நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்கிற அரசியல் கட்சியை துவங்கி அரசியலுக்கு வந்து விட்டார். ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்து ஒதுங்கிய நிலையில், கமல் அரசியலுக்கு வந்து சரியான இடத்தை பிடிக்க முடியாத நிலையில் விஜய் அரசியலுக்கு வந்திருக்கிறார்.
கடந்த சில மாதங்களாகவே தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்திய விஜய் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சில மாவட்டங்களுக்கு சென்று மக்களை சந்தித்து பேசி வந்தார். அப்படி சில நாட்களுக்கு முன்பு அவர் கரூர் சென்றிருந்தபோது அவரைப் பார்க்க பல்லாயிரம் மக்கள் கூடியதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த சம்பவம் நாடெங்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விஜயின் அரசியல் நடவடிக்கைகளையும் முடக்கிப் போட்டது. இதற்கே விஜயே காரணம் என திமுகவினரும், போலீசார் சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை என தவெகவினரும் புகார் சொன்னார்கள்.
சில தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இன்னமும் விஜய் அதிலிருந்து மீளவில்லை. மீண்டும் அவர் எப்போது தனது அரசியல் பணிகளை துரிதப்படுத்துவார் என்பது தெரியவில்லை. ஒருபக்கம் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ‘கரூர் சம்பவத்திற்கு அரசே காரணம்.. அரசு சரியான பாதுகாப்பு கொடுக்கவில்லை’ என தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்.
அதோடு திமுகவை தோற்கடிக்க வேண்டும் என்றால் விஜய் அதிமுகவுடன் இணைய வேண்டும் என சில அதிமுக முன்னாள் அமைச்சர்களை பேச தொடங்கி விட்டனர். விஜயை கூட்டணிக்குள் இழுக்கும் முயற்சியில் அதிமுக, பாஜக போன்ற கட்சிகள் ஈடுபட்டிருப்பதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது. விஜய் என்ன முடிவெடுப்பார் என தெரியவில்லை.
இந்நிலையில் இன்று செய்தியாளரிடம் பேசிய அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ‘சுவை கண்ட பூனை போல விஜயிடம் கூட்டணி வைக்க ஆசைப்படுகிறார்கள். தொடர்ந்து அவரை கூட்டணிக்கு அழைக்கிறார்கள். பழனிச்சாமியை முதல்வராக்கவே விஜய் பல கோடி வருமானத்தை விட்டு அரசியலுக்கு வந்தார். இந்த தேர்தலில் பழனிச்சாமி தோற்கடிக்கப்படுவார்.. வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்பதற்கு ஏற்ப பழனிச்சாமி வினையை அனுபவிப்பார்’ என காட்டமாக பேசியிருக்கிறார்.
