நாம் நெருங்கிப் பழகியவர்களிடம் ஒரு தவறு செய்யும்போது மன்னிப்பு கேட்க மாட்டோம். ஏன்னா கேட்கத் தேவையே இல்லை. இதற்கு ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது என்னன்னா அவர் ஏற்கனவே நம்மை மன்னித்திருப்பார். அந்தளவு உயர்ந்த குணம் படைத்தவராகவே நெருங்கிய நண்பர் இருக்க முடியும். அதனால் அவரும் இவன் ஒரு சாரி கூட கேட்கவில்லையே என சங்கடப்பட மாட்டார்.
ஒரு பச்சை மரத்தின் ஜீவாதார சாறு வெகு தொலைவில் உள்ள கிளைகளுக்குச் செல்கிறது. அது கிளைகளைத் தளிர்க்கச் செய்கிறது. அது போல நாம் நல்ல செயல்களைச் செய்யும்போது நம் வாழ்க்கை முழுவதும் அதற்கான பலன் கிடைத்து விடும். அதனால் நமது வாழ்க்கையும் வளம் பெறும்.
தீவிர ஆசையால் வெற்றி பெறும் காரியங்களை எடுத்துக் கொண்டால் அது சொற்பமாகவே இருக்கும்.
அதே நேரம் அமைதியாக முன்னாடியே யோசனை செய்து வெற்றிகரமாக முடித்த காரியங்கள் மிகவும் அதிகமாக இருக்கும்.
மூடர்கள் தான் எந்தவித முன் யோசனையும் இன்றி காரியங்கள் செய்து தோல்வியில் துவள்வார்கள். அதே நேரம் முன் யோசனை மட்டுமே செய்து கொண்டு காரியத்தில் ஈடுபடாதவன் மிகவும் துயரத்தில் துவண்டு கொண்டே இருப்பான்.
உலகிலேயே மனித வாழ்க்கையே உயர்ந்தது. உன்னதமானது என்பதை நாம் மறக்கக்கூடாது. இடைவிடாமல் நம் புலன்கள், புத்தி, உடல், ஒழுக்க முறை ஆகிய கருவிகளை நாம் உபயோகித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
எந்த ஒரு கருவியையும் உபயோகித்துக் கொண்டே இருந்தால்தான் அது துருப்பிடிக்காமல் இருக்கும். அப்படித்தான் இந்த கருவிகளையும் நாம் உபயோகித்துக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்வதால் அந்தக் கருவிகள் பயனற்றுப் போகாமலும் இருக்கும்.
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையும் ஒரு தேவதைக் கதை. அதை எழுதிய விரல்கள் ஆண்டவன் உடையவை என ஒரு அறிஞர் கூறுகிறார். அதனால் ஆண்டவனால் எழுதப்பட்டு இருக்கும் நம் வாழ்க்கையைக் கவனித்து அதை நல்ல முறையில் பயன்படுத்தினால் வாழ்வில் வளம் பல பெறலாம்.
முக்கியமாக இதில் கவனிக்க வேண்டியது என்னவெனன்றால் நாம் முதலில் நமது செயல்களை நன்கு அறிந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் அதை நன்றாகப் புரிந்து கொள்ள முடியும். அதன் தொடர்ச்சியாகத் தான் நாம் செய்ய வேண்டிய செயல்களை திறம்பட எந்த வித தவறும் இல்லாமல் நேர்த்தியாக செய்ய முடியும்.
பிரிண்ட் மீடியாவில் 7 ஆண்டுகளும் டிஜிட்டல் மீடியாவில் 8 ஆண்டுகளும் பணிபுரிந்து உள்ளேன். செய்திகள், பொழுதுபோக்கு, ஆன்மிகம், சிறப்புக்கட்டுரை கள், வாழ்க்கை முறை ஆகிய தலைப்புகளில் கட்டுரை எழுதுவேன். பொழுதுபோக்கு, ஆன்மிகம் கட்டுரைகள் அதிகமாக எழுதியுள்ளேன். புதுக்கவிதைகளும் எழுதி உள்ளேன்.



