உலகின் இரண்டு மிகப்பெரிய பொருளாதார மற்றும் அரசியல் வல்லரசுகளின் தலைவர்களான அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோரின் சந்திப்பு தென் கொரியாவில் நடைபெற்றது. ஆறு ஆண்டுகளுக்கு பிறகு நடந்த இந்த சந்திப்பு, இரு நாடுகளுக்கும் இடையே நீடித்து வரும் கடுமையான வர்த்தக போருக்கு தீர்வு காணுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
சாதாரணமாக இரண்டு நாட்டு தலைவர்களின் சந்திப்பு ஆடம்பரமான மாளிகையில் நடைபெறும் நிலையில், இந்த சந்திப்பு விமான நிலையத்தில் அரங்கேறியது பலருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
அமெரிக்காவுக்கு அரியவகை தாதுக்களை ஏற்றுமதி செய்ய சீனா தடை விதித்ததற்கு பதிலடியாக, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 130% வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்தது. இதனால், இந்த பேச்சுவார்த்தையே நடைபெறாமல் போகும் சூழல் நிலவியது.
தொடர்ச்சியான இந்த வர்த்தக மோதலால், அமெரிக்க பங்குச் சந்தை சுமார் 2 டிரில்லியன் டாலர் இழப்பை சந்தித்தது. மறுபுறம், அரியவகைத் தாதுக்கள் மீதான தடையால், பல உற்பத்தி நிறுவனங்கள் சீனாவில் இருந்து வெளியேறி வேறு நாடுகளில் தங்கள் தொழிற்சாலைகளை அமைக்க முடிவெடுத்தன.
நீண்ட காலத்துக்கு இந்த மோதல் இரு நாடுகளுக்கும் எந்த பலனையும் தராது என்பதை இரு தலைவர்களும் உணர்ந்ததாலேயே, தங்கள் பிடிவாதத்தை குறைத்து, அவசரமாக இந்த விமான நிலைய சந்திப்பை உறுதி செய்தனர்.
இந்த சந்திப்பை இந்தியா கூர்மையாகக் கவனித்து வருகிறது. ஏனெனில், அமெரிக்காவின் வர்த்தக கொள்கைகளால் இந்தியாவும் பாதிக்கப்பட்டிருந்தது. தற்போது சீனாவுடன் இந்தியா நேரடி விமான போக்குவரத்தை தொடங்கி நெருக்கம் காட்டும் வேளையில், இந்த ‘G2’ சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்காவுக்கு சீனாவும் இந்தியாவும் பொருளாதார ரீதியாக முக்கியமான நாடுகள். குறைந்த விலையில் அமெரிக்க மக்களுக்குப் பொருட்கள் கிடைப்பதற்குச் சீனா உதவுகிறது, அதே சமயம் இந்தியா தொழில்நுட்ப மற்றும் முதலீட்டுக்கு உதவுகிறது.
இந்தச் சந்திப்பு தற்காலிகமாக மோதல்களைத் தணிக்க உதவினாலும், அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான அடிப்படை அரசியல் கருத்து வேறுபாடுகள் ஒருபோதும் மறையாது என்பதே உலக அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக உள்ளது.
விமான நிலையத்தில் சிறிது நேரம் பத்திரிகையாளர்களை அனுமதித்த பிறகு, இரு தலைவர்களும் தனிப்பட்ட முறையில் மூடிய அறைக்குள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ட்ரம்ப், இந்த சந்திப்புக்குச் சற்று முன்பு, அணு ஆயுத சோதனைகளை நடத்தும்படி பாதுகாப்பு துறைக்கு அறிவுறுத்தியதாக அறிவித்து, தனது பலத்தை காட்டினார்.
இரு சக்திவாய்ந்த தலைவர்களும் தங்களுக்கு லாபமற்ற முடிவை எடுக்க மாட்டார்கள் என்பதால், வர்த்தகப் போருக்கு ஒரு சுமூகமான உடன்பாடு எட்டப்படலாம் என்று உலக நாடுகள் நம்புகின்றன.
இந்த மூடிய அறை பேச்சுவார்த்தையின் முடிவுகளும், முக்கிய ஒப்பந்தங்களும் இன்னும் சற்று நேரத்தில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
