இந்திய வரலாற்றிலேயே இதுவரை இல்லாத வகையில், முப்படை கூட்டு போர் ஒத்திகை தற்போது இந்தியாவின் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற பெயரில் நடத்தப்படும் இந்த பிரமாண்ட ராணுவ பயிற்சியானது, பன்முகத் தாக்குதலுக்கு இந்தியா தயாராகி வருவதற்கான வலிமையான செய்தியை அண்டை நாடுகளுக்கு அளித்துள்ளது.
‘ஆபரேஷன் திரிசூலம்’ வெறும் தரைப்படை, கடற்படை மற்றும் விமானப் படை ஆகியவற்றின் ஒத்திகை மட்டுமல்ல. இது மல்டி-டொமைன் வார்ஃபேர் (Multi-Domain Warfare) எனப்படும், அனைத்து பரிமாணங்களையும் உள்ளடக்கிய ஒத்திகையாகும்.
தரை, கடல், வான், விண்வெளி, இணையவெளிமற்றும் தகவல் ஆகிய ஆறு களங்களிலும் ஒரே நேரத்தில் போர் ஒத்திகை நடத்தப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள பிகானர், ஜெய்சல்மர் போன்ற பாலைவன பகுதிகள் முதல், நாட்டின் மத்திய பகுதிகள் வரையிலும் இந்த பயிற்சி நடைபெறுகிறது. இந்தியா தற்போது விடுத்துள்ள நோட்டாம் (NOTAM – Notice to Airmen) அறிவிப்பு, போர் ஒத்திகையின் பரப்பளவை மேலும் விரிவாக்கியுள்ளது.
இதுவரை பாகிஸ்தான் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நடந்த ஒத்திகைகள் தற்போது இந்தியா-சீனா எல்லை, இந்தியா-பூட்டான் எல்லை, இந்தியா-மியான்மர் எல்லை, மற்றும் இந்தியா-பங்களாதேஷ் எல்லை ஆகிய நான்கு பகுதிகளுக்கும் விரிவடைந்துள்ளன.
நவம்பர் முதல் 2026 ஜனவரி வரை சுமார் மூன்று மாதங்களுக்கு இந்த ஒத்திகை தொடர உள்ளது. நவம்பர் 6 முதல் நவம்பர் 20 வரை ஆரம்பக்கட்ட பெரிய அளவிலான செயல்பாடுகள் இந்திய விமானப்படையால் முன்னெடுக்கப்படும். லடாக் பகுதியிலுள்ள உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு (LAC) போன்ற முக்கியமான இடங்களில் நடைபெறும் போர் ஒத்திகைகள், வடகிழக்கு மற்றும் கிழக்கு எல்லைகளை உள்ளடக்கியிருப்பதன் மூலம், இந்தியா எந்தவொரு தனிப்பட்ட அச்சுறுத்தலை மட்டும் எதிர்கொள்ளத் தயாராக இல்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி, சமீபத்திய கருத்தரங்கு ஒன்றில், நாட்டின் எதிர்கால பாதுகாப்பு சவால்கள் ‘கணிக்க முடியாதவை’ என்றும், அவை பன்முக பரிமாணங்களில் வரக்கூடியவை என்றும் எச்சரித்தார். ட்ரம்ப் போன்ற தலைவர்களின் எதிர்பாராத கொள்கைகள் மற்றும் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் பதட்டங்கள் காரணமாக, இந்தியாவிற்கு வரக்கூடிய அச்சுறுத்தல்கள் நிலம், வான், கடல் என மட்டுமில்லாமல், விண்வெளி மற்றும் இணையவெளியில் இருந்தும் வரலாம்.
குறிப்பாக, இணைய தாக்குதல்களால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா மூன்றாம் இடத்தில் உள்ளது. ஆகவே, எதிர்கால போர்களில் சைபர் தாக்குதல்களை சமாளிக்கும் திறனை ராணுவம் வளர்த்துக் கொள்வது அவசியம். இந்த போர் ஒத்திகையின் மூலம் இந்தியா தனது எதிரிகளுக்கு சொல்ல வரும் செய்தி மிகவும் தெளிவானது:
குறிப்பாக பாகிஸ்தானுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கை என்னவெனில் பயங்கரவாத தாக்குதல்கள் மீண்டும் நடந்தால், அது போர்ச் செயலாகவே கருதப்படும். வடக்கு எல்லையிலிருந்து மேற்கு மற்றும் தெற்கு எல்லைகள் வரை ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்த இந்திய ராணுவம் தயார் நிலையில் உள்ளது என்பதை காட்டுவது இதன் முக்கிய நோக்கமாகும். இது பாகிஸ்தானை ராணுவ ரீதியாக தொடர்ந்து விழிப்புடன் இருக்க செய்து, அவர்களின் வளங்களை வீணடிக்கும் ஒரு ‘வலுவான தடுப்புச் செயல்’ ஆகும்.
சீனாவை பொறுத்தவரை, நிலத்தில் மட்டுமல்லாமல், விண்வெளி மற்றும் இணையவெளியிலும், உயர்-தீவிர மோதல்களை கையாளும் திறன் இந்தியாவிடம் உள்ளது என்பதை தெளிவாகப் பதிவு செய்கிறது. சமீபகாலமாக வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானின் ராணுவ தளபதிகள் சந்திப்பது, சீனாவை மையப்படுத்தி ஒரு புதிய எதிர்ப்பு அணி உருவாகிறதோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது. வங்கதேச எல்லை பகுதியிலும் போர் ஒத்திகை நடத்தப்படுவது, இந்தியாவுக்கு எதிராக ஒரு ‘மூன்றாவது ரவுடி’ உருவாக முயற்சித்தால், அதை எப்படி சமாளிக்க முடியும் என்பதை காட்டும் ஒரு தெளிவான சைகையாகும்.
பூட்டான் மற்றும் மியான்மர் போன்ற நட்பு நாடுகளுக்கு, இந்த ஒத்திகை தாக்குதல் எந்த வித அச்சத்தையும் கொண்டிருக்கவில்லை என்றாலும், இந்தியாவை எதிர்த்து போரிடும் நாடுகளுக்கு தங்கள் பகுதிகளை பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்ற மறைமுக செய்தியை அளிக்கிறது.
இந்தியா இப்போது ‘தாக்குதல் மூலம் எதிரி தாக்குவதற்கு முன்பே அவர்களை தாக்கி முடக்கும் திறன் எங்களிடம் உள்ளது என்பதை இந்த முப்படை போர் ஒத்திகை உலகிற்கு உரக்க சொல்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
