார்கள்.”
“உலகில் ஜனநாயகம் இறந்துவிட்டது. ஆதிக்கம் செலுத்துவது காட்டுமிராண்டித்தனம் மட்டுமே. இது, பிறப்பிலிருந்தே லாபத்தை அதிகரிப்பதை மட்டுமே தன் சட்டமாக கொண்ட முதலாளித்துவத்தின் உற்பத்தி அமைப்பின் நெருக்கடி. கிரகத்தின் உயிரை பாதுகாப்பதை விட, லாபத்தை அதிகரிக்கவே அவர்கள் விரும்புகிறார்கள்.”
பெட்ரோ தொடர்ந்து பேசுகையில், இந்த காரணத்தினால்தான் செல்வந்த நாடுகள் எண்ணெய், நிலக்கரி, மற்றும் எரிவாயுவை கைவிட மறுக்கின்றன என்றும், பேராசையின் அளவை குறைக்க மறுக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.
“அதனால் தான் அவர்கள் ஒரு ஏழை மக்களின் சிறுவர், சிறுமிகள் மீது நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஏவுகணைகளை ஏவ துணிகிறார்கள். இது உலகிற்கான ஒரு அனுபவம், காட்டுமிராண்டித்தனமான சக்தியின் வெளிப்பாடு.”
டிரம்ப் மற்றும் பிற அமெரிக்கத் தலைவர்கள் போதைப்பொருள் கடத்தல்காரர்களை கொல்வதாக கூறுவதை பெட்ரோ கடுமையாக மறுத்தார். சாண்டா மார்டா அருகே ஏவுகணை தாக்குதலில் கொல்லப்பட்ட அலெஜான்ட்ரோ கொரான்சா என்ற ஏழை மீனவரின் கதையை அவர் எடுத்துரைத்தார்.
“ஏவுகணையால் தாக்கி கொல்லப்பட்ட அவர், போதைப்பொருள் கடத்தல்காரர் என்று யாரும் கூற முடியாது. இவர் தன் மகளை படிக்க வைத்து பெரிய ஆளாக்க நினைத்த ஒரு ஏழை மீனவர்.”
டிரம்ப் ஒரு பொய்யர். அவர் கொல்வது போதைப்பொருள் கடத்தல்காரர்களை அல்ல. உண்மையான கடத்தல்காரர்கள் தங்கள் அரசியல்வாதிகள் மூலம் மியாமியில் உள்ள அலுவலகங்களுக்கு சென்று, எங்களையும் குண்டு வீசுமாறு கோருகிறார்கள்.”
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாட்டின் அதிபரை இழிவுபடுத்த முயல்வதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப்பை ஒரு பொய்யர் என மோடியால் சொல்ல முடியுமா? என ராகுல் காந்தி உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கூறிய நிலையில், மோடி அவ்வாறு சொல்லவில்லை.. ஆனால் மோடி சொல்ல நினைத்ததை கொலம்பியா அதிபர் தைரியமான சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
