நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்து தமிழ்நாடு அரசியல் மட்டுமல்லாமல், தேசிய அளவிலும் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில், திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான கூட்டணியில் நீடிக்கும் காங்கிரஸ் கட்சி, விஜய்யின் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி அவர்கள், விஜய்யின் ஆதரவுடன் ஒரே நேரத்தில் தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் ஆட்சியை பிடிக்கும் ஒரு மாஸ் திட்டத்தை வகுத்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்திய அரசியல் சூழல் குறித்த ஆய்வறிக்கைகளை ஆராய்ந்த பிரியங்கா காந்தி, விஜய்யின் ரசிகர்கள் மற்றும் அவரது சமூக திட்டங்களால் ஈர்க்கப்பட்ட பொதுமக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சியை சாதகமாக்கி கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.
தமிழ்நாடு : த.வெ.க.வின் தலைவர் விஜய், தமிழ்நாட்டில் திரையுலகின் மூலம் இளைஞர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கை பெற்றுள்ளார். குறிப்பாக, விஜய் தனது ரசிகர் மன்றங்கள் மூலம் செய்த மக்கள் நல பணிகள், அவரது அரசியல் நுழைவுக்கு ஒரு பலமான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்துள்ளன. காங்கிரசுடன் கூட்டணி அமைத்தால், இந்த இளைஞர் ஆதரவு மற்றும் புதிய கட்சி மீதான எதிர்பார்ப்பு அலை, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.வுக்கு எதிரான ஒரு மாற்று சக்தியாக உருவெடுக்க உதவும் என்று காங்கிரஸ் நம்புகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
கேரளா : கேரளா மாநில மக்கள் மத்தியில் தமிழ் சினிமாவுக்கு பெரும் வரவேற்பு உண்டு. குறிப்பாக, விஜய்க்கு கேரள மாநிலத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். த.வெ.க.வும், விஜய்யின் ரசிகர் மன்றங்களும் கேரளாவில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டால், கேரளாவில் ஒரு திருப்புமுனையாக அமைந்து, காங்கிரஸின் வெற்றியை உறுதிப்படுத்தலாம்.
புதுச்சேரி : சிறிய யூனியன் பிரதேசமான புதுச்சேரி, கலாச்சார ரீதியாகவும் மொழிரீதியாகவும் தமிழ்நாட்டுடன் நெருங்கிய பிணைப்பை கொண்டுள்ளது. எனவே, தமிழ்நாட்டில் விஜய்க்கு இருக்கும் அதே செல்வாக்கு புதுச்சேரியிலும் பிரதிபலிக்கும் என்பதால், இந்த மாநிலத்தில் உடனடியாக ஆட்சியை காங்கிரஸ் கைப்பற்றுவது எளிது என்று காங்கிரஸ் தலைமை கருதுகிறது.
ஆகவே, விஜய்யுடன் கைகோர்ப்பதன் மூலம், தமிழ்நாட்டு அரசியலில் ஒரு பெரிய மாற்றம் ஏற்படும்போது, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியிலும் இந்த அலை வெற்றியை தேடித்தரும் என்பதே பிரியங்கா காந்தியின் “ஒரே கல்லில் 3 மாங்காய்” திட்டம்.
இந்தத் திடீர் கூட்டணி குறித்து பிரியங்கா காந்தி அளித்த வியூக விளக்கங்களை புரிந்துகொண்ட ராகுல் காந்தி, இந்த திட்டத்திற்கு உடனடியாக ஒப்புதல் அளித்திருப்பதாக தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மத்திய அரசுக்கு எதிராக ஒரு புதிய வலுவான பிராந்திய கூட்டணித் தலைவர்கள் தேவைப்படும் நிலையில், விஜய்யின் இளம் தலைமை, தேசிய அளவில் காங்கிரஸுக்கு வலிமை சேர்க்கும் என்று ராகுல் காந்தி கருதுகிறார். எனவே த.வெ.க. மற்றும் காங்கிரஸ் கூட்டணி கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டு விட்டதாகவே அரசியல் பார்வையாளர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது.
வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி சுமார் 50 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்ய கோரியுள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் பட்சத்தில், காங்கிரஸின் சார்பில் ஒருவருக்கு துணை முதல்வர் பதவி அளிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளதாகவும், இதற்கு தமிழக வெற்றி கழகத்தின் தலைமை சாதகமாக பதிலளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அதேபோல் கேரளா, புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் தவெக நிர்வாகிகளுக்கு அமைச்சர் பதவி வழங்கவும் வாய்ப்பு உண்டு.
இந்த கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதி வடிவம் பெற்றால், தமிழக அரசியல் களத்தில் அது ஒரு மிக பெரிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை. விஜய்யின் அரசியல் நகர்வு, தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு ஒரு மிகப்பெரிய சவாலை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
