தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒவ்வொரு மாவட்டத்திற்கு சென்று மக்கள் சந்திப்பை நடத்தி வந்தார். அப்படி அவர் கரூர் சென்றிருந்தபோது அவரைக் காண எதிர்பார்த்த அளவை விட கூட்டம் கூடியது. அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டு கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
அந்த சம்பவம் நடந்த போது விஜய் அங்கிருந்து கிளம்பி திருச்சி வந்து விமான மூலம் சென்னை வந்து விட்டார். தன்னை காண வந்த மக்கள் பாதிக்கப்பட்ட நேரத்தில் அவர்களின் குடும்பத்திற்கு ஆறுதல் கூட சொல்ல செல்லாமல் விஜய் சென்னை சென்று விட்டதை கையில் எடுத்த திமுக அவரை கடுமையாக விமர்சித்தது. விஜயையும் தவெக நிர்வாகிகளையும் கடுமையாக விமர்சனம் செய்ததோடு சமூக வலைதளங்களில் ட்ரோல் செய்தார்கள்.
கரூர் சம்பவம் விஜயின் மனதை மிகவும் பாதித்துவிட அவரின் அரசியல் நடவடிக்கைகளை அது முடக்கி போட்டது. அதோடு பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் சொல்ல அவர் நேரில் போகாததையும் பலரும் விமர்சனம் செய்து வருகிறார்கள். அதேநேரம், கரூருக்கு சென்று அங்கு ஒரு திருமண மண்டபத்தில் பாதிக்கப்பட்ட மக்களை வரவழைத்து விஜய் சந்திக்கும் ஏற்பாடுகள் நடந்தது. அதற்காக போலீசாரிடம் கோரிக்கைகளோடு தவெக சார்பில் அனுமதியும் கேட்கப்பட்டது. ஆனால் என்ன காரணமோ இப்போது வரை அது நடக்கவில்லை. இந்நிலையில்தான் இந்த விவகாரத்தில் ஒரு டிவிஸ்ட் ஏற்பட்டிருக்கிறது.
கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 41 குடும்பத்தினரையும் சென்னை வரவழைத்து ஒரு தனியார் அரங்கில் வைத்து விஜய் அவர்களை சந்திக்கும் ஏற்பாடுகள் நடந்து வருவதாக சொல்லப்படுகிறது. கண்டிப்பாக திமுகவினர் இதையும் கையில் எடுத்து அவரை விமர்சிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
