தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. கடந்த சில நாட்களாகவே தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் பல மாவட்டங்களுக்கும் பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறையும் அளிக்கப்பட்டது.
ஏற்கனவே தீபாவளி காரணமாக கடந்த வாரம் சனிக்கிழமை முதல் இந்த வார செவ்வாய் கிழமை வரை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. மழை காரணமாக கடந்த புதன் கிழமை அதாவது 22ம் தேதியும் விடுமுறை கிடைத்தது.
கடந்த 2 நாட்களாக தமிழகத்தில் பெரிதாக மழை இல்லை. ஒருபக்கம், வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தீவிரமாக வலுப்பெற்று தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயலாகவோ மாறும் என ஏற்கனவே வானிலை மையம் அறிவித்தது. அதனால் தமிழ்நாட்டில் பல மாவட்டங்களிலும் அதிக மழை பெய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. எனவே எதிர்பார்த்த மழை பெய்யவில்லை.
மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் அந்த புயல் மேற்கு திசையில் நகர்ந்து வலுவடையும் என வானிலை மையம் அறிவித்தது.
இந்நிலையில், இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று வருகிற 27ம் தேதி புயலாக மாறும் என இந்திய வானிலை மையம் தற்போது அறிவித்திருக்கிறது. இந்த புயலுக்கு மோன்தா ( Montha) என பெயரிடப்பட்டிருக்கிறது. இந்த புயலால் சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் வருகிற 27ம் தேதி கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதோடு வேறு சில மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
