இந்திய விமானப் படையின் 93வது ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள், கவுகாத்தியில் உள்ள லாச்சித் காட் அருகே பிரம்மபுத்திரா நதியின் மேலே கண்கவர் விமான சாகசங்களுடன் நடைபெற்றது. கவுகாத்தி வரலாற்றில் இவ்வளவு பெரிய அளவில் முழு அளவிலான விமான சாகச நிகழ்ச்சி நடைபெறுவது இதுவே முதல்முறை ஆகும்.
கிழக்கு விமான படையால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வைக் காண, நதிக்கரையோரத்திலும், அருகிலுள்ள சாலைகளிலும் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். விமான படையின் வலிமைமிக்க ஹெலிகாப்டர்கள், போக்குவரத்து விமானங்கள் மற்றும் போர் ஜெட் விமானங்கள் சாகசங்களை செய்தன.
“அசைக்க முடியாதது, தோல்வியடையாதது மற்றும் துல்லியமானது” (Infallible, Impervious & Precise) என்ற கருப்பொருளின்படி, வானில் அற்புதமான விமான வடிவங்கள் அணிவகுத்தன.Su-30, ரஃபேல், தேஜஸ், மிராஜ், மிக்-29, ஜாகுவார், ஹாக், அப்பாச்சி ஹெலிகாப்டர், Mi-17, C-295, C-130, C-17, IL-78, AN-32, AEW&C, டோர்னியர் மற்றும் விண்டேஜ் ஹார்வர்ட் விமானங்கள் இந்த சாகசங்களில் பங்கேற்றன.
குறிப்பாக, ஹார்வர்ட், சுகோய்-30 மற்றும் ரஃபேல் விமானங்கள் மிகவும் குறைந்த உயரத்தில் மேற்கொண்ட வியக்க வைக்கும் சாகசங்கள் பார்வையாளர்களை பெரிதும் கவர்ந்தன. சாரங் ஹெலிகாப்டர் அணி துல்லியமான சாகசங்கள் மூலம் பார்வையாளர்களை பரவசப்படுத்தியது. அதைத் தொடர்ந்து, சூர்யகிரண் சாகச அணி மற்றும் ஏர் வாரியர் ட்ரில் அணி ஆகியவற்றின் செயல்பாடு இடி முழக்கம்போன்ற கரவொலியைப் பெற்றது.
இந்த நிகழ்வில் 48 வெளிநாட்டு இராணுவ அதிகாரிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இதில் அசாம் ஆளுநர் லக்ஷ்மண் பிரசாத் ஆச்சார்யா, முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, விமானப் படைத் தளபதி ஏ.பி. சிங் மற்றும் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “எல்லையற்ற சி-17 முதல் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட தேஜஸ் வரை, துணிச்சல், திறன் மற்றும் தற்சார்பு இந்தியாவின் உணர்வை வெளிப்படுத்தும் மூச்சடைக்க வைக்கும் காட்சி” என்று ‘எக்ஸ்’ தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த சாகச நிகழ்ச்சி குறித்து விமானப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில், இந்த ஆண்டு விமானப்படை தின கொண்டாட்டங்களுக்காக வடகிழக்குப் பகுதி தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியக் காரணம் உள்ளது. இந்திய விமானப் படையில் வடகிழக்கு பகுதியைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பும் பிரதிநிதித்துவமும் அதிகமாக உள்ளது. வடகிழக்கு மக்களுடன் விமானப்படையின் உறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக, ஒரு மரியாதை சைகையாகவே இந்த பிராந்தியம் தேர்ந்தெடுக்கப்பட்டது.
டெல்லியை விட்டு வெளியே நடத்தப்படும் தொடர்ச்சியான நான்காவது விமானப்படை தின கொண்டாட்டம் இது என்றும், வடகிழக்குப் பகுதியில் நடத்தப்படுவது இதுவே முதல்முறை என்றும் அதிகாரி குறிப்பிட்டார். விமானப்படை நீண்ட காலமாகவே வடகிழக்கு பகுதியில் சாகசங்களை நடத்த திட்டமிட்டு வந்தது. இதற்காகவே, வழக்கமாக அக்டோபரில் நடைபெறும் கொண்டாட்டத்தின் நேரத்தை கூட நவம்பர் மாதத்திற்கு மாற்றியுள்ளனர்.
கவுகாத்தியில் மக்கள் அளித்த ஆதரவு மற்றும் வரவேற்பால் விமானப் படை மிகவும் ஆச்சரியமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பிரம்மாண்ட சாகச நிகழ்ச்சி, இளம் தலைமுறையினரை இந்திய விமானப்படையில் சேர ஊக்குவிக்கும் என்று பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.
விமானப் படை அதிகாரி, நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அத்துடன், இனிமேல் வடகிழக்கு ஒரு தொலைதூர பகுதி இல்லை என்றும், விமானப்படை இனி அடிக்கடி இந்தப் பகுதிக்கு வரும் என்றும் உறுதியளித்தார். மேலும் அருணாச்சல பிரதேசம் உள்பட வடகிழக்கில் உள்ள மாநிலங்களை கைப்பற்றலாம் என்று நினைக்கும் எதிரி நாடுகளுக்கு ஒரு பதிலடியாகவும், மறைமுக எச்சரிக்கையாகவும் இந்த விமான சாகச நிகழ்ச்சி அரங்கேறியுள்ளதாக கூறப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
