தஜிகிஸ்தானில் ஒரு மர்மமான இந்திய வான்படை தளம்.. சத்தமில்லாமல் திடீரென வெளியேறியது ஏன்? நட்பு நாடான ரஷ்யா கூட இந்தியாவுக்கு எதிராக திரும்பியதா? வாஜ்பாய் ஆட்சியில் அமைந்த வான்படை தளம் கைவிட்டு போனது ஏன்? மோடியின் அடுத்த பிளான் என்ன? மத்திய ஆசியாவில் இந்தியா ஆதிக்கம் செலுத்துமா?

பல ஆண்டுகளாக நீடித்த ஒரு மர்மமான வான்படை தளம் சத்தம் இல்லாமல் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது பனிப்போர் காலத்து கதை அல்ல. இது இந்தியாவின் முதல் வெளிநாட்டு விமான தளத்தின் வரலாறு. இந்த…

ayni

பல ஆண்டுகளாக நீடித்த ஒரு மர்மமான வான்படை தளம் சத்தம் இல்லாமல் திடீரென வாபஸ் பெறப்பட்டுள்ளது. இது பனிப்போர் காலத்து கதை அல்ல. இது இந்தியாவின் முதல் வெளிநாட்டு விமான தளத்தின் வரலாறு.

இந்த தளம் மத்திய ஆசிய நாடான தஜிகிஸ்தானில் உள்ள அயினி (Aine) கிராமத்தில் அமைந்துள்ளது. சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு முன், அதாவது 2022-ஆம் ஆண்டில், இந்தியா இந்த விமான தளத்தை காலி செய்து வெளியேறிய தகவல் தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது. வெளியேறியபோது எந்த அறிவிப்பும் வெளியிடப்படாத நிலையில், சமீபத்தில் வெளியான அறிக்கைகளை தொடர்ந்து இந்திய அரசு இதை உறுதி செய்துள்ளது.

துஷான்பே நகரின் மேற்கே அமைந்துள்ள அயினி, கிஸ்ஸார் இராணுவ விமான தளத்தின் (GMA) இருப்பிடமாகும். 21-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்த இந்த தளத்தை, தஜிகிஸ்தானால் பராமரிக்க முடியவில்லை.

2001-ஆம் ஆண்டு வாக்கில், இந்தியாவின் அப்போதைய பாதுகாப்பு அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸ் மற்றும் தற்போதைய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரின் தீவிர ஆதரவின் பேரில், இந்த தளத்தை இந்தியா மறுசீரமைக்கும் திட்டத்தை முன்னெடுத்தது.

2002-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானதை தொடர்ந்து, இந்திய விமான படையும் எல்லை சாலை அமைப்பும் இந்த திட்டத்தை மேற்கொண்டன. வெளியுறவுத்துறை அமைச்சகம் சுமார் $100 மில்லியன் முதலீடு செய்தது.

2005-ஆம் ஆண்டுக்குள், 3,200 மீட்டர் நீளமுள்ள ஓடுபாதை உட்பட புனரமைப்பு பணிகள் நிறைவடைந்து, மத்திய ஆசியாவில் இந்தியா ஒரு செயல்படும் தளத்தை கொண்டிருந்தது.

இந்தியா இங்கு நிரந்தரமாக படைகளை நிலைநிறுத்தவில்லை என்றாலும், இரண்டு அல்லது மூன்று இராணுவ ஹெலிகாப்டர்களை இயக்கியது. இது Sukhoi Su-30 போன்ற போர் விமானங்களைக்கூட சில காலகட்டத்திற்கு நிலைநிறுத்த அனுமதித்தது.

அயினி தளத்தின் முக்கியத்துவம் அதன் வியூக ரீதியிலான இருப்பிடத்தில் இருந்தது. இது ஆப்கானிஸ்தான் மற்றும் சீனாவுடன் எல்லையை பகிர்ந்து கொள்வதுடன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீருக்கு அருகிலும் இருந்தது. இந்தத் தளம் இந்தியாவுக்கு சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது.

அதிகாரத்தை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பை அளித்தது. பாகிஸ்தானை தவிர்த்து மத்திய ஆசியா மற்றும் ஆப்கானிஸ்தானை அணுகும் பாதையை வழங்கியது. உதாரணமாக ஆகஸ்ட் 2021-இல் தலிபான்கள் காபூலை கைப்பற்றியபோது, நூற்றுக்கணக்கான இந்தியர்கள் வெளியேற்ற அயினி தளம் மிக பயனுள்ளதாக இருந்தது.

2021-இல் தஜிகிஸ்தான் அரசாங்கம், குத்தகை ஒப்பந்தம் நீட்டிக்கப்படாது என்று இந்தியாவிடம் தெரிவித்ததையடுத்து, 2022-ஆம் ஆண்டில் இந்தியா இந்த தளத்திலிருந்து வெளியேறியது. வெளியேற்றத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் பொதுவெளியில் இல்லை என்றாலும், சீனாவும் ரஷ்யாவும் இதில் முக்கிய பங்கு வகித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மத்திய ஆசியாவில் தங்கள் ஆதிக்கத்திற்காக போட்டியிடும் ரஷ்யா, சீனா ஆகிய இரு நாடுகளும் அந்த பகுதியை சாராத இந்திய படைகள் அயினியில் நிலைபெறுவதை விரும்பவில்லை. எனவே, தஜிகிஸ்தான் மீது அவை அழுத்தம் கொடுத்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

அடுத்த கட்டமாக ஈரானில் உள்ள சபஹார் துறைமுகம் வழியாக மத்திய ஆசியாவை அணுக இந்தியா சில திட்டங்களை கொண்டிருந்தாலும், இந்த அயினி சம்பவம், மத்திய ஆசிய பிராந்தியத்தில் இந்தியாவுக்கு சவால்கள் இருக்கும் என்பதை காட்டுகிறது. தொடர்ச்சியான ராஜதந்திர முயற்சிகள் மூலமே புதிய வாய்ப்புகள் திறக்கப்பட வேண்டும்.