உலக அரங்கில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே செயற்கை நுண்ணறிவு உள்பட ஒட்டுமொத்த தொழில்நுட்ப துறையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்த ஆட்டத்தில் சீனா முன்னணியில் இருக்க சில வரலாற்று மற்றும் கட்டமைப்பு ரீதியான காரணங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்பே சீன பல்கலைக்கழகங்கள் கணித கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து, அதை தொடர்ச்சியாக கற்பிக்க ஆரம்பித்தன. இதன் விளைவாக, உலகளவில் சீன மாணவர்கள் கணிதத்தில் சிறந்து விளங்குகிறார்கள்.
பீஜிங்கில் உள்ள சிங்குவா பல்கலைக்கழகம் கணினி அறிவியல் துறையில் உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக உள்ளது. இங்கு மட்டும் ஒரு துறையில் 800-க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் உள்ளனர். இது அமெரிக்காவின் MIT போன்ற முன்னணி நிறுவனங்களை விட சிறந்தது.
அமெரிக்காவில் பிஎச்.டி. முடித்த சீன பேராசிரியர்கள் மீண்டும் தங்கள் நாட்டுக்கு திரும்பி, அங்கு ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கி, புதிய தயாரிப்புகளை உருவாக்கி, காப்புரிமை பெற்று, அதே சமயம் பல்கலைக்கழகத்திலும் பாடம் நடத்துகின்றனர். இந்த அணுகுமுறை சீனத் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு முக்கிய காரணம்.
அமெரிக்கா, சிப் தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் சீனாவை தடுக்க பல தடைகளை விதித்தாலும், சீனா தொடர்ந்து புதிய சர்ப்ரைஸ் தயாரிப்புகளுடன் வருகிறது. கூகுள், மெட்டா, ஓபன்ஏஐ போன்ற அமெரிக்க நிறுவனங்களில் கூட, முக்கிய பொறியாளர்களாக சீனர்கள்தான் இருக்கின்றனர்.
சீனாவின் தயாரிப்பு திறன், சந்தைப்படுத்தல் மற்றும் விநியோக சங்கிலி ஆதிக்கம் மிகவும் அபாரமாக உள்ளது. $10,000 டாலருக்கு (ரூ.8.3 லட்சம்) கீழ் ஒரு தரமான எலக்ட்ரிக் காரை உருவாக்க சீனாவால் மட்டுமே முடியும். இதை அமெரிக்காவில் செய்ய $75,000 வரை செலவாகும்.
டேமு போன்ற இணையதளங்கள், உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக மொத்தமாக பொருட்களை வாங்கி, மிக குறைந்த விலைக்கு பல நாடுகளுக்கு (அமெரிக்கா மற்றும் ஐரோப்பா உட்பட) விற்பனை செய்கின்றன. இதனால்தான் அமெரிக்காவில் $200 மதிப்புள்ள காலணி, டேமுவில் $10-க்கு கிடைக்கிறது.
இந்த சீன வணிக மாதிரி, உள்ளூர் உற்பத்தியை அழித்துவிடும் என்ற அச்சத்தால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் டேமு போன்ற தளங்களை தடை செய்வது குறித்து பேசும் அளவுக்கு நிலைமை மாறியுள்ளது. சீனாவால் மட்டுமே மொத்த உற்பத்தியையும் விநியோகத்தையும் திறம்பட செய்ய முடிகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
