இந்திய பங்குச்சந்தைகள் தற்போது தீபாவளி பண்டிகையின் உற்சாகத்தை போலவே உச்சத்தை நோக்கி சீறிப் பாய்ந்து கொண்டிருக்கின்றன. பட்டாசுகளை போல ஒரே திசையை நோக்கி, அதாவது ஏற்றத்தை நோக்கி பங்குச்சந்தைகள் பயணிப்பது முதலீட்டாளர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தரவுகளின்படி, பங்குச்சந்தைகள் அடைந்துள்ள அசுர வளர்ச்சியும், அதற்கான முக்கிய காரணிகளும் என்ன என்பதை பார்ப்போம்.
சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி குறியீடுகளின் அண்மைக் காலச் செயல்பாடு பிரமிக்க வைக்கிறது. செப்டம்பர் மாத இறுதியில் சுமார் 80,000 புள்ளிகளில் வர்த்தகமான சென்செக்ஸ், இப்போது 84,400 புள்ளிகளை தாண்டியுள்ளது. இதன் மூலம், வெறும் 20 நாட்களில் சென்செக்ஸ் 4,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இது அதன் வரலாற்று உச்சத்தை அடைய இன்னும் 1,500 புள்ளிகள் மட்டுமே உள்ளது.
இதேபோல், அக்டோபர் மாதம் தொடங்கியபோது 24,800 புள்ளிகளில் வர்த்தகமான நிஃப்டி, தற்போது 25,800 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்துள்ளது. இது அக்டோபர் மாதத்தில் மட்டும் 1,000 புள்ளிகளுக்கு மேல் கிடைத்த அபாரமான உயர்வாகும்.
சந்தையில் ஏற்பட்ட இந்த திடீர் எழுச்சி, பல மாதங்களாக நிலவிய மந்த நிலைக்கு பிறகு, இந்தியச் சந்தையில் ஒரு புதிய ஏற்றம் என்ற காளை பாய்ச்சல் தொடங்கிவிட்டதாக பங்குச்சந்தை நிபுணர்கள் கருதுகின்றனர்.
இந்த ஏற்றத்திற்குப் பின்னால் உள்ள 3 முக்கியக் காரணங்கள் முக்கியமானவை.
1. நுகர்வோர் நம்பிக்கையின் எழுச்சி:
தீபாவளி பண்டிகை காலத்தில் இந்திய நுகர்வோர் புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளனர். இந்த சீசனில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்காக சுமார் 6800 கோடி டாலர் செலவிடப்பட்டுள்ளது. இது இந்திய வரலாற்றில் ஒரு வர்த்தக சாதனையாகும். இந்த அதிகப்படியான செலவு, கார் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களை விற்கும் இந்திய நிறுவனங்களுக்குப் பெரும் ஊக்கத்தை அளித்துள்ளது. நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து, பங்குகள் மீதான முதலீட்டாளர்களின் நம்பிக்கையை இது உயர்த்தியுள்ளது.
2. எதிர்பார்ப்புகளை மிஞ்சிய நிறுவன வருவாய்
இந்த வார இறுதியில் பல முக்கிய இந்திய நிறுவனங்கள் தங்கள் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளன. அதில் சில முன்னணி நிறுவனங்களின் செயல்பாடு சிறப்பானதாக அமைந்துள்ளது. குறிப்பாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3.5% உயர்வு கண்டன. பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 2.9% வரை உயர்ந்தன. இதுபோன்ற அதிக சந்தை மதிப்புகளை கொண்ட நிறுவனங்களின் சிறப்பான செயல்பாடு, ஒட்டுமொத்த சந்தைக் குறியீடுகளையும் மேல்நோக்கி இழுத்து சென்றுள்ளது.
3. வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் மறுபிரவேசம்
பங்குச்சந்தை ஏற்றத்திற்குக் காரணமாக இருக்கும் மூன்றாவது மற்றும் மிக முக்கியமான காரணம், வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் வருகை. 2025 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் ரூ. 2 லட்சம் கோடிக்கு மேல் வெளிநாட்டு முதலீடுகள் இந்தியாவிலிருந்து வெளியேறின. இந்திய சந்தை அதிக விலையில் மதிப்பிடப்பட்டதாக அவர்கள் உணர்ந்ததால், வேறு சந்தைகளுக்கு மாறிச் சென்றனர். ஆனால், அக்டோபர் மாதத்தில் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. FII-கள் நிகர வாங்குபவர்களாக மாறியுள்ளனர். அதாவது, விற்றதை விட அதிகமான பங்குகளை வாங்கியுள்ளனர். எவ்வளவு தெரியுமா? கிட்டத்தட்ட ரூ. 7,300 கோடிக்கு பங்குகளை வாங்கியுள்ளனர்.
இதற்கு முன் கடந்த 3 மாதங்களில் மட்டும் FII-கள் சுமார் ரூ. 76,000 கோடி மதிப்பிலான பங்குகளை விற்றிருந்த நிலையில், அக்டோபரில் இந்த மாற்றம் ஏற்பட்டிருப்பது, அவர்கள் இந்திய சந்தை பக்கம் மீண்டும் திரும்பிவிட்டதை காட்டுகிறது.
FII-கள் திரும்பி வந்ததற்குக் காரணம், இந்தியாவின் வலுவான பேரியல் பொருளாதார நிலைத்தன்மையே ஆகும். பணவீக்கம், வளர்ச்சி மற்றும் வர்த்தகம் ஆகிய மூன்று முக்கிய விஷயங்களில் இந்தியா சிறப்பாக செயல்படுகிறது.
அமெரிக்கா விதித்துள்ள 50% வரி உட்பட பல சவால்கள் இருந்தபோதிலும், இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட 7% அதிகரித்து, $36 பில்லியனை எட்டியுள்ளது. இதற்கு காரணம், வர்த்தக பல்வகைப்படுத்தல். அமெரிக்காவில் ஏற்பட்ட பற்றாக்குறையை போக்க, ஆஸ்திரேலியாவிற்கு கடல் உணவுகளை ஏற்றுமதி செய்வது, ஆப்பிரிக்காவிற்கு மருந்து பொருட்களை அதிகரிப்பது, லத்தீன் அமெரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் புதிய பங்காளர்களைத் தேடுவது போன்ற நடவடிக்கைகளால் இது சாத்தியமானது.
ஐக்கிய அரபு அமீரகம், ஜெர்மனி, எகிப்து, கென்யா, பிரேசில் மற்றும் இத்தாலி உட்பட 24 நாடுகளுக்கு இந்தியாவின் ஏற்றுமதி செப்டம்பரில் விரிவடைந்துள்ளது. பிரிட்டனுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒப்பந்தத்திற்கான பணிகள் நடைபெறுவது, இந்த வர்த்தக நிலைத்தன்மைக்கு மேலும் வலு சேர்க்கும்.
செப்டம்பர் மாதத்தில் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 1.54% ஆக குறைந்துள்ளது. இது கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத மிக குறைந்த அளவாகும். பணவீக்க விகிதம், வர்த்தக சூழல் மற்றும் கொள்கை நிலைத்தன்மை ஆகியவற்றை முதலீட்டாளர்கள் கவனமாக ஆய்வு செய்த பின்னரே முதலீடு செய்வார்கள். இந்த மூன்று அம்சங்களும் தற்போது இந்தியாவில் சாதகமாக உள்ளதால், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மீண்டும் இந்தியாவைத் தேடி வருகின்றனர்.
இந்த சாதகமான சூழல் தொடருமா? என்பதே முதலீட்டாளர்களின் அடுத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
