இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆதிக்கத்தை சமன் செய்வதற்காக 2017 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அவர்களால் முறைசாரா கூட்டணியாக மீட்டெடுக்கப்பட்டதே ‘குவாட்’ (Quad) ஆகும். இந்தியா, ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இக்கூட்டணி, ஒரு “ஆசிய நேட்டோ” எனவும் கூறப்பட்டது.
ஜோ பைடன் நிர்வாகத்தின் கீழ் இந்த கூட்டணி உச்சிமாநாடு நிலைக்கு உயர்த்தப்பட்டாலும், இன்று இந்த கூட்டமைப்பின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்தியாவில் நடைபெறவிருந்த குவாட் உச்சிமாநாட்டை டிரம்ப் தவிர்க்கக்கூடும் என்ற செய்தி, முழு மாநாட்டின் மீதும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
குவாட் கூட்டணியின் மையத்தில் உள்ள சிக்கல், இந்தியா-அமெரிக்க உறவுதான். ஒரு காலத்தில் இந்த கூட்டணியின் அடித்தளமாக கருதப்பட்ட இந்த உறவு, தற்போது 21 ஆம் நூற்றாண்டில் மிக மோசமான நிலையை எட்டியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்தியா-பாகிஸ்தான் போருக்கு சில வாரங்களுக்கு பிறகு, பாகிஸ்தான் இராணுவ தளபதியை டிரம்ப் வெள்ளை மாளிகைக்கு வரவேற்றது போன்ற தூண்டும் நகர்வுகள் உறவுகளை சீர்குலைத்துள்ளன.
இந்தியா இதுவரை எதிர்கொண்டதில் மிக அதிகமான வரிகளை அமெரிக்கா விதித்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே ஒரு வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நிலையில், குவாட் அமைப்பின் அடித்தளம் தள்ளாட தொடங்குகிறது. குவாட் அமைப்பில் இந்தியா ஒரு பங்கேற்பாளர் மட்டுமல்ல, அது மைய புள்ளியாகும்.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட ஜனநாயக நாடு, நான்காவது பெரிய பொருளாதாரம் மற்றும் ஒரு இராணுவ வல்லமை கொண்ட நாடான இந்தியாவை இழப்பது குவாட் கூட்டணிக்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று அமெரிக்காவுக்கு அறிவுறுத்தப்பட்டது. குவாட் கூட்டணியில் இந்தியா இல்லாமல் போனால், இந்த கூட்டணி அதன் நம்பகத்தன்மை, வலிமை மற்றும் ஆழத்தை இழக்கும்.
அதிகாரத்தை தாண்டி, இந்தியா தான் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கான பார்வையை நிலைநிறுத்துகிறது. இந்தியாவின் பங்களிப்பு இல்லாமல், சீனாவின் லட்சியங்களை சமன் செய்வதும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்வதும் கடினம்.
சமீபத்திய சில நடவடிக்கைகள் டிரம்ப்பின் அமெரிக்கா, இந்தியாவுக்கு மறைமுகமாக சமிக்ஞை கொடுக்கிறதோ என்ற சந்தேகத்தை எழுப்புகிறது. நவம்பர் மாதம், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்ஸெட், ஜப்பான், ஆஸ்திரேலியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுடன் கோலாலம்பூரில் சந்தித்தார். இந்த சந்திப்பு கூட்டு இராணுவ பயிற்சிகளுக்கு முக்கியத்துவம் அளித்தது.
இந்தோ-பசிபிக் பாதுகாப்பு தலைவர்களின் ஒத்துழைப்பு கவுன்சிலுக்கான கட்டமைப்பை இந்த சந்திப்பு ஏற்படுத்தியது. இந்த நகர்வு, இந்தியாவை தவிர்த்து, குவாட் பாணியிலான ஒருங்கிணைப்பில் பிலிப்பைன்ஸுடன் அமெரிக்கா தீவிரமாக ஈடுபட தொடங்கியதை காட்டுகிறது. ஆனால், பிலிப்பைன்ஸால் இந்தியாவுக்கு இணையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க முடியாது என்பது தெளிவு.
2013 ஆம் ஆண்டு, அமெரிக்கா தனது கவனத்தை ‘ஆசிய-பசிபிக்’ என்பதிலிருந்து ‘இந்தோ-பசிபிக்’ பகுதிக்கு மாற்றியது. இந்திய பெருங்கடலின் முக்கியத்துவத்தையும், பிராந்திய ஸ்திரத்தன்மையை பேணுவதில் இந்தியா ஒரு சம பங்குதாரர் என்பதையும் இது அங்கீகரித்தது.
டிரம்ப் தான் இந்த ‘இந்தோ-பசிபிக்’ என்ற வார்த்தையை அமெரிக்காவின் அடித்தளமாக அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். இந்தியா இல்லையென்றால், இந்தோ-பசிபிக் இல்லை. இந்தோ-பசிபிக் இல்லையென்றால், நாம் அறிந்த குவாட் இல்லை.
இருப்பினும், டிரம்ப்பின் ‘அமெரிக்கா ஃபர்ஸ்ட்’ அணுகுமுறை இந்தியா-அமெரிக்க உறவுகளை அசைத்துள்ளது. இன்று இந்த இருதரப்பு உறவு பலவீனமடைந்தால், குவாட் கூட்டமைப்பால் அதன் முழு ஆற்றலை அடைய முடியாது. இந்தியாவின் சக்தி இல்லாமல், சீனாவுக்கு சமன்செய்யும் ஒரு சக்தியாக குவாட் அமைப்பால் செயல்பட முடியாது என்று அறிவுறுத்தப்பட்டாலும் டிரம்பின் பிடிவாதத்தால் குவாட் அமைப்பு அதன் வலிமையை இழப்பதாக சர்வதேச அரசியல் அறிஞர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
