அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் பாதுகாப்பு தொடர்பாகப் பாம் பீச் பகுதியில் ஒரு புதிய சலசலப்பு ஏற்பட்டுள்ளது. ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கும் பகுதிக்கு அருகில், விமான நிலையத்தை பார்க்கக்கூடிய இடத்தில் மர்மமான முறையில் அமைக்கப்பட்டிருந்த வேட்டை மேடை ஒன்றை பற்றி FBI தற்போது விசாரித்து வருகிறது.
ட்ரம்ப் ஃபுளோரிடாவில் உள்ள விமான நிலையத்திற்கு வந்திறங்குவதற்கு ஒரு நாள் முன்னதாக, பாம் பீச் பகுதியில், ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கும் தளத்தை நேரடியாக பார்க்கக்கூடிய உயரத்தில் பறவைகளின் கூடு வடிவத்தில் இந்த வேட்டை மேடை இருப்பது அமெரிக்க ரகசிய சேவை படையால் கண்டுபிடிக்கப்பட்டது. சாதாரணமாக பார்ப்பதற்கு பறவைகளின் கூடு போல் இருக்கும் இந்த இடத்தில் ஒரு ஆள் ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகளும் ஒளிந்து கொள்ளும் அளவுக்கு இருந்திருக்கிறது.
“அதிபர் மேற்கு பாம் பீச்சுக்குத் திரும்புவதற்கு முன்பு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானம் தரையிறங்கும் பகுதியை பார்க்கக்கூடிய உயரத்தில் ஒரு வேட்டை மேடை இருப்பதை கண்டறிந்தோம். அந்த இடத்தில் யாரும் இல்லை. FBI உடனடியாக விசாரணைக்கு தலைமை தாங்கி, அங்கிருந்த ஆதாரங்களை சேகரிக்க நிபுணர்களை வரவழைத்ததுடன், செல்போன் பகுப்பாய்வு திறன்களையும் பயன்படுத்தியுள்ளது,” என்று FBI இயக்குநர் காஷ் படேல் ஃபாக்ஸ் நியூஸ் டிஜிட்டலிடம் தெரிவித்தார்.
அந்த மேடைக்கும் எந்தவொரு தனிநபருக்கும் தொடர்பு இருப்பதாக இதுவரை கண்டறியப்படவில்லை.
ரகசிய சேவை படையின் செய்தித் தொடர்பாளர் அந்தோனி குக்லியெல்மி கூறுகையில், “எந்தவொரு நடவடிக்கையும் இதனால் பாதிக்கப்படவில்லை. சம்பவ இடத்தில் யாரும் இருக்கவில்லை,” என்றும், “பல அடுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை இந்தச் சம்பவம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது” என்றும் குறிப்பிட்டார்.
இந்த வேட்டை மேடை பல மாதங்களுக்கு முன்பே அமைக்கப்பட்டிருக்கலாம் என்று மற்றொரு சட்ட அமலாக்க வட்டாரம் கூறியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
