உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர் சந்தையான சீனாவில், தங்கம் தொடர்பான நீண்டகால வரி சலுகையில் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது சீனாவில் தங்கத்தை வாங்கினாலும் வரி செலுத்த வேண்டும், விற்றாலும் வரி செலுத்த வேண்டும். இது சில்லறை தங்கத்தின் தேவையை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சீன அரசின் கட்டுப்பாட்டில் உள்ள சைனா கன்ஸ்ட்ரக்ஷன் வங்கி (CCB), தங்கத்தை வாங்கும் தனது கணக்கு திட்டங்களில் ஒன்றிற்கான புதிய விண்ணப்பங்களை ஏற்க போவதில்லை என்று அறிவித்தது. மற்றொரு பெரிய வங்கியான ஐசிபிசி (ICBC)-யும் புதிய வாடிக்கையாளர்களுக்கு தங்கக் கணக்கு வழங்குவதை கட்டுப்படுத்தியிருந்த நிலையில், சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த முடிவை திரும்பப் பெற்றது. இந்த வங்கிகளின் நடவடிக்கைக்கு, இரண்டு நாட்களுக்கு முன்னர் சீன அரசு வெளியிட்ட அறிவிப்பு பின்னணியாக உள்ளது.
சீனாவின் நிதி அமைச்சகத்தின் அறிவிப்பின்படி, நவம்பர் 1 முதல், ஷாங்காய் தங்க பரிவர்த்தனை (SGE) மற்றும் ஷாங்காய் ஃபியூச்சர்ஸ் பரிவர்த்தனை மூலம் செய்யப்படும் சில தங்கக்கொள்முதல்களுக்கு இருந்த 13% முழு மதிப்புக்கூட்டு வரி சலுகை, 6% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இதன் விளைவாக, தங்க விற்பனையாளர்கள் இனிமேல் SGE-இல் இருந்து வாங்கும் தங்கத்திற்கான மதிப்புக்கூட்டு வரியை ஈடு செய்ய முடியாது. அதாவது, முன்பு தங்கம் வாங்கும் போது வரியைக் கட்டி, விற்கும் போது வரி செலுத்தாமல் இருந்த நிலை மாறி, இனி விற்கும் போதும் வரி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது (இரண்டு முறையும் வரி கட்ட வேண்டும்). இந்த விதி நகைகள், நாணயங்கள், உயர் தூய்மையான கட்டிகள் அல்லது தொழில்துறை பொருட்கள் என அனைத்து வகையான தங்கத்திற்கும் பொருந்தும். முதலீட்டு தங்கமான கட்டிகளுக்கு மட்டும் இந்த வரி விலக்கு தொடரும்.
இந்த வரி மாற்றத்தால், தொழில்துறை மற்றும் நகை பயன்பாடுகளில் தங்க நுகர்வுக்கான செலவுகள் உயரும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த சூழல், உலகளவில் தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அக்டோபர் 20 அன்று அவுன்ஸ் தங்கம் $4,381 என்ற சாதனையை எட்டியிருந்த நிலையில், திங்கள்கிழமை அன்று அது $4,000-க்குக் கீழ் சுருங்கியது.
உலகின் மிகப்பெரிய தங்க நுகர்வோர்களாக இந்தியா மற்றும் சீனா இருப்பதால், சீனாவின் இந்த வரி மாற்றம் உலகளாவிய தங்க சந்தையில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். சீனாவில் தங்கத்தின் தேவை குறைந்து, உலகளாவிய தங்க விலைகள் குறைந்தால், இந்தியா மலிவான விலையில் தங்கத்தை இறக்குமதி செய்ய ஒரு வாய்ப்பை பெறும். இது இறக்குமதி செலவுகளை குறைத்து, ரூபாயின் மதிப்பை வலுப்படுத்தும்.
சீனாவில் வரி விலக்குகள் நீக்கப்படுவதால் அங்கு தங்கத்தின் விலை உயரக்கூடும். இது சில்லறை விற்பனையாளர்களையும் நுகர்வோரையும் இந்தியா, ஹாங்காங் அல்லது சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளின் சந்தைகளில் உள்ள விலை வேறுபாடுகளை ஆராய தூண்டும். இது சர்வதேச தங்க வர்த்தகத்திலேயே பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும்.
வரி விலக்கு நீக்கப்பட்டிருப்பது, புதிய வருவாய் ஆதாரங்களை தேடும் சீனாவின் பொருளாதார திட்டமாகப் பார்க்கப்பட்டாலும், இது குறுகிய காலத்தில் சில்லறை விற்பனை தேவையை குறைக்கும் என ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
