விஜய்யை விட்டுவிடக்கூடாது.. விஜய்யுடன் மாறி மாறி பேசும் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி? சோனியா காந்தியும் ஒப்புதலா? தவெக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தால் திமுக கூட்டணிக்கு சிக்கலா? என்னென்ன எல்லாம் நடக்கலாம்? அரசியல் வியூகர்களின் தகவல்கள்..!

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வு குறித்து தீவிரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான…

vijay rahul sonia

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கியுள்ள நிலையில், தேசிய அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நகர்வு குறித்து தீவிரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விஜய்யுடன் நேரடியாக தொடர்பில் இருப்பதாகவும், அவரை தங்கள் கூட்டணிக்குள் கொண்டு வரத் தீவிர முயற்சி செய்வதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழ்நாட்டில் காலூன்றவும், பிராந்திய அளவில் வலுப்பெறவும் காங்கிரஸுக்கு ஒரு புதிய முகம் தேவைப்படுகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, அக்கட்சி நீண்டகாலமாக திமுகவை சார்ந்தே செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில், விஜய்யின் வருகை காங்கிரஸுக்கு ஒரு அரிய வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.

ராகுல், பிரியங்கா உடனான பேச்சு: ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்தி ஆகியோர் விஜய்யுடன் அவ்வப்போது பேசி வருவதாக சொல்லப்படுகிறது. காங்கிரஸின் உயர்மட்ட தலைமை, விஜய்யை ஒரு மாற்று சக்தியாக பார்ப்பதோடு, அவரது அரசியல் பிரவேசம் தென் மாநிலங்களில் காங்கிரஸுக்கு புத்துயிர் அளிக்கும் என்று நம்புகிறது.

சோனியா காந்தி ஒப்புதல்: இந்த முயற்சிக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சோனியா காந்தியும் ஒப்புதல் அளித்துள்ளதாகவும், விஜய்யின் அரசியல் நகர்வுகள் உன்னிப்பாக கவனிக்கப்படுவதாகவும் டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, விஜய் காமராஜரை தனது கொள்கை தலைவராக அறிவித்துள்ளதும், சமூக நீதிகருத்துகளை பேசுவதும் காங்கிரஸுக்கு சாதகமான அம்சங்களாக பார்க்கப்படுகின்றன.

தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) – காங்கிரஸ் கூட்டணி சாத்தியமாகுமானால், தமிழ்நாட்டில் ஆளும் திமுக கூட்டணிக்கு இது மிகப்பெரிய சவாலாக அமையலாம் என அரசியல் வியூகர்கள் கூறுகின்றனர்.

தமிழக அரசியலில் சிறுபான்மையினர் மற்றும் சில குறிப்பிட்ட சமூகங்களின் வாக்குகளை காங்கிரஸ் பாரம்பரியமாக பெற்று வருகிறது. தற்போது திமுகவுடன் கூட்டணியில் இருக்கும் இந்த வாக்குகள், காங்கிரஸ் விஜய்யுடன் செல்வதன் மூலம் பிரிய வாய்ப்புள்ளது.

நடிகர் விஜய்-க்கு இருக்கும் இளைஞர்கள் மற்றும் முதல் தலைமுறை வாக்காளர்கள் மத்தியில் உள்ள பெரிய வரவேற்பு, காங்கிரஸ் கட்சியின் பாரம்பரிய வாக்காளர்களுடன் இணையும்போது, ஒரு வலுவான சக்தியாக உருவெடுக்க முடியும். இது திமுக-வின் வாக்கு வங்கியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

தற்போதைய திமுக கூட்டணி பாஜகவுக்கு எதிராக இருக்கும் வாக்குகளை ஈர்க்கும் சக்தியாக உள்ளது. ஆனால் த.வெ.க. – காங்கிரஸ் கூட்டணியால் இந்த வாக்குகளுக்கு பிரச்சானி உருவெடுக்கலாம். இது, தமிழக அரசியலில் இதுவரை ஆதிக்கம் செலுத்தி வந்த திராவிட கட்சிகளுக்கு ஒரு புதிய போட்டியை உருவாக்கும்.

அரசியல்அரசியல் வியூகர்களின் கூற்றுப்படி, இந்த கூட்டணியின் சாத்தியம் பல பரிமாணங்களில் ஆராயப்படுகிறது: விஜய் தற்போது வரை, தான் தனித்து போட்டியிடவே விரும்புவதாகவும், குறிப்பாக எந்த கட்சியுடனும் சாய்மானம் காட்ட போவதில்லை என்றும் கூறியிருக்கிறார். இது அவரது ஆரம்பக்கட்ட அரசியல் நிலைப்பாட்டைக் காட்டுகிறது.

வரவிருக்கும் தேர்தல்களில் காங்கிரஸின் சொந்த பலம் கேள்வி குறியாக இருக்கும் நிலையில், ஒரு பிராந்திய தலைவரான விஜய்யை நம்பி திமுக கூட்டணியை விட்டு வெளியேற காங்கிரஸ் தயக்கம் காட்டலாம். ஆனால், விஜய்யின் செல்வாக்கு பெரும் இடங்களை ஈட்டித் தரும் என்றால், காங்கிரஸ் தயங்காது.

தமிழக வெற்றிக் கழகம் ஒரு புதிய கட்சி. அதற்கு இன்னும் அமைப்பு ரீதியான பலம் உருவாகவில்லை. காங்கிரஸுடன் கைகோர்ப்பதன் மூலம், தமிழகம் முழுவதும் உள்ள காங்கிரஸின் உட்கட்டமைப்பு மற்றும் நிர்வாக பலத்தைப் பயன்படுத்திக் கொள்ள விஜய் கட்சிக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

மொத்தத்தில் த.வெ.க.வின் முதல் தேர்தல் களம்தான், அதன் உண்மையான பலத்தையும், அது எந்த பாதையில் செல்கிறது என்பதையும் தீர்மானிக்கும். ஆனால், விஜய்யை தங்கள் பக்கம் இழுக்க ராகுல், பிரியங்கா போன்ற தேசிய தலைவர்கள் ஆர்வம் காட்டுவது, தமிழக அரசியல் களத்தில் விஜய்யின் மதிப்பு எந்த அளவுக்கு உயர்ந்துள்ளது என்பதை காட்டுவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.