தமிழக அரசியல் இன்று ‘விஜய் மேனியா’ என்ற ஒற்றை சொல்லை சுற்றியே சுழல்கிறது. எந்தவொரு நடிகரின் அரசியல் பிரவேசத்துக்கும் இவ்வளவு ஆழமான, தொடர்ச்சியான கவனத்தை ஊடகங்கள் கொடுத்ததில்லை. நாளிதழ்களின் தலைப்பு செய்திகள் முதல் தொலைக்காட்சி விவாதங்கள் வரை, சமூக ஊடகப் பக்கங்கள் முதல் அரசியல் விமர்சகர்களின் கட்டுரைகள் வரை எல்லா இடங்களிலும் விஜய், விஜய், விஜய் என்றே எதிரொலிக்கிறது.
விஜய்யை பற்றி பேசாத ஊடகங்களும் இல்லை; விஜய்யை குறிப்பிட்டுப் பேசாத அரசியல்வாதிகளும் இல்லை. எதிர்க்கட்சியாகட்டும், ஆளுங்கட்சியாகட்டும், சிறிய கட்சியாகட்டும், ஏதோ ஒரு வகையில், விஜய்யின் அரசியல் பிரவேசம் ஒட்டுமொத்த தமிழக அரசியல் அமைப்பையும் இம்சித்துக்கொண்டிருக்கிறது. இதற்கு முன் எந்த நடிகருக்கும் கிடைக்காத ஒரு ‘கரிஷ்மா’ (Charisma) விஜய்க்கு இருக்கிறது.
விஜய் அரசியல் கட்சி தொடங்கிய நாள் முதலே, தமிழக வெற்றிக் கழகம் என்ற அவர் கட்சி, மற்ற பிரதான மற்ற எந்த புதிய கட்சிக்கும் இல்லாத அளவுக்கு, விஜய்யின் ஒவ்வொரு அசைவும், ஒவ்வொரு பேச்சும், ஒவ்வொரு மாநாடும் ஊடகங்களின் முதன்மை செய்தியாக மாறுகிறது. குறிப்பாக, கரூர் துயர சம்பவத்துக்குப் பிந்தைய அவரது அரசியல் ரீதியான மௌனமும், அதை தொடர்ந்து அவர் அளித்த விளக்கமும் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் பிரதிபலிப்புகளும் ஊடகவெளியை நிரப்பின.
ஆளுங்கட்சியான தி.மு.க., விஜய்யை “பா.ஜ.க.வின் ‘பி’ அணி” என்று விமர்சிப்பது, அ.தி.மு.க.வின் தலைவர்கள் அவரிடம் கூட்டணிக்கு தூது அனுப்புவது, சிறிய கட்சிகள் அவர் தனியாக போட்டியிடுவது தங்களுக்குச் சாதகமா, பாதகமா என்று கணக்கு போடுவது என, கூட்டணிக்கு வரலாமா? என காங்கிரஸ் தூது விடுவது, எப்படியாவது என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய்யை வரவைக்க வேண்டும் என பாஜக முயற்சிப்பது என எல்லா அரசியல் கட்சிகளுக்கும் விஜய் ஒரு மைய புள்ளியாக மாறியிருக்கிறார். இதுவே, அவர் அரசியல் களத்தை ஆதிக்கம் செய்கிறார் என்பதற்கான தெளிவான அறிகுறி.
தமிழக வாக்காளர்களில் சுமார் 20% பேர் 18 முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்கள். இவர்களை கவருவதில் விஜய் ஒரு இணையற்ற செல்வாக்கு செலுத்துகிறார். இவரது அரசியல் பார்வை, குறிப்பாக சமூக நீதி, மதச்சார்பின்மை, ஊழலுக்கு எதிரான நிலைப்பாடு ஆகியவை, பாரம்பரிய திராவிடக் கட்சிகளில் சலிப்படைந்த இளம் வாக்காளர்களுக்கு புதிய நம்பிக்கையைக் கொடுக்கிறது.
