தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யின் அரசியல் முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக கரூர் சம்பவம் நடந்த பிறகு அவரது பிம்பம் வட இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் பூதாகரமாக வளர்ந்துள்ளதாகவும் மூத்த பத்திரிகையாளர் டெல்லி ராஜகோபாலன் தெரிவித்துள்ளார். இது தி.மு.க.வுக்கு தகராறு, அ.தி.மு.க.வுக்கு ஆபத்து, பா.ஜ.க.வுக்கு பதற்றம் என மாறியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
டெல்லியில் உள்ள அமெரிக்க தூதுவரகம் மற்றும் ரஷ்ய அதிபருக்கு நெருக்கமான அதிகாரிகள் உட்பட சுமார் 15 முதல் 22 அயல்நாட்டுத் தூதுவர்கள் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை சந்திக்க விருப்பம் தெரிவித்து, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளிநாட்டு தூதுவர்கள் நேரடியாக ஒரு அரசியல் கட்சி தலைவரை சந்திக்க மத்திய அரசின் அரசியல் அனுமதி தேவைப்படும் நிலையில், இந்த சந்திப்புக்கான அனுமதியை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வழங்கியுள்ளதாக தெரிகிறது என்றும் டெல்லி ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
இந்தத் தூதுவர்களின் ஆர்வத்திற்கு காரணம், விஜய்யின் கட்சியினுடைய முதலீட்டு கொள்கை மற்றும் அயலுறவுக் கொள்கை என்ன என்பதை தெரிந்துகொள்வதே ஆகும். தமிழ்நாட்டில் ஃபாக்ஸ்கான் போன்ற தைவான் நிறுவனங்களின் முதலீடுகள் குறித்தும், கூகுள் போன்ற நிறுவனங்களின் முதலீடுகளை ஆந்திரப் பிரதேசம் தட்டி சென்றது குறித்தும் ஏற்படும் குழப்பமான சூழலில், எதிர்காலத்தில் விஜய் ஆட்சிக்கு வந்தால் அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள அவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.
இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கு நடந்தபோது, அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் விஜய்யின் எதிர்காலம் குறித்தும், தி.மு.க.வை எதிர்த்து அவர் செயல்படுவது குறித்தும் விவாதித்தது, டெல்லியில் அவரது முக்கியத்துவம் கூடியதை காட்டுகிறது.
காங்கிரஸின் முக்கியத் தலைவரான ராகுல் காந்தி, முதலமைச்சரின் அனுமதியுடன் பேசுவதாக கூறிக்கொண்டு, விஜய்யுடன் பேசுவது தி.மு.க.வின் முதுகில் குத்தும் செயல் என்றும், விஜய்யின் பிம்பம் வட இந்தியாவில் ராட்சசன் போல் பூதாகரமாக வந்துவிட்டதாகவும் டெல்லி ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
கரூர் சம்பவம் நடந்த பிறகு, ஊடகங்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விஜய்யின் நிலைப்பாடு, அரசியல் எதிர்காலம் குறித்து பெரும் விவாதம் எழுந்துள்ளது. இது தமிழக அரசியலை பிராந்திய அளவில் இருந்து தேசிய அரசியலை நோக்கி நகர்த்தியுள்ளது.
இலங்கை போன்ற அண்டை நாட்டு தூதுவர்கள், விஜய் கட்சியின் அயலுறவு கொள்கை குறித்தும், கச்சத்தீவு போன்ற உணர்வுபூர்வமான பிரச்சினைகள் குறித்தும், தமிழகத்தில் உள்ள திராவிடம், சனாதனம், இந்துத்துவா போன்ற பிரிவினைவாத கருத்துகள் குறித்து அவரது நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதையும் தெரிந்துகொள்ள ஆவலுடன் உள்ளனர் என்றும் டெல்லி ராஜகோபாலன் தெரிவித்துள்ளார்.
மொத்தத்தில், விஜய் என்ற ஒரு பிம்பம், தமிழ்நாட்டின் பிராந்திய அரசியலை தாண்டி, இந்திய மற்றும் சர்வதேச அரசியலின் கவனத்தை ஈர்க்கும் ஒரு மையப் புள்ளியாக உருவெடுத்துள்ளது என்று அவர் விவரித்தார்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
