திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்த நடிகர் விஜய், இன்று ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற கட்சியை தொடங்கி, ஒரு புதிய அரசியல் சக்தியாக உருவெடுத்துள்ளார். அவரது இந்த அரசியல் பிரவேசம் திடீரென நிகழ்ந்ததல்ல; மாறாக, கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக கவனமாகக் கட்டப்பட்ட ஒரு வலுவான அரசியல் அஸ்திவாரத்தின் வெளிப்பாடாகும். விஜய்யின் அரசியல் பயணம், நீண்ட கால திட்டமிடல், உறுதியான மக்கள் சேவை மற்றும் இளைஞர்களின் முழு ஆதரவு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டது.
விஜய்யின் அரசியல் நகர்வுகள் வெகு காலத்துக்கு முன்பே தொடங்கின. அவர் முதலில் ரசிகர் மன்றங்களை தாண்டி, மக்கள் நல பணிகளில் கவனம் செலுத்த தொடங்கினார்.
குஜராத் நிலநடுக்கம் (2001): குஜராத்தில் ஏற்பட்ட கோரமான நிலநடுக்கத்தின்போது, நடிகர் விஜய் தனது ரசிகர் மன்றங்களை முடுக்கிவிட்டு, தெருத்தெருவாக சென்று பொதுமக்களிடம் நிதி திரட்டி பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பினார். சினிமா நட்சத்திரங்கள் விளம்பரத்திற்காக நன்கொடை அளிக்கும் காலத்தில், அவரே களத்தில் இறங்கி மக்கள் மத்தியில் நிதி திரட்டியது, அவரது பொதுச்சேவை மனப்பான்மையின் முதல் ஆழமான பதிவு ஆகும்.
விஜய் மக்கள் இயக்கம்’ என்ற மக்கள் நல அமைப்பை அவர் உருவாக்கினார். இது, தனது ஆதரவு தளத்தை அரசியல்மயமாக்குவதற்கான ஒரு தெளிவான தொடக்க புள்ளியாக அமைந்தது. இதன் மூலம் அரசியல் விழிப்புணர்வுடன் கூடிய சமூக பணிகளை திட்டமிட்டு செயல்படுத்த தொடங்கினார்.
சமூகப் பிரச்சினைகள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் எழுந்தபோது, விஜய் தயங்காமல் களத்தில் இறங்கி தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.குறிப்பாக மத்திய அரசின் பண மதிப்பிழப்பு (Demonetisation) விவகாரத்தின்போது, மக்களின் சிரமங்கள் குறித்து பேச அவர் தயங்கவில்லை. இது, அவர் ஒரு மாநில அரசியல்வாதியாக மட்டுமல்லாமல், தேசிய பிரச்சினைகளிலும் கவனம் செலுத்துவதை காட்டியது.
ஜல்லிக்கட்டு போராட்டம் நடந்தபோது, மெரினாவில் மக்கள் திரண்டிருந்த போராட்ட களத்திற்கு நேரடியாக சென்று அமைதியாக மக்களோடு மக்களாக அமர்ந்து ஆதரவு தெரிவித்தார். இது, மக்களின் உணர்வுகளுக்கு அவர் கொடுக்கும் முக்கியத்துவத்தை உலகறியச் செய்தது.
நீட் தேர்வால் தற்கொலை செய்துகொண்ட மாணவி அனிதாவின் வீட்டுக்கு சென்ற விஜய், எந்தவித ஆடம்பரமும் இல்லாமல் தரையில் அமர்ந்து அவரது குடும்பத்தினருடன் ஆறுதல் கூறினார். இந்த புகைப்படம், அவர் ஏழைகள் மற்றும் அடித்தட்டு மக்களின் உணர்வுகளுடன் தன்னை இணைத்துக்கொண்டதன் அழுத்தமான அரசியல் சமிக்ஞையாக மாறியது.
பா.ஜ.க. தரப்பிலிருந்து ‘மெர்சல்’ படத்தின்போது எழுந்த விமர்சனங்கள் மற்றும் அவரது மத அடையாளத்தை குறிப்பிட்டு ‘ஜோசப் விஜய்’ என்று அரசியல் ரீதியாக தாக்கப்பட்டபோது, அவர் எந்தவித தயக்கமும் இல்லாமல் தனது கட்சி லெட்டர்பேடில் ‘ஜோசப் விஜய்’ என்று தனது பெயருடன் கையெழுத்திட்டு பதிவு செய்தார். இது, அவரது எதிர்ப்புக்கு அரசியல் ரீதியாகவும், மதச்சார்பின்மை அடிப்படையிலும் தந்த தைரியமான பதிலடியாகும்.
தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத் தொகைகள் வழங்கியதன் மூலம், கல்வி மற்றும் இளைஞர்கள் மீதுள்ள தனது கவனத்தை தெளிவாகப் பதிவு செய்தார். இந்த நிகழ்வு, அவரது அரசியல் பிரவேசத்திற்கான பெரும் அடித்தளமாக அமைந்தது.
அரசியல் களத்தில் ‘மாற்றம் வேண்டும்’ என்று வாயளவில் பேசும் பலர், ஒரு புதிய சக்தி உண்மையில் களமிறங்கும்போது அதை ஏற்றுக்கொள்ளத் தயங்குகிறார்கள். விமர்சனங்களையும், எதிர்ப்புகளையும் காதில் போட்டுக் கொள்ளாமல் இருந்தால் மட்டுமே அரசியலில் நிலைக்க முடியும் என்ற யதார்த்தத்தை விஜய் நன்கு உணர்ந்துள்ளார்.
அவரது ஒவ்வொரு நகர்வும் விமர்சிக்கப்பட்டாலும், அவர் தனது செயல்பாடுகளை நிறுத்தவில்லை. மாறாக, இன்னும் வீரியமாகவே தனது அரசியல் பணிகளை தொடர்கிறார்.
அவரது அரசியலின் மிகப்பெரிய பலமே தமிழகத்தின் இளைஞர் சக்தியின் முழுமையான ஆதரவுதான். சமூக ஊடகங்களில் மட்டுமின்றி, களத்திலும் விஜய்யின் ரசிகர்கள் தீவிரமாக கட்சி பணிகளைச் செய்யத்தொடங்கிவிட்டனர். ஒரு புதிய அரசியலுக்காகவும், தமிழ்நாட்டின் மாற்றத்திற்காகவும் காத்திருக்கும் இளைஞர்களின் கனவை விஜய் பிரதிபலிக்கிறார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக அவர் அடித்தளம் இட்ட மக்கள் இயக்கம், இப்போது அரசியல் கட்சியாக மாறி நிற்பது, தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விஜய்யின் அரசியல் ஒரு தனி மனிதனின் விருப்பம் மட்டுமல்ல; அது மாற்றத்தை எதிர்பார்க்கும் ஒரு பெரிய இளைஞர் பட்டாளத்தின் கூட்டு சக்தியாக இன்று எழுந்து நிற்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