திரையில் அவர் ஏற்று நடிக்கும் கதாநாயகன் பிம்பம், ஊழலை எதிர்த்து போராடுபவராக, மக்களுக்காக துணை நிற்பவராக இருப்பதால், அவரது அரசியல் பிரவேசத்தையும் ரசிகர்கள் அதே கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர்.
விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் சுமார் 85,000க்கும் மேற்பட்ட ரசிகர்கள் மன்றங்களை உருவாக்கி, சமூக பணிகளில் ஈடுபடுத்தி, உள்ளாட்சி தேர்தல்களில் வெற்றிகளை குவித்ததன் மூலம், விஜய்யின் அரசியல் அடித்தளம் நன்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. திடீரென அரசியலுக்கு வந்த நடிகர் அல்ல இவர்.
அரசியல் ஆய்வாளர்கள் சொல்வது போல, விஜய் ஒரு அறிமுக அரசியல்வாதியாக இருந்தாலும், மற்ற நட்சத்திர அறிமுகங்களை விட சிறப்பாக செயல்பட முடியும். அவரது ஆரம்ப வாக்கு சதவீதம் 5 முதல் 10% வரை இருக்கும் என்று கணிக்கப்பட்டது, ஆனால் இப்போதோ 20 முதல் 30% விஜய் வாக்கு சதவீதத்தை பெறலாம் என்று கூறப்படுகிறது, இது தமிழக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த போதுமானது.
விஜய் தனிக்கட்சி தொடங்கி, தன்னை 2026-க்கான முதலமைச்சர் வேட்பாளராக அறிவித்ததில் அவரது இலக்கு அசாத்தியமான தெளிவாக உள்ளது. 2026 சட்டமன்ற தேர்தல், தி.மு.க. vs த.வே.க. என்ற இரு முனை போட்டியாகவே இருக்கும்” என்று அவர் அறிவித்துள்ளார். இதன் மூலம், அவர் அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. போன்ற பிற கட்சிகளை ஓரம் கட்ட முயல்வது தெளிவாகிறது.
கூட்டணி அரசியலின் சிக்கல்கள் இல்லாமல், தனி ஒருவராக போட்டியிடுவது, அல்லது தனது தலைமையின் கீழ் ஒரு கூட்டணி அமைப்பது என்பது வாக்காளர்கள் மத்தியில் ஆட்சியை கைப்பற்றத் துணியும் தலைவன் என்ற பிம்பத்தை உருவாக்க அவர் முயற்சிப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இது, தி.மு.க.வுக்கு எதிரான வாக்குகளை தன்னால் மட்டுமே அறுவடை செய்ய முடியும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்துகிறது.
தமிழக அரசியல் வரலாற்றில், திராவிட கட்சிகள் ஏற்படுத்திய பிளவை தற்போது நடிகர் விஜய்யின் வருகை நிகழ்த்தியுள்ளது. அவரது ஆளுமை மற்ற கட்சிகளுக்கு ஏற்படுத்தியுள்ள இம்சை, வெறும் பரபரப்பு அல்ல. அது வரவிருக்கும் தேர்தலின் மீது அச்சம் கலந்த எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
விஜய்யின் வாக்கு வங்கி, தி.மு.க., அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சிகளின் இளைஞர் மற்றும் அதிருப்தி வாக்குகளை குறிவைக்கிறது. இந்த வாக்குகள் பிரிந்தால், 2026-ல் தேர்தல் முடிவு மிக கடுமையான மாற்றங்களை காணும்.
எம்.ஜி.ஆர் 1977-ல் செய்ததை போல, இரு துருவ அரசியலை உடைத்து, தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்க வாய்ப்பிருக்கிறதா? என்பதுதான் இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.
விஜய் ஏற்படுத்தியிருக்கும் இந்த ஊடக மற்றும் அரசியல் அதிர்வலைகள், தமிழக மக்கள் மனநிலையில் ஒரு ஆழமான மாற்றத்தை கோரி நிற்கின்றன என்பதை உணர்த்துகிறது. இந்த ‘விஜய் மேனியா’வின் இறுதி விளைவு, 2026 தேர்தல் முடிவில் மட்டுமே தெரியும்!
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
